பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

பிரதாப முதலியார் சரித்திரம்

வஸ்திர பூஷணாதிகளுடன் அற்ப சங்கைக்குப் போகிறவர்கள் போற் கொல்லைத் தோட்டத்துக்குள் நுழைந்து சுவரேறிக் குதித்து சமீபத்திலிருக்கிற மலைகள் சூழ்ந்த காட்டுக்குள்ளே நுழைந்து ஒளிந்துகொண்டார்கள்.

சாக்ஷி கொண்டுவரப் போன நல்லதம்பி பிள்ளை, சில பெரிய மனுஷர்களை அழைத்துக்கொண்டு கலியாண வீட்டுக்கு வந்தான். அவர்கள் அருமைநாத பிள்ளைக்கு உண்மையைத் தெரிவித்ததும் தவிர “மணமகளுக்குத் தாலி கட்டின மாப்பிள்ளை எங்கே?” என்று வினவினார்கள். உடனே மாப்பிளையைத் தேட ஆரம்பித்தார்கள். அநுமார் இலங்கையிலே சீதையைத் தேடினதுபோல் கோட்டைகள் கொத்தளங்கள் மூலைகள் முடுக்குகள் சந்துகள் பொந்துகள் கோயில்கள் குளங்கள் தெருக்கள் திண்ணைகள் தோட்டங்கள் துரவுகள் எங்கும் தேடிச் சல்லடை போட்டுச் சலித்தார்கள். மாப்பிள்ளையும் அகப்படவில்லை. மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்களும் அகப்படவில்லை. ““சந்தையில் அடித்ததற்குச் சாக்ஷியா?”” என்பதுபோல், அவர்கள் திருடர்களென்பதற்கு அவர்கள் தரித்திருந்த ஆடையாபரணங்களுடன் ஓடிப் போய்விட்டதே பிரத்தியக்ஷ நிதரிசனமானதால் அந்தச் சுப வீடு அசுபவீடாகி, அருமைநாதப் பிள்ளயும் அவனுடைய பெண்சாதி முதலானவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு குய்யோ முறையோவென்று கதறி அழுதார்கள். இந்தச் சமாசாரங்களெல்லாம் தேவராஜப் பிள்ளை கேள்விப்பட்டு, அவர் என்னையும் கனகசபையையும் அழைத்துக் கொண்டு கலியாணவீட்டுக்குப் போனார். நாங்கள் போகும்போது அருமைநாத பிள்ளை மனைவி பெருஞ்சப்தத்துடன் ஒப்பாரி சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அந்த ஒப்பாரியில் “ “அக்காள் மகளை அநியாயஞ் செய்தேனே! பையை எடுத்தேன்! பழியவற்மேற் போட்டேனே! ஐயையோ! தெய்வமே! அத்தனையும் வீணாச்சே!”” என்று சொல்லி அழுதாள்.