பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

பிரதாப முதலியார் சரித்திரம்

யாவது போய்ப் பிழைத்துப் போகிறேன். தேவரீர் கிருபை செய்யவேண்டும்” என்று மிகுந்த பயபக்தியுடன் இரந்து மன்றாடினான்; அந்த மன்றாட்டையெல்லாம் மூத்தவன் ஆற்றில் கரைத்த புளியாக்கி இளையவனையும் அவன் மனைவியையும் புறக்கணித்துத் தள்ளி விட்டான். அவர்கள் இருவரும் பட்டினியும் பசியுமாக இந்த ஊருக்கு வந்து விட்டார்கள். தமையன் அவ்வளவு கொடுமை செய்தும் அவன் மேலே பாகவியாஜ்ஜியஞ் செய்ய இளையவன் அநிஷ்டனாயிருந்தான். ஆயினும் அவனுடைய மாமனார் முயற்சியினாலே கும்பகோணத்தில் பாக வழக்குச் செய்யப்பட்டது. மூத்தவன் தன் கையிலிருந்த திரவியங்களையெல்லாம் பல பேர் கையில் ரகசியமாய்க் கொடுத்து விட்டு, தன்னிடத்தில் பூஸ்திதிகளைத் தவிர வேறொரு பொருளுங் கிடையாதென்றும் பூஸ்திதிகள் பல பெயர்களிடத்தில் வாங்கப்பட்ட கடன்களுக்கு உத்தரவாதமாயிருப்பதாகவும் தனக்கு ஒருவருங் கடன் கொடுக்க வேண்டியதில்லை என்றும் எதிர் வழக்காடி அந்தப்படி பொய்க் கணக்குகளைக் கொண்டும் நிரூபணஞ் செய்தான். அன்றியுந் தன் தம்பியினுடைய சாக்ஷிகளைப் பொருள் மூலமாகக் கலைத்து அவர்கள் தன் தம்பி பக்ஷத்தில் சாக்ஷி சொல்லாதபடி அழிம்பு செய்தபடியால் தம்பி வழக்கு அபஜயமாய்ப் போய்விட்டது.

இவ்வண்ணம் இளையவன் பிதுரார்ஜிதத்தை இழந்து பரதேசிக் கோலமாய் மாமனார் வீட்டில் வந்து சேர்ந்தான். மாமனாரிடத்தில் அவன் சில தொகை கடன் வாங்கி சத்தியந் தவறாமல் வர்த்தகஞ் செய்தபடியால் அவனுடைய யோக்கியதை எங்கும் பரிமளித்தது. புஷ்பத்தை நாடி வரும் வண்டுகள் போலச் சகலரும் அவனிடத்திலே கொள்ளல் விற்றல் செய்யவும் பரபத்தியங்கள் பண்ணவும் ஆரம்பித்தபடியால் அவனுக்குச் செல்வம் அமோகமாய்ப் பெருகிப் பெரிய திரவியவான் ஆனான். இளையவனை அவனுடைய தர்மந் தலைகாத்தது போல்,