பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

பிரதாப முதலியார் சரித்திரம்

அவர்கள் எல்லோரும் முன் பணமில்லாமல் வரமாட்டோமென்று சொல்லிவிட்டார்கள். அந்தப் பையன் அவர்களுக்கு இரக்கம் உண்டாகும்படி அவர்களுடைய காலில் விழுந்து நமஸ்காரஞ் செய்து அவனாற் கூடியமட்டும் இரந்து மன்றாடியும் அந்தப் பாவிகளுக்கு இரக்கம் உண்டாகவில்லை. அந்தப் பாலன் அழுதுகொண்டு தெருவிலே போகும்போது அந்தத் தேசத்துச் சக்கரவர்த்தியாகிய இரண்டாவது ஜோசேப் (Joseph II) என்பவர் ஒரு சாதாரணமான வண்டியின் மேலே ஏறிக்கொண்டு சவாரி போய்க்கொண்டிருந்தார். அவர் சக்கரவர்த்தி யென்பது அந்தப் பையனுக்குத் தெரியாதபடியால் அவன் அவருக்கு முன்பாகப் போய் வியாதியாயிருக்கிற தன் மாதாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகப் பொருளுதவி செய்யவேண்டுமென்று விண்ணப்பஞ் செய்தான். அவன் மாதாவுக்காகப் படும் பரிதாபத்தைப் பார்த்துச் சக்கரவர்த்திக்கு இரக்கம் உண்டாகி, “நான் உன்னுடைய மாதாவுக்கு வைத்தியஞ் செய்கிறேன். உன்னுடைய வீட்டைக் காட்டு” என்று சொல்லி, அவனையும் வண்டியின்மேல் ஏற்றுவித்துக் கொண்டு போனார். அவர் அந்த வீட்டுக்குப் போன உடனே அந்த ஸ்திரீ பசியினால் வாடிக் கண்ணிருட்டிக் காதடைத்து மெலிந்து போயிருக்கிறதைப் பார்த்து அவளுக்கு தரித்திரத்தைத் தவிர வேறு வியாதியில்லை யென்றும் அதற்கு ஔஷதம் பொருள் தானென்றும் தெரிந்து கொண்டு அந்தப் பையனைப் பார்த்து “உன்னுடைய தாயார் வியாதிக்குத் தகுந்த ஔஷதம் இன்னதென்று எழுதிக் கொடுக்கிறேன். மைக்கூடும் இறகும் காகிதமுங் கொண்டு வா” என்றார். அவன் அந்தப்பிரகாரங் கொண்டுவந்து கொடுத்தான். அவர் அந்தப் பொக்கிஷசாலை உத்தியோகஸ்தனுக்கு உத்தரவு எழுதி அனுப்பினார். அந்தப் பிரகாரம் அவர்களுக்கு நூறு வராகன் கிடைத்து அவர்களுடைய தரித்திர வியாதியை அதஞ் செய்தது.