அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/082-383

விக்கிமூலம் இலிருந்து

78. நன்பிராமன் கூட்டத்தோரென்றால் யாவர்

தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்களாகும்.

சைவம், வைணவம், வேதாந்தமென்னும், சமயங்களையும் அப்பிராமணரென்போர்களே ஏற்படுத்தி அச்சமயத்தை எவரெவர் தழுவிநிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களேயாவர்.

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையுந் தழுவிக் கொண்டே (நன்பிராமன்ஸ்) என்று சங்கங்கூடியிருக்கின்றனரா அன்றேல் சாதியாசாரங்களையும் சமயவாசாரங்களையும் ஒழித்து (நன்பிராமன்ஸ்) (NonBrahmin) என்ற சங்கங்கூடியிருக்கின்றனரா விளங்கவில்லை.

அங்ஙனம் சாதியாசாரங்களையும், சமயவாசாரங்களையும் ஒழித்துள்ளக் கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம்பெயர் கார்த்திருக்கின்றார்கள்.

பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு (நன்பிராமன்ஸ்) எனக் கூறுவது வீணேயாகும்.

காரணம், சாதியாசாரக் கிரியைகளிலும் பிராமணர்களென்போர் வரவேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலின் இவ்விரண்டிற்குஞ் சம்பந்தப்பட்டவர்கள் யாவரும் நன்பிராமன் ஆகார்கள்.

உள் சீர்திருத்தமென்றும், இராஜகீய சீர்திருத்தமென்றும் இருவகுப்புண்டு. அவற்றுள் சாதிசமய சம்மந்தங்கள் யாவும் உட்சீர்திருத்தங்களென்றும், மற்றவை

ராஜாங்க திருத்தமென்றுங் கூறி யாங்கள் ராஜாங்க சம்பந்தத்தில் (நன் பிராமன்ஸ்). என வெளிவந்தோமென்பாராயின், இந்துக்கள், மகமதியர், பெளத்தர், கிறீஸ்தவர்களென்னும் பிரிவினைகளுக்கு மதசம்மதங்களே காரணமாயிருப்பது கொண்டு இந்துக்களென வெளிவந்துள்ளோர் இராஜகீயே காரியாதிகளிலும் (நன்பிராமன்ஸ்) எனப் பிரித்துக் கொள்ளுவதற்கு ஆதாரமில்லை.

ஆதலின் இவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் ஒவ்வொருவரும் தற்காலம் தோன்றியிருக்கும் (நன் பிராமன்ஸ்) என்போர் யாவரென்றும், அவர்கள் கூட்டத்தின் கருத்துக்கள் யாதென்றும் தெரிவிக்கும்படிக் கோருகிறோம்.

கூட்ட வோட்டச் சிலவுகள் யாவும் எங்களைச்சார்ந்தது. ஆட்டபாட்டச் சுகங்கள்யாவும் ஐயரைச் சார்ந்தது என்பாராயின் யாது பலனென்பதேயாம்.

- 3:14; செப்டம்பர் 15, 1909 -