உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/கற்பித்தலில்

விக்கிமூலம் இலிருந்து
2. கற்பித்தலில் வளர்ச்சியும் எழுச்சியும்
(TEACHING PROCESS)

கல்வியின் தரமும் பெருமையும், தரமுள்ள ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமையில் தான் அமைந்திருக்கிறது.

கற்பித்தல் என்பது சாதாரண காரியமல்ல

ஏதோ வகுப்புக்கு முன்னே வந்து நின்று, மாணவர்களிடம் புத்தகத்தில் உள்ள பாடத்தைக் கூறி, பரிட்சை வைத்து மதிப்பெண்கள் அளிக்கின்ற, அன்றாட நடைமுறை செயல்களும் அல்ல கற்பித்தல் என்பது.

கற்பித்தல் என்பது ஏதோ எந்திரம் போல் இயங்கி செயல்படுவதும் அல்ல, அது தந்திர நுணுக்கம் நிறைந்த, சாதுர்யம் மிகுந்த, எதிர் நீச்சல் போடச் செய்கின்ற, கை வந்த கலையாகும்.

மாணவர்கள் கூட்டத்தின் முன்னே வாய்ப்பந்தல் போடும் வேலையல்ல கற்பித்தல் என்பது. மாணவர்களின் அறிவு பூர்வமான, (Intellectual), உணர்வு பூர்வமான (Emotional) சமூகத் தொடர்பான (Social): ஆத்மார்த்த மான (Spiritual) மற்றும் உடல் வளர்ச்சிக்காக உதவும் வகையில் தான், கற்பிக்கும் காரியம் நடை பெறுகிறது.

புதிய கல்விக் கொள்கையின்படி, கற்பிக்கும் பணி மூன்று முக்கிய நோக்கத்துடன் பின்பற்றப்படுகிறது.

1. கற்பவரை வலியுறுத்தல் (Emphasising the learner)

2. கற்பவருக்கு வழி காட்டுதல் (Guiding the learner)

3. கற்பவரை முன்னேற்றுதல் (promoting the learner)

1. கற்பவரை வலியுறுத்தல்

கற்பிக்கும் பொழுது, அங்கு முக்கிய இடத்தை வகிப்பவர்கள் மாணவர்களாகவே இருக்கின்றார்கள்.

வகுப்பிலே பாட்டுப் பாடுவது, வாய் விளக்கம் தருவது; மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போன்று நடந்தது எல்லாம், இன்று மலையேறிப் போய் விட்டது.

மாறாக, போதிக்கும் பொருள் தொடர்பாக, வழி முறைகள் மூலமாக, மாணவர்களின் திறமைகளை வளர்த்து விடுகிற இலட்சியப் பாங்கே, இன்று தலை தூக்கி நிற்கிறது

மாணவர்களின் உண்மையான திறன்களை உணர்ந்து கொண்டு, அவற்றை வளர்த்து விடுகிற முறைகளைக் கையாண்டு; அவர்களுக்கு அறிவார்ந்த அனுபவங்கள் ஏற்பட வழிவகுத்துத் தந்து; அதிகமாகக் கற்றுக் கொள்ள வலியுறுத்தும் ஏற்பாடுகள் தாம் இன்றைய கற்பிக்கும் முறையின் தலையாய நோக்கமாகத் திகழ்கிறது.

2. கற்பவர்க்கு வழி காட்டுதல்

கற்பிப்பவருக்கு ஒரு நோக்கம் மற்றும் கடமை இருப்பது. போல, கற்பவருக்கும் இருக்கிறது.

ஆசிரியர் கூறுகிற கருத்துக்களையும் விளக்கங்களையும் கேட்கிற போது மட்டும், மாணவர்களின் திறமை வளர்நது விடுவதில்லை.

கேட்ட சொல் விளக்கத்திற்கேற்ப, செயல் இயக்கத்திற்கு உட்படுத்தினால் தான், அவர்களின் திறமை வளர்கிறது. அறிவு மிகுதி பெறுகிறது.

பொம்மையை ஆட்டுவிக்கும் போது அது அழகாக இருக்கிறது. மாணவர்களை செயல் இயக்கத்தில் ஈடுபடுத்தும் பொழுது, அவர்களின் எண்ணம் தெளிவாக இருக்கிறது. திறமை வலிவாக மாறுகிறது. தேர்ச்சியும் பல தவறுகளைக் கடந்து, எழுச்சி பெறுகிறது.

ஆகவே, ஆசிரியர், தனது திட்டங்களுடன், வடிவமைத்துள்ள செயலமைப்புகளுடன், மாணவர்களை செயல்பட உற்சாகப்படுத்தி, வழிகாட்டும் பணியில் கடமையைச் செய்கிறவராகிறார்.

அந்த வழிகாட்டும் பணியில், மாணவர்களது செயல்திறன், தொழில் முன்னேற்றம், திறமையின் நீரோட்டம் அனைத்தையும் அறிந்து கொள்ள, ஆசிரியரால் முடியும். ஆமாம் நிச்சயமாக முடிகிறது.

