உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெரியோரிடத்தில் காணப் பெறும் பெருமைக்குரிய இயல்புகள் இயற்கையிலும் இயற்கை. அந்தப் பெருந்தன்மை பிறப்பின் வழிப்பட்டது. அது செயற்கையன்று; எதிர்பாராதது மன்று. ஆதலால், பெரியோரை வியத்தல் கூடாது. பெரியோரை ஒரோ வழி வியந்தாலும் தவறில்லை. ஆனால், சிறியோரை இகழ்தல் ஒருக்காலும் கூடாது. சிறியோரை இகழ்தலால் அவர்கள் ஒரு பொழுதும் திருந்த மாட்டார்கள். இகழ்தலுக்கு மாறாகப் பைய அரவணைத்து எடுத்துத் திருத்திக்கொணர்தல் வேண்டும். ஒரு சிலர் சிறியோர் ஆனது அவர்கள் வேண்டுமென்றே ஆனதல்ல. அதுவும் ஊழின் வழி. ஊழ், சூழலின் வழி. எனவே, யாரை நொந்து என்ன பயன்? இதுவே கணியன் பூங்குன்றனார் தந்த கனிமொழி.

பெரியோரை வியந்து பாராட்டாது சிறியோரை இகழாது வாழின் பொதுமை நிலை மலரும். வெறுப்புற்ற பொழுது இன்னாது என்று வாளா இருத்தல் புலன்களை நெறி முறை பிறழச் செய்யும். இனியன, இன்னாதன என்று நினைந்து மகிழ்தலும் காய்தலும் பொறி புலன்கள் வயப்பட்ட வாழ்க்கை, ஆங்கே ஆன்மா இல்லை. அறிவு இல்லை. உணர்வு இல்லை.

பொறி, புலன்களை ஆண்டு, எங்கு ஆன்மா தலை தூக்குகிறதோ ஆங்கு இன்பம் தோன்றும். அந்த இடத்தில்தான் சாதல் பற்றிய அச்சம் அகலும், ஆன்மா தன்னை அறியும் தவநிலை தோன்றுகிறது. அந்த மோன நிலையில்தான் ஆன்மா தன்னையே நோக்கி அறிகிறது. நன்றும் தீதும் பிறரால் வருவன அல்ல; தானே படைத்துக் கொண்டவை என்று உணர்கிறது. இந்தப் பேருணர்வு முழுமையாகும்பொழுது யாதும் ஊரே! யாவரும் கேளிர்! - என்ற பொதுமை வாழ்க்கை-அருளியல் வாழ்க்கை நமக்குக் கிடைக்கும். இதோ கணியன் பூங்குன்றனார் பாட்டு.