பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

யிற்று. தகுந்த அந்தஸ்துள்ள ஒரு கன்னிப் பெண்ணை, அந்த தாசில்தார் பலவந்தமாய்க் கொண்டுபோனதும், பிற்பாடு அந்தப் பெண் தப்பி ஓடும்பொழுது மறுபடியும் அவளைத் தொடர்ந்து, பலாத்காரம் செய்ய யத்தனப் பட்டதும் பெரிய அக்கிரமம்; அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு போன உம்மை, அவனும் அவனுடைய நேசனும் கத்தி உருவி வெட்ட வந்தபடியால், உமது பிராணனை ரக்ஷித்துக்கொள்ளும் பொருட்டு, அந்தத் துஷ்டர்களைக் கொலை செய்ய வேண்டியது அகத்தியமாயிருந்தது; ஆகையால் இந்த விஷயத்தில் உம்மிடத்தில் யாதொரு குற்றமுமில்லை; ஜனங்களுடைய க்ஷேமத்துக்காகத் தாசிலாக நியமிக்கப்பட்ட அந்தக் கொடியன், அவனுடைய அதிகாரத்தைத் துர்விஷயத்தில் உபயோகப்படுத்தினபடியால், அவன் ராஜ தண்டனைக்கும், தெய்வ தண்டனைக்கும் பாத்திரனாக இருக்கிறான். தெய்வ தண்டனை முந்திக் கொண்டபடியால், ராஜ தண்டனைக்கு இடமில்லாமல் போயிற்று; ஆகையால் நீர் நிர்த்தோஷியென்று மேலான அதிகாரிகளுக்கு விஞ்ஞாபிக்கப்படும்” என்றார். இதைக் கேட்டவுடனே எங்களுக்கெல்லாம் தேகத்தை விட்டுப் பிரிந்துபோன உயிர் மறுபடியும் திரும்பி வந்தது போல் ஆனந்தம் உண்டாயிற்று. உடனே அந்தக் கனவான் விசாரணையான விவரங்களைக் கண்டு ஒரு விஞ்ஞானப் பத்திரிகை எழுதி, அதைச் சில சேவகர் கையிலே கொடுத்துக் கலெக்டரிடத்திற் கொடுக்கும்படி அனுப்பினார்.

அதற்குப் பிறகு அந்தக் கனவான் அவருடன் வந்த போர்வீரர்களை நோக்கி “நீங்கள் போய்க் கூடாரத்தில் இருங்கள்; நான் சீக்கிரத்தில் வருகிறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டார். அவர்கள் போன பிற்பாடு அவர் ஏதோ பெருந்துயரத்தைக் கொண்டிருப்பதாக அவருடைய முகக்குறியினால் விளங்கிற்று. அவர் எங்களைப் பார்த்து, ““திரை மறைவில் விசாரிக்கப் பட்ட