பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. குறிஞ்சி

மங்கையரின் சிரிப்பொலியோடு போட்டியிட்டு மலையிலிருந்து இழிந்துவரும் குற்றால நீர்வீழ்ச்சியில் மூழ்கியபோதும், உதகமண்டலத்தைச் சுற்றிப் பரவியுள்ள கண்கவரும் இள மரக்காட்டில் கவலையின்றிச் சுற்றித் திரிந்தபோதும், அணியிழை மகளிர் ஆடவர் புடைசூழக் கோடைக்கானல் ஏரியில் தோணியூர்ந்த காட்சியை நேரில் கண்டபோதும், புரட்சிக் கவிஞன் தமிழகத்தை வாழ்த்திப் பாடிய தெள்ளு தமிழ்ப்பண், தென்றல் இவர்ந்து என் செவிப்பறையில் மோதியது.

புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவி
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு!”

இப்பாடல், எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாமல் தித்திக்கும் கொல்லித்தேன். “மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடாமோ?” என்ற மறத்தமிழன் கூற்றுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு! இன்றமிழ் நாட்டின் இயற்கை வளத்தை எழில் நலத்தோடு கூட்டி, நம் கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தும் படப்பிடிப்பு அன்பொடு இயைந்த காதல் வாழ்வை அணிபெறப் பொதிந்து வைத்த