வைணவ புராணங்கள்/வைணவ புராணங்கள்

விக்கிமூலம் இலிருந்து

1. வைணவ புராணங்கள்

சங்க இலக்கிய ஆராய்ச்சியே ஆராய்ச்சி என்று ஒரு காலத்தில் மக்கள் கருதி வந்தனர். சங்க இலக்கியம் என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழ் இலக்கியங்களில் ஓர் ஐந்நூறு ஆண்டுக்காலப் பகுதி; பிற்காலப் பகுதிகள் இதுபோல உள்ளன. இவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்பதைத் தமிழ் ஆய்வாளருக்கு அடியேன் சொல்லத் தேவையில்லை. இவற்றில் ஒன்று 'புராண இலக்கியம்’ என்ற துறையாகும். இத்துறை காலத்தால் பிற்பட்டதாயினும் அளவாலும் பொருளாலும் மிக விரிந்தது; இத்துறையில் கவனம் செலுத்தினால் சிறந்த பயன் தரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இடைக்காலத் தமிழில் அளவால் ஒரு பெரும் பகுதி புராண இலக்கியம். இதனைப் புறக்கணிக்கின்ற அல்லது தூற்றுகின்ற எந்த வரலாறும் முழுமையுடையதாகாது. இடைக்காலம் என்ற ஒரு பெருங்கால அளவின் (நானூறு ஆண்டுக்கால அளவின்) மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறப்புமிக்க இலக்கியத்துறையை நோக்காத வரலாற்றாராய்ச்சி ஆராய்ச்சி ஆகாது. இக்கால மக்கள் பெரும்பாலும் சமயத்துறையிலேயே மனம் செலுத்திஇருந்தனர். அதன் விளைவுகளில் ஒரு பகுதியே புராண இலக்கியம் ஆகும்.

புராண இலக்கியங்கள் பல சிறந்த இலக்கியச் சுவை உடையன என்பதை அத்துறையில் ஈடுபாட்டுடன் நோக்கி ஆய்பவர்களே நன்கு அறிவார்கள். புராண இலக்கியங்களுள் சிறந்தவை பிற எந்தச் சிறந்த இலக்கியங்களுக்கும் குறைவானவை அல்ல என்பதைத் தெளிவாகவும் உணர்வார்கள். உலக நீதிகள், ஆட்சி முறை, நாட்டு வருணனை, அகத்துறை முதலியவற்றைப் புராணங்களுள் காணும்போது, இவை பிற எந்த இலக்கியத்துக்கும் பின் தங்கியவை அல்ல என்பதும் புலனாகும். நறுந்தொகையும் நைடதமும் பாடும் ஆற்றல் உடைய அரசன் புராணம் படைக்கப் புகுந்தால் அப்புராணத்தில் எவ்வாறு இலக்கியச் சுவை குன்றிப்போகும்? என்பதைச் சிந்தித்து நோக்கினால் உண்மை பளிச்சிடும்.

புராண இயல்புகளாகச் சிலவற்றைக் கருதலாம்:

(1) எல்லாப் புராண ஆசிரியர்களும் மேற்கொள்ளும் சில சிறப்பான தன்மைகளைச் சுட்டிக் காட்டலாம். போர் என்று வந்தால் எல்லா ஆசிரியரும் மிகுதியாகப் போர் வருணனையில் ஈடுபடுகின்றனர். இதற்கும் சில காரணங்கள் உள்ளன. ஒன்று, போர் காப்பியத்துள் ஒர் அங்கம் (செலவு இகல் வென்றி). இவர்கள் தண்டியாசிரியர்க்குப் பிற்பட்டவர்களாதலால் போரை மிகுத்துச் சொல்கின்றனர். இரண்டு, அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, அரசியல் நிலையற்றுக் கொந்தளிப்பு மிகுந்திருந்த காலம். எனவே, போர்களைத் தாங்களே நேரில் கண்டும் அல்லது நேரில் கண்டவர்களிடம் உசாவியும் இவர்கள் வருணிக்கின்றனர் என்று கருதலாம். மூன்று, பொதுவாக இவர்கள் எழுதுகோல் வீரர்களேயன்றி வாள் வீரர்கள் அல்லர். இவர்கள் வாளேந்திப் போரிடாவிடினும் தங்களின் பாடல் மூலம் வாளேந்திப் போரிடுகின்றனர்.

