பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

பெறப்பட்டதாகும். சமாதிகளெல்லாம் நில மட்டத்திற்குக் கீழே அடுக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ளன, கோயிலின் வளர்ச்சிக்குதவிய நன்கொடையாளர்களின் பெயர்கள் சட்டமிட்ட தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விடுகாட்டின் நடுவில் நாட்டப்பட்டிருக்கும் சிலுவை, ஏசு நாதரின் சிலையோடு அழகுடன் விளங்குகிறது. அச்சிலை வெண்கலத்தால் ஆனது; சிற்பக் கலைவளம் செறிந்தது.

இச்சிலுவை சக்தி வாய்ந்ததாகவும், கேட்டோருக்குக் கேட்ட வரம் நல்கும் பெற்றியுடையதாகவும், தெய்வத் தன்மை மிக்கதாகவும் எல்லாராலும் கருதப்படுகிறது. இச்சிலுவை பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இச்சிலுவையில் அடிக்கப்பட்டிருந்த பித்தளை ஆணிகளை மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஒரு நாள் திருடிக் கொண்டு செல்ல முயன்றனராம். ஆனால் அவைகளைப் பிடுங்க முடியாமல் வீடு சென்றனர். வீடு சென்றதும் அச்சிறுவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு வருந்தினராம். உண்மையறிந்த பெற்றோர்கள் சிலுவையின் முன் மண்டியிட்டு வணங்கித் தம் சிறுவர்களின் அறியாமையை மன்னிக்குமாறு வேண்டினர். பிறகு அச் சிறுவர்கள் பிழைத்தெழுந்தனர். கி. பி. 1935-ஆம் ஆண்டு சமவெளியில் வாழ்ந்த ஏழெட்டுப் பேர்களடங்கிய ஒரு குடும்பம் இச்சிலுவையைக் கண்டு வணங்கக் கண்டலுக்கு வந்திருந்ததாம். மிகவும் குளிரான அச் சமயத்தில் போர்த்துக் கொள்ளப் போர்வைகள் கூட கொண்டுவர வில்லையாம். சிலுவைக்கெதிரிலுள்ள பந்தலில் அவர்களைக் கண்ட பாதிரியார், குளிரின் கொடுமையைப் பற்றிக் கூறி, தக்க பாதுகாப்போடு இல்லாவிட்டால் இறக்க நேரிடும் என்றுகூடச் சொன் னாராம். ஆனால் அக் குடும்பத்தார் பாதிரியாரை நோக்கி, "ஐயரே! ஏசு பெருமான் பனியில் நனைந்து குளிரால் வருந்தும்போதும், நாங்கள் மட்டும் ஏன்