பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சி. என். அண்ணாதுரை



வடவருக்கு வடநாட்டு மொழியில் சாஹித்தியம் அமைத்தால்தான், அந்த இசையைக் கேட்டதும் அவர்கள் இன்புற முடியும்!

தெவிட்டாத விருந்து

இப்போது தமிழ்நாட்டிலே நடைபெறும் கச்சேரிகளில் தமிழ் இசை எவ்வளவு விரும்பப்பட்டு வருகிறது என்பதையும் நாம் விவரிக்கத் தேவையில்லை.

தோழர் தியாகராஜ பாகவதரின் பாடல்கள் இன்று தமிழருக்குத் தெவிட்டாத விருந்தாக இருக்கின்றன. அவருடைய குரல் அமைப்பு மட்டுமல்ல அதற்குக் காரணம்; அவர் தமிழ்ப் பாட்டுக்களைத் தெளிவாகக் கேட்கும்போதே பொருட்சுவையை மக்கள் ரசிக்கும் விதத்திலே பாடுவதுதான் முக்கியமான காரணம். சங்கீத வித்துவான்கள் என்ற சன்னத்துக்கள் பெற்று விளங்குவதாகக் கூறப்படும் பேர்வழிகளிடம் உள்ள வித்தை பாகவதரிடம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றியோ, 'சுரம்' போடுவதில் அவர் இன்னாரைவிடக் குறைந்த திறமை உள்ளவரா என்பது பற்றியோ மக்கள் யோசிக்கவில்லை. அவசியமுமில்லை. பாகவதர் "மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை" என்று பாடினால், அது வீட்டிலே, வெளியிலே, இரவிலே, பகலிலே கிழவர் குழந்தை உள்பட பாடும் பாட்டாகிவிடுகிறது. அழகும், அழுத்தந் திருத்தமும், பொருட்சுவையும் ததும்ப, "உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?" என்று பாகவதர் பாடினார். நாட்டினர் அதனைப் பாடுகின்றனர். காரணம், அவர் பாடுவது புரிகிறது. கேட்பவர் களிக்கின்றனர். அந்த இசை, கேட்போர் உள்ளத்திலே சென்று தங்குகிறது.

பூரிக்கின்றனர்

தோழியர் கே. பி. சுந்தராம்பாளின் இசைக்குத் தமிழர் தமது செவியையும் சிந்தனையையும் பரிசாக அளித்ததன் காரணமும் இதுவே. "செந்தூர் வேலாண்டி--" என்று