பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

ஆக்கும் அறிவான் அலது, பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க!—நீக்கு—
பவர் ஆர், அரவின் பரு மணி கண்டு என்றும்
கவரார், கடலின் கடு.22

பகர்ச்சி மடவார் பயில், நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் நெகிழ்ச்சி
பெறும்:—பூரிக்கின்ற முலைப் பேதாய்! —பல கால்
எறும்பு ஊரக் கல் குழியுமே.23

உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும், கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே;—வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய், வேம்பு அன்றோ,
காக்கை விரும்பும் கனி?24

கல்லா அறிவின் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே;—வில் ஆர்
கணையின் பொலியும் கருங்கண்ணாய்!—நொய்து ஆம்.
புணையில் புகும் ஒண் பொருள்.25

உடலின் சிறுமை கண்டு. ஒண் புலவர் சுல்விக்
கடலின் பெருமை கடவார்;—மடவரால்!—
கண் அளவாய் நின்றதோ. காணும் கதிர் ஒளிதான்?
விண் அளவு ஆயிற்றே? விளம்பு!26

கைம்மாறு உகவாமல், கற்று அறிந்தோர், மெய் வருந்தி,
தம்மால் இயல் உதவி தாம் செய்வர்;—அம்மா!
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும், வலியன தாம் மென்று.27

முனியினும் நல்குவர், மூதறிஞர்; உள்ளக்
கனிவினும் நல்கார், கயவர்;—நனி விளைவு இல்
காயினும் ஆகும். கதலிதான்; எட்டி பழுத்து—
ஆயினும் ஆமோ? அறை!28

உடற்கு வரும் இடர், நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர்,
அடுக்கும் ஒரு கோடி ஆக, தடுக்கம் உறார்—
பண்ணின் புகலும் பனி மொழியாய்!—அஞ்சுமோ,
மண்ணில் புலியை மதி மான்?29