ஆகவே, ஆசிரியர்கள் என்பவர்கள், கற்பிக்கிற போது. வேலை வாங்கும் மேஸ்திரியாக இல்லாமல், வழி காட்டும் துணையாகவே விளங்குகிறார். வளம் கூட்டுகிறார் என்பதாக விளங்க வேண்டும்.

3. கற்பவரை முன்னேற்றுதல்

ஒவ்வொரு குழந்தையும் அதற்கென்று தனியான குண நலன்கள், கூடிவரும் திறன் வளங்கள் கொண்டவையாகவே திகழ்கிறது.

அந்தத் திறனும் குணமும், அந்தக் குழந்தையின் வளரும் சூழ்நிலைக்கு ஏற்பவே பெருகி வளர்கிறது.

அந்தக் குழந்தையின் கற்கும் ஆர்வம்: ஆர்வம் செயல் வடிவம் பெற ஆசிரியரின் ஆலோசனை: அடுத்துத் தொடர்கின்ற செயலாக்கம். இப்படித்தான் மாணவக் குழந்தைகளின் முன்னேற்றத்தைப் படிப்படியாக வளர்த்துக் காட்ட முடியும்.

மாணவர்களுக்கு இயற்கையாகவே வளர்ச்சி உண்டு. அந்த வளர்ச்சியை அனுபவங்கள் மூலமாக, வளர்த்து விடுவதே ஆசிரியரின் கற்பிக்கும் பணியாக அமைந்திருக்கிறது.

முடியாத அளவுக்குக் கற்பனையைக் கூட்டி வைத்துக் கொண்டு காரியமாற்றச் சொல்வதும்; திட்டவட்டமான முடிவு இல்லாமல், குழப்பத்துடன் செயல்படச் சொல்வதும். வளர்ச்சி தருவதற்குப் பதிலாக, வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது. சில சமயங்களில் கெடுத்தும் விடுகிறது.

ஆகவே, மாணவர்களுக்கு எது தேவை, எது எளிது. எது இனிமையான அனுபவங்களைக் கொடுக்கும், எது ஏற்ற முன்னேற்றத்தை அளிக்கும் என்பனவற்றை ஆய்ந்து, அறிந்து, தெளிந்து, தேர்ந்து, திட்டவட்டமாகத் தருகிறபோது தான், திரண்ட பலன்களைப் பெற முடியும் என்பதை ஆசிரியர்கள் எண்ணிப்பார்த்து செயல்பட வேண்டும்.

ஆசிரியரின் சிறப்பான இந்தப் பணிக்கு உதவும் சில குறிப்புக்களைக் காண்போம்.

1. வகுப்பை சிறப்பாக நடத்துதல்.

2. கற்கும் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் ஊட்டி உற்சாகப்படுத்துதல்.

3. மாணவர்கள் விரும்பும் வண்ணம் செய்முறை காரியங்களைத் தேர்ந்தெடுத்தல்.

4. அவற்றை நடை முறைப்படுத்திட சுலபமாகக் கற்பிக்கும் முறைகளைத் தேர்ந்கெடுத்தல்.

5. இந்த செயலால், இன்ன விளைவுகள் நிகழும் என்று எதிர்பார்த்து, திட்டமிட்டுக் கற்றுத்தருதல்.

6. இறுதியில் ஏற்பட்ட முடிவுகள் பற்றி, மதிப்பீடு செய்தல்.

இப்படித் திட்டமிடுகிறபோத, கற்பிக்கும் முறையில், ஆசிரியர்கள் இரண்டு கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.

1. தனிப்பட்ட மாணவர்களின் உடல், வயது, இனம், பற்றிய வேறுபாடுகளை அறிந்து, அதற்கேற்ப கற்பித்தலை வலியுறுத்தல்.

2. தனிப்பட்ட அனைவரையும் ஒன்று கூட்டி; ஓர் அமைப்பாக இயங்க; அந்த அமைப்பு சமுதாய, அமைப்பாக பின்னாளில் உருவாவது போல, செயல்பட வைத்தல்.

இந்த இரண்டுக் கருத்துக்களின் பின்னணியில், சுதந்தரமாக வாழும் தத்துவமும்; சுகம் தரும் வாழ்வுத் தத்துவமும் அடங்கிக் கிடக்கின்றன.

ஆகவே, மாணவர்களுக்குக் கடினமான கருத்துக்களையும் கனிபோல சுவைக்குமாறு எளிதாக்கி, இனிதாக்கித் தந்து; மாணவர்களின் திறன்களுக்கு ஏற்ப செயல்களைத் துவக்கி, நாளுக்கு நாள் வளர்த்து; நிறைந்த பலன்களை விளைத்துத் தருவதே கற்பிக்கும் கலையாக விளங்குகிறது.

அந்தக் கற்பிக்கும் வழியில்தான் வளர்ச்சியும் எழுச்சியும் மிகுந்து, மெருகேறிய முன்னேற்றத்தை வழங்குகிறது என்பதை ஆசிரியர்கள், என்றும் நினைவில் கொண்டு, அற்பிக்க வேண்டும்.