பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இம்மலையின் மேற்குச் சரிவிலும், அவுட்டர்லானி பள்ளத்தாக்கிற்கு (Ouchterlony valley) மேலும், தென்சரிவிலும், சுவர்களைப் போன்ற, நூற்றுக் - கணக்கான அடிகள் உயரமுள்ள பாறைகள் நிறைந்துள்ளன. மரங்கள்கூட வேர் ஊன்ற முடியாத அளவு அவைகள் செங்குத்தாக உள்ளன. மற்ற இடங்களில் உள்ள சரிவுகளிலெல்லாம், அடர்ந்தகாடுகள் நிறைந்துள்ளன.

நீலகிரி மலையானது நடுவில் தென்வடலாகச் செல்லும் உயர்ந்த ஒரு தொடரால் கிழக்குப் பகுதியாகவும் மேற்குப் பகுதியாகவும் பிரிக்கப்படுகிறது. அத்தொடரில் உள்ள உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா ஆகும். தொட்டபெட்டா என்றால் 'பெருமலை' என்று பொருள். இச்சிகரம் உதகமண்டலத்திற்குக் கிழக்கே அமைந்துள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி. நம் நாட்டில் இமயமலைக்குத் தெற்கிலுள்ள மலைகளில், திருவாங்கூரிலுள்ள ஆனை முடி சிகரத்திற்கு (8837 அடி) அடுத்தாற்போல் உயரமானது தொட்டபெட்டா சிகரம்தான். இச் சிகரத்தின் மேல், முன்பு வானாய்வுக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. உதகமண்டலத்திலிருந்து தொட்டபெட்டாவின் அழகைப் பூரணமாக அனுபவிக்க முடியாது. கிழக்குப் பகுதியிலோ அல்லது மேற்குப் பகுதியிலோ இருக்கும் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து இச் சிகரத்தைக் காணின் மிகவும் அழகாகத் தோன்றும்.

தொட்டபெட்டா மலையின் கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் உள்ள பீடபூமிகள் பெரும்பாலும் கூனூர் கோட்டத்திலேயே அமைந்துள்ளன. அங்கு வாழும் படகர்கள் அப்பீட பூமிகளில் பயிர்த் தொழில் செய்து வாழ்கின்றனர். இவர்கள் அங்கிருந்த காடுகளில் பெரும்பகுதியை அழித்து விட்டனர். எங்கு பார்த்தாலும் செந்நிற ஓடுகவித்த படகர்களின் குடிசைகளடங்கிய சிற்றூர்களே தோன்றும். இப்படகர்கள்