எதிர்பாராத முத்தம்/பாடல் 20

விக்கிமூலம் இலிருந்து


20

வணிகர் வரும்போது

முத்து வணிகர் முழுதும் விற்றுச்
சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில்,

மகோதய முனிவர் வனத்தில் இறங்கியே;
சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார்.

போகும்போது பொன்கேட்டே அந்த
யாகஞ் செய்ய எண்ணு வோர்களின்

கொடு விஷம் பூசிய கூரம்பு போன்ற
நெடிய விழிகள் நீண்டன தமிழர்மேல்!

ஆத்திர முகங்கள் அங்குள தமிழரைப்
பார்த்தும் பாரா தனபோல் பதுங்கின!

தமிழர் கண்டு சந்தே கித்தனர்.
"நமது சொத்தும் நல்லுயிர் யாவும்

பறிபோகும் என்று படுகின்ற" தென்றே
அறிவுடைத் தமிழன் அறிந்து கூறினான்.

செல்லத் தொடங்கினச் செந்தமிழ் நாட்டினர்.
கொல்லச் சூழ்ந்தனர் கொடிய ஆரியர்.

தமிழர் பலரின் தலைகள் சாய்ந்தன!
வடவரிற் சிலரும் மாய்ந்து போயினர்.

தப்பிய சிற்சில தமிழர், வனத்தின்
அப்புறத் துள்ள அழகிய ஊரின்

பின்புற மாகப் பிரியும் வழியாய்ப்
பொன்முடி யோடு போய்ச் சேர்ந்தார்கள்.

சூறை யாடிய துறவிகள் அங்கே
மாறு பாட்டு மனத்தொடு நின்று,

"வைதிம் பழித்த மாபாவி தப்பினான்;
பைதலி வனத்தின் பக்க மாகச்

செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக்.
கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனை

அனுப்பி வைப்போம் வருவீர்
இளிதில் லாதீர் என்று போனாரே.