________________
- க. அயோத்திதாஸப் பண்டிதர் நகர் நீங்கிய காண்டம் - பாட்டு 14. அக்காலத் தமைச்சரெல்லா மடல்வேந்த னடிபோற்றி யரசே நீமீண் டெக்கால மெழுந்தருள்வ தென்றுரைக்க வாங்கவரை யிருக ணோக்கி முக்காலங் களுமுணரு முனிவனுக் கின்று யான கொடுத்த மூதூர் தன்னில் எக்காலமும் வருவதில்லை யென்றா னமைச்ச ரெலா மேங்கி வீழ்ந்தார். இவ்விதமாக யாவரும் அறிய முனியவனுக்குக் கொடுத்த நாட்டில் பின்னும் வரமாட்டேனென்று உறுதி மொழி கூறிய அரிச்சந்திரன் மறுபடியும் நாட்டுள் வந்து சேர்ந்தான். மீட்சிக் காண்டம் - பாட்டு 67. வள்ளலை முனிவன் கூட்டி வருகின்ற வாறு கேட்டுப் பள்ளமுற் றும்பர் வெள்ளம் பாய்கின்ற பரிசே போல உள்ளமு மகிழ ரோமஞ் சிலிர்ப்புற வூரிற் சேனை வெள்ளமு மரசர் தாமும் வியந்தெதிர் கொண்டன்றே. இனி ஊருள் வர மாட்டேனென்று பின்னு மவ்வூருள் வந்தது பொய்யாகாதோ? இந்து சகோதரர்களே ! பொய்ச் சொன்னவனை மெய்ச் சொன்னானென்பீரேல், நீங்கள் மெய் சொல்ல வெட்கி பொய்ச் சொன்னதாகுமே! ஆதலால் அரிச்சந்திரன் பொய்ச் சொன்னானென்று நீங்கள் மெய் சொல்லி வெளிவாருங்கள்! இதுவே நம் தேச தெய்வமுறைமை. காட்டில் அரிச்சந்திரன் முதல் நால்வர்களும், பொய் சொல்லக் கேட்ட முனிவனுக்கு சொல்லிக்கொடுத்த நாட்டைப் பற்றி விசனித்துக்கொண்டு போகும்போது, கெளசிகனென் னும் விஸ்வாமித்திர ராஜ பார்ப்பான் குறுக்கிட்டு. அரிச்சந்திரனே! முன்னே என் பெண்களிடத்தில் நன்றாக பாட்டுக்கேட்டு அவர்களுக்கு ஒன்றுங் கொடாமல் விரட்டி விட்டாய். (பின்னே நீயே நாட்டைக் கொடுத்து விட்டாய்) இப்போது என்மேல் சலித்துக்கொள்கிறாய் உன் குற்றமெல்லாம் பொறுத்துக்கொண்டேன். நீ கொடுத்த ராஜ்யத்தை யானே உனக்குக் கொடுத்து விடுகிறேன் பெற்றுக்கொள்ளுமென, அரிச்சந்திரன் விஸ்வாமித்திர வரசனைப் பார்த்து.