உண்மை விளக்கம்-வெண்பா 01-10

விக்கிமூலம் இலிருந்து

[காப்பு][தொகு]

வண்மைதரு மாகமநூன் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்க முரைசெய்யத்- தி்ண்மதஞ்சே
ரந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம்.

பதப்பிரிப்பு:

வண்மை தரும் ஆகம நூல் வைத்த பொருள் வழுவா
உண்மைவிளக்கம் உரை செய்யத்- திண் மதம் சேர்
அந்தி நிறத் தந்தி முகத் தொந்தி வயிற்று ஐங்கரனைப்
பந்தம் அறப் புந்தியுள் வைப்பாம்.
கருத்துரை

நூலின் முதலில் பிள்ளையாருக்கு (விநாயகருக்கு) வணக்கம் சொல்லித் தொடங்குவது மரபு. அம்மரபுக்கேற்ப இந்நூலாசிரியரும், 'பிள்ளையார் வணக்கம்' கூறுகின்றார். விநாயகரைப் போற்றுமுகமாக அவரின் உருவத்தின் சிறப்பைப்பாடுகின்றார். விநாயகர் எப்படிப்பட்டவர்? திண்மதம் அதாவது அருளாகிய மதநீரை உடையவராம்! அந்திமாலைச் செந்நிறத்தவராம்!யானைமுகம் கொண்டவராம்; தொந்திவயிறுடையவராம்; ஐந்து கரம் கொண்டவராம்! அந்த ஐங்கரனை நிலையற்றபொருள்களின் மேல் கொண்ட பந்தமானது அறறுப்போகவேண்டியும், உள்ளத்துள் வைத்துத் துதிப்போம் என்கின்றார். அதுமட்டுமா? வளம்மிகுந்த ஆகமநூலுள், அச்செம்பொருளாம் இறைவன் கூறிய முப்பொருளை -பதி பசு பாசம் என்ற முப்பொருளை- தவறி்ல்லாமல் உரைத்திட, 'உண்மை விளக்கம்' என்ற பெயரில் வழுவாமல் கூறிட அந்தப் பிள்ளையாரை வணங்குகின்றேன் என்கின்றார். இந்த உலகம் என்பது பற்றிய -பிரபஞ்சம் என்பது பற்றிய- உண்மையைக் கூறப்போகின்றார், எனவே அதனைத் தவறில்லாமல் அதாவது வழுவாமல் கூற வேண்டி மூத்த பிள்ளையாரை வாழ்த்தி வணங்குகின்றார்.

"திண்மதஞ்சேர், அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்(று) ஐங்கரனைப்/ பந்தமறப் புந்தியுள் வைப்பாம்" அழகான சந்தம்மிக்க பாடலடிகள்! சுவைமிகுந்த இவ் அடிகளின் சொல்லழகு சுவைக்கத்தக்கவை, அழகு ததும்பியவை!
பதவுரை
வண்மைதரும்- வளம் தருகின்ற;
ஆகமநூல்= ஆகமநூலிலே அதாவது தத்துவ நூலிலே;
வைத்தபொருள்= பரமசிவன் ஆகிய முதற்பொருள் கூறிய முப்பொருளின் உண்மைப் பொருளை;
வழுவா= வழுவாது அதாவது தவறி்ல்லாமல்;
உண்மைவிளக்கம் உரைசெய்ய= உண்மைவிளக்கம் என்ற பெயரிலே உரைத்திட, (நான்) கூற;
திண்மதம் சேர்= திண்மையான மதநீரையுடையவனும்;
அந்திநிறத்= மாலைநேரத்து வானம் போன்ற சிவப்புநிறமுடையவனும்;
தந்தி முகத்= யானைமுகத்தவனும்;
தொந்தி வயிற்று= பருத்த வயிற்றினையுடைய அதாவது பேழை வயிற்றினையுடையவனும் ஆகிய;
ஐங்கரனை= ஐந்து கரங்களையுடைய பிள்ளையாரை;
பந்தமற= நிலையற்ற பொருள்களின் மேல் கொண்ட பற்றானது அற்றுப் போகவேண்டி;
புந்தியுள்= நம் உள்ளத்துள்;
வைப்பாம்= வைத்து அவர்க்கு முதல்வணக்கம் கூறுவோம், என்பதாம்.

