56
அனிச்ச மலர்
டாக்சி டிரைவர் மீட்டரைத் தூக்கி மறுபடி சாய்த்து விட்டு, வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டு, "எங்கே போகணும்மா?" என்று கேட்டுக்கொண்டே ஸ்டார்ட் செய்தான். நல்லவேளை, அவன் மறுக்கவில்லை.
வேகமாகப் படபடத்து அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் தன்னுடைய கல்லூரி விடுதி இருந்த சாலையின் பெயரைச் சொன்னாள் சுமதி. தன் குரல் என்னவோ மாதிரி இருப்பதை அவள்தானே அப்போது உணர்ந்தாள்.
"மேலே ஒரு ரூபாய் போட்டுக் குடுத்துடும்மா"-என்றான் டாக்சி டிரைவர். அவள் பதில் சொல்ல வில்லை. மவுனத்தை அவளுடைய சம்மதமாக அவன் எடுத்துக் கொண்டான். டாக்சி விரைந்து ஒடத் தொடங்கியது.
டாக்ஸி சிறிது தொலைவு விரைந்து பின் பிரதான சாலையில் திரும்பிக் கிண்டி தொழிற்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது தான் சுமதிக்குத் தான் செய்தது சரியா தவறா என்பது போன்ற கேள்வியே மனத்தில் எழுந்தது.
'சினிமாவில் நடிக்கச் சான்ஸ் வாங்கித் தருகிறேன் என்று தன்னை எங்கேயோ இழுத்துவந்து சீரழிப்பதற்கு மேரி முயல்கிறாள்' என்று ஒரு கணமும் 'மேரியின் மேல் என்ன தவறு? அவள் நாலைந்து தயாரிப்பாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவதற்குள்ளேயே நான் பயந்து போய் என்னவோ ஏதோ என்ற நினைத்துக்கொண்டு ஓடிவந்து விட்டால் அது மேரியின் தவறா?' என்று மற்றொரு கணமும் மாறி மாறித் தோன்றியது சுமதியின் மனத்தில் தான் பதற்றத்தின் காரணமாக அவசரப்பட்டு விட்டோமோ என்று கூட இப்போது அவளுக்குத் தோன்றலாயிற்று. அந்த ஆட்களிடம் சீட்டு விளையாட ஆரம்பித்து அவர்கள் கையைக் காலைப் பிடித்து இழுப்பதற்கு முன்னர் வெளியே தப்பி ஓடிவந்தது நல்லதுதான் என்பது போலவும் ஒரொரு சமயம்