எனது நாடக வாழ்க்கை/மனிதன்

விக்கிமூலம் இலிருந்து
மனிதன்

பாலக்காடு வாரியர் ஹாலில