(2) தங்களுக்குத் தெரிந்தவற்றையெல்லாம் விரித்துக் கூறும் முயற்சி மற்றொன்று. பல புராணங்கள் இலக்கணச் செய்திகளை விவரிக்கும். இலக்கணத்துக்காக யமகம், திரிபு, மடக்கு முதலியன அதிகம் செய்து பாடுகின்றனர். மரங்கள் என்று வந்தால் இருபது வகைகள்; யாவும் அடைமொழி விரவாமல் கூறப் பெறும். தெரிந்த தலம் எல்லாம் ஒப்புவிப்பார்கள். சமயம் என்று வந்தால் சைவ சித்தாந்தச் செய்திகள், வைணவச் செய்திகள் யாவும் இதில் அடங்கும். பூசை என்று வந்தால் எல்லாக் காரியங்களும் இடம் பெறும். இஃது இயல்பேயாகும். சமயத்தை வலியுறுத்திப்பாடுதலே இவர்கள் புராணம் செய்ததன் நோக்கமன்றோ? வைணவம் என்று வந்தால் பெரும்பாலும் தசாவதாரங்களையும், ஆழ்வார்களையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

(3) மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் மேலோங்கி நின்றமையால், ஒழுக்க நெறி பிறழ்ந்தால் நரக வாழ்வே பலன் என்பது தவறாமல் குறிப்பிடப்பெறும். நரக வகைகள், நரகத் துன்பங்கள் மிகுதியாயிருக்கும். இங்கு பகுத்தறிவிற்கு இடம் இல்லை. பார்த்து அநுபவிக்காத பலவற்றை நம்பித்தான் அன்றாட வாழ்க்கையில் ஏற்கின்றோம். அறிவியலிலும் மருத்துவத்திலும் இப்படி எத்தனையோ உள்ளனவே! இவர்களும் மருத்துவம் செய்கின்றனர். துன்பம் வேண்டாம் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஆகவே, நெறி பிறழ்ந்தால் துன்பம் என்று சொல்லி அச்சுறுத்தியே ஒழுக்கத்தை நிலை நாட்டப் பார்க்கின்றனர். அன்றைய சூழ்நிலைக்கு இது பொருந்துவதேயாகும். 'அரசு அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது அன்றைய நம்பிக்கை. எனவே, புராணங்களின் இந்த இயல்பைப் பழிப்பது நம்மை நாமே பழிப்பதாகும்.

(4) தெய்வத்தை வேண்டுதல் என்பது அன்றிருந்த ஓர்இயற்கை நியதி. இன்று மனிதனைத் தெய்வமாக வேண்டவில்லையா? எனவே தோத்திரப் பாடல்கள் நூலெங்கும் மிகுந்து காணப்பெறும். இவற்றை மனப்பாடம் செய்து பொது மக்கள் இறைவனிடம் ஓதலாம் என்றுகூட ஆசிரியர்கள் சொல்லியிருப்பார்கள். 'அருளாளதாசர் பாகவதம்' போன்ற நூல்களில் தோத்திரப் பாடல்களே மிகவும் அதிகம். (முந்நூறுக்கும் மேல்) கவச நூல்களும் அதிகமாய் எழுந்துள்ளன. இவற்றின் ஒரு சிறப்பான நோக்கம் சூழ்ந்துள்ள கோளாறுகளை மறந்து மனிதனுக்கு ஆறுதலும் சாந்தியும் அளிப்பதாகும். இவை புராணம் என்ற நிலையையொட்டி எழுந்த சிறப்பான இயல்புகளாகும். புராணங்களின் இன்றியமையாமையை நிலைநிறுத்தவே இவ்வளவும் கூறப்பெற்றது. இந்நிலையில் வைணவ புராணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவே இம்முயற்சி மேற்கொள்ளப் பெறுகின்றது. இந்நூல் இரண்டு பிரிவுகளாக எழுதப்பெறுகின்றது. முதல் பகுதியில் புராண இலக்கியம் பற்றிய சில செய்திகள் விளக்கம் பெறுகின்றன. இரண்டாம் பகுதியில் வைணவ புராண இலக்கியம் பற்றிச் சில செய்திகள் கூறப்பெற்று ஐந்து புராணங்கள் பற்றி விரிவான விளக்கம் தரப்பெறுகின்றது. வைணவப் பெருமக்களுக்கு சிறந்த முறையில் பயன்படும் என்று கருதியே இந்நூல் எழுதப்பெற்றது. இனி, நூலில் புகுந்து விரிவாக ஆழ்ந்து நோக்குவோம்.