பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நட்பு

211



4.நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

நட்புச் செய்தல் ஒருவரோடொருவர் எள்ளி நகையாடுதற் பொருட்டு அன்று; தன் நண்பரின் அளவுக்கு மீறிய நடத்தையைக் கண்டால், கண்டித்து அறிவுரை கூறி திருத்துவதற்கே ஆகும்.

மிகுதி-அளவுக்கு மீறிய நடத்தை; அஃதாவது பழியும் பாவமும் விளையத் தக்க பொருந்தாச் செயல்கள்; மேற்சென்று-முன்னதாகச் சென்று; இடித்தல்-கண்டித்துக் கூறுதல். 784

5.புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

நட்பாவதற்குப் பலப்பல நாட்கள் சேர்ந்து பழகுதல் வேண்டா; ஒரு நாள் கண்டாராயினும், அன்றிக் காணாமலேயே ஒருவருக்கொருவர் குண நலம் அறிந்திருந்தாராயினும் அமையும். அவ்விருவர் தம் ஒத்த உணர்ச்சி மட்டும் இருந்து விட்டால், அந்த உணர்ச்சியே அவர்கட்கு நட்பாகிய உரிமையை உண்டாக்கும்.

புணர்ச்சி பழகுதல்-சேர்ந்து பலப்பல நாட்கள் பழகுதல்; உணர்ச்சி-அறிவு அல்லது எண்ணம்; கிழமை-உரிமை.

குறிப்பு: கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் நட்பு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 785

6.முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

ஒருவர் முகத்தைக் கண்டு மற்றொருவர் சிரித்து மகிழ்வது மட்டும் நட்பாகாது. அவர்கள் இருவரும் உள்ளத்தோடு உள்ளம் கலந்து உறவாடி மகிழ்வதே நட்பாகும். 786

7.அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழைப்பதாம் நட்பு.

நண்பன் கேட்டினைத் தரும் தீய வழிகளில் செல்லும் போது அந்த வழிகளிலிருந்து அவனை விலக்கி, நல்ல வழியில் செலுத்தி, அவன் துன்பப்படும் போது தானும் துன்பப்படுவதே நட்பாகும்.