பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


சம்பந்தப் பெருமான் 'உளங் குளிர்ந்த போதெலாம் உகந்து உகந்து உரைப்பனே’ (திருமுறை. 2.98.9) என்று கூறிச்செல்கிறார். இந்தக் கருத்தை மனத்துட்கொண்டு இப்பாடலின் முதலடியை மறுபடியும் சிந்திக்க வேண்டும். ‘யாம் பாட’ என்று அப்பெண்கள் கூறுவதன் நோக்கமென்ன? உளங்குளிர்ந்த போதுதானே பாடல்வரும்? எனவே, இவர்கள் பாடினார்கள் என்றால் உளங்குளிர்ந்து, உகப்புத் தோன்றிப் பாடினார்கள் என்பது பெற்றாம். இந்தக் குளிர்வும், உகப்பும் எங்கிருந்து வந்தன? இருபத்து நான்கு மணி நேரமும் நிலையாக நிற்கும் உணர்வுகள் அல்ல இவை. இப்பொழுது உள்ளத்தில் குளிர்வும் உகப்பும் தோன்றினமையின் அது பாட்டாக வெளிப்பட்டது. இந்தக் குளிர்வும் உகப்பும் தோன்றக் காரணமாயிருந்தது ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாகும். அந்தச் சோதி எப்பொழுதும் உள்ளதுதானே? அப்படியிருக்க இப்பொழுது திடீரென்று இவர்கள் உள்ளத்தில் குளிர்வையும் உகப்பையும் ஏற்படுத்த என்ன நிகழ்ந்தது? அந்த நுணுக்கத்தைத்தான் இங்கு அடிகளார் கூறுகின்றார்.

'சோதியை யாம் பாட' என்றதால் அந்தச் சோதி இப்பொழுதுதான் இவர்கள் உள்ளத்தைக் குளிர்வித்து உகப்பை உண்டாக்கிற்று. அதாவது அவனருளாலே அவன்தாள் வணங்குவதுபோல, அந்தச் சோதியின் அருளை இப்பொழுது பெற்றார்கள். அந்த அருள் இவர்களுக்குக் கிடைத்ததும் அவன் கருணையினாலேயே ஆகும். 'சோதியை யாம்பாட’ என்று கூறுவதன் அடிப்படை இதுதான். அதாவது, சோதியைப் பாடுவதால் உள்ளம் நிறைந்தது, குளிர்ச்சியும் உகப்பும் தோன்றின. இவை இரண்டும் தோன்றியதால் மறுபடியும் பாடல் பிறந்தது.