நூல்[தொகு]

வெண்பா 01 (பொய்காட்டிப்)[தொகு]

பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந் தப்பொருளாம் பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந்தப் பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம்- பொய்காட்டாமெய் காட்டும் மெய் கண்டாய் விண்ணப்பம்- பொய் காட்டா
மெய்யா திருவெண்ணெய் வித்தகா சுத்தவினாமெய்யா திரு வெண்ணெய் வித்தகா சுத்த வினா
வையாநீ தான்கேட் டருள்.ஐயா நீ தான் கேட்டு அருள்.
கருத்துரை
தன் குருநாதராகிய மெய்கண்டாரைக் கேட்பதாக அமைந்தது இப்பாடல். மெய்கண்டார் எப்படிப்பட்டவர்? அவர் நிலையில்லாத பொருள்கள் இவை எனச்சுட்டிக் காட்டி, அவற்றின் மீது கொண்ட பொய்யான கருத்தை அகற்றும் திறன் மிக்கவர். மேலும், அறிவுஆனந்தமாக விளங்கும் மெய்ப்பொருளை, அதாவது உண்மைப்பொருளைக் காட்டும் வித்தகர்! அவரே மெய்கண்டவர், எனவேதான் அவரிடம் உண்மைத் தன்மை கூறவேண்டும் எனக்கு என விண்ணப்பிக்கின்றார், நூலாசிரியர்!

அவரைப் "பொய்ப்பொருளைக் காட்டாது, மெய்ப்பொருளையே காட்டும் திருவெண்ணெய்நல்லூர் வித்தகரே!" என்று அழைத்து, "உங்களிடம் நான் உண்மை அறிவதற்காக வினா கேட்கின்றேன், ஐயா எம் தலைவா! அதனை நீ கேட்டு எனக்குப் பதில் கூறியருளவேண்டும்" என்று அவரிடம் பணிவுடன் விண்ணப்பிக்கின்றார்.

வெண்பா 02 (ஆறாறு)[தொகு]

ஆறாறு தத்துவமே தாணவமே தன்றேதான்()ஆறு ஆறு தத்துவம் ஏது ஆணவம் ஏது அன்றே தான்

மாறா வினையேது மற்றிவற்றின்- வேறாகா()மாறா வினை ஏது மற்று இவற்றின்- வேறு ஆகா

நானேது நீயேது நாதனட மஞ்செழுத்துத்()நான் ஏது நீ ஏது நாதன் நடம் அஞ்சு எழுத்துத்

தானேது தேசிகனே சாற்று.(02)தான் ஏது தேசிகனே சாற்று.

கருத்துரை
ஆறாறு முப்பத்தாறு தத்துவம் என்று குறிப்பிடப்படும் அவைதான் என்ன?
என்றும் மாறாது உடனிருக்கும் ஆணவம் என்பதுதான் என்ன?
வினை என்பது என்ன?
இவை எ்லலாவற்றினும் வேறாகாது நிற்கும் நான் என்பது என்ன அதாவது நான் யார்?
நீ யார்? அதாவது உன்னுடைய உண்மைநிலை என்ன?
தலைவனாகிய நாதன் ஆடும் திருநடனத்தின் உண்மைப்பொருள் என்ன?
அஞ்செழுத்து என்றுகூறப்படும் பஞ்சாக்கரத்தின் உண்மை யாது?
குருநாதனே! இவற்றின் உண்மைத்தன்மையை எனக்கு விளக்கி அருள்வாயாக! எனக் கேட்கின்றார், தன் ஆசிரியரைப் பார்த்து!

வெண்பா 03 (உள்ளபடி)[தொகு]

உள்ளபடி யித்தை யுரைக்கக்கே ளுன்றனக்கு()உள்ளபடி இத்தை உரைக்கக் கேள் உன் தனக்கு

வள்ளலரு ளாலன்று வாய்மலர்ந்து- தெள்ளியசீ()வள்ளல் அருளால் அன்று வாய் மலர்ந்து- தெள்ளிய சீர்

ராகமங்கள் சொன்ன வடைவிலேயானந்த()ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த

யோக நிகழ்புதல்வா வுற்று.(02)யோகம் நிகழ் புதல்வா உற்று.

கருத்துரை
அதற்கு ஞானத்தந்தையாக விளங்கும் மெய்கண்டார் கூறுகின்றார், "ஆனந்தயோகத்தில் அமிழ்ந்திருக்கும் என் மகனே!, இதனை உற்றுக் கேள்! உனக்கு இதனை நான் உள்ளபடி உரைக்கின்றேன், கேள்!" என்கின்றார். மேலும் அவர், "இவ்வுண்மையினை வள்ளலாம் இறைவன், உயிர்கள்மேல் கொண்ட கருணையினால் அந்நாளில் கூறியருளினான், அவையே தெளிவான ஆகமங்கள் எனும் தத்துவநூல்களாம். அந்த ஆகமங்கள் சொன்னமுறைமையிலே, நான் அவற்றையெல்லாம் உள்ளபடி கூறுகின்றேன் உனக்கு" எனஉரைத்து, அவற்றின் உண்மைத் தன்மைகளை விவரிக்கத் தொடங்குகின்றார்.

வெண்பா 04 (நாற்கோணம்)[தொகு]

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி()நால் கோணம் பூமி புனல் நண்ணும் மதியின் பாதி

யேற்குமனல் முக்கோண மெப்போது- மார்க்கு()ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும்- ஆர்க்கும்

மறுகோணங் கால்வட்ட மாகாய மான்மா()அறு கோணம் கால் வட்டம் ஆகாயம் ஆன்மா

வுறுகாய மாமிவற்றா லுற்று.(04)உறு காயம் ஆம் இவற்றால் உற்று.



வெண்பா 05 (பொன்பார் )[தொகு]

பொன்பார் புனல்வெண்மை பொங்கு மனற்சிவப்பு () பொன் பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு

வன்காற் கருமைவளர் வான்தூம- மென்பா () வன் கால் கருமை வளர் வான் தூமம் - என்பார்

ரெழுத்து லவரயஅர் பாராதி கன்று () எழுத்து ல வ ர ய அர் பார் ஆதி கன்றும்

மழுத்தமதாய் நிற்கு மது. () அழுத்தமதாய் நிற்கும் அது.



வெண்பா 06 (குறிகுலிசம் )[தொகு]

குறிகுலிசம் கோகநதங் கொள்சுவத்தி குன்றா () குறி குலிசம் கோகநதம் கொள் சுவத்தி குன்றா

வறுபுள்ளி யாரமுத விந்துப் - பிறிவின்றி () அறு புள்ளி ஆர் அமுத விந்துப் - பிறிவு இன்றி

மண்புனல்தீக் கால்வான மன்னு மடைவேயென் () மண் புனல் தீக் கால் வானம் மன்னும் அடைவே என்று

றொண்புதல்வா வாகமமோ தும். () ஒண் புதல்வா ஆகமம் ஓதும்.


வெண்பா 07 (பாராதி )[தொகு]

பாராதி யைந்துக்கும் பன்னுமதி தெய்வங்க () பார் ஆதி ஐந்துக்கும் பன்னும் அதி தெய்வங்கள்

ளாரா ரயனாதி யைவரா - மோரோர் () ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் - ஓர் ஓர்

தொழிலவர்க்குச் சொல்லுங்காற் றோற்றமுத லைந்தும் () தொழில் அவர்க்குச் சொல்லும் கால் தோற்றம் முதல் ஐந்தும்

பழுதறவே பண்ணுவர்காண் பார். (07) பழுது அறவே பண்ணுவர் காண்பார்.


வெண்பா 08 (படைப்பன் )[தொகு]

படைப்ப னயனளிப்பன் பங்கயக்கண் மாயன் () படைப்பன் அயன் அளிப்பன் பங்கயம் கண் மாயன்

றுடைப்ப னுருத்திரனுஞ் சொல்லில் - திடப்பெறவே () துடைப்பன் உருத்திரனும் சொல்லில்- திடப்பெறவே

யென்றுந் திரோபவிப்ப ரீசர் சதாசிவரு () என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும்

மன்றே யநுக்கிரக ராம். (8) அன்றே அநுக்கிரகர் ஆம்.


வெண்பா 09 (மண்கடின )[தொகு]

மண்கடின மாய்த்தரிக்கும் வாரிகுளிர்ந் தேபதமா () மண் கடினமாய்த் தரிக்கும் வாரி குளிர்ந்தே பதமாம்

மொண்கனற்சுட் டொன்றுவிக்கு மோவாமல் வண்காற் () ஒண் கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் - வண் கால்

பரந்துசலித் துத்திரட்டும் பார்க்கிலா காய () பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம்

நிரந்தரமாய் நிற்கு நிறைந்து. () நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து.


வெண்பா 10 (உள்ளபடி )[தொகு]

உள்ளபடி மாபூத மோதினோ முன்றனக்குக் () உள்ளபடி மா பூதம் ஓதினோம் உன் தனக்குக்

கள்ளமிகு மைம்புலனுங் கட்டுரைக்கில் - மெள்ளவே () கள்ளம் மிகும் ஐம் புலனும் கட்டுரைக்கில் - மெள்ளவே

வோசை பரிச முருவஞ் சுவைநாற்ற () ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம்

மாசைதரு மைம்புலனே யாம். () ஆசை தரும் ஐம் புலனே ஆம்.


பார்க்க[தொகு]

உண்மை விளக்கம்-வெண்பா 11-20

உண்மை விளக்கம்-வெண்பா 21-30

உண்மை விளக்கம்-வெண்பா 31-40

உண்மை விளக்கம்-வெண்பா 41-

உண்மைவிளக்கம்

சித்தாந்தச் சாத்திரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=உண்மை_விளக்கம்-வெண்பா_01-10&oldid=28133" இலிருந்து மீள்விக்கப்பட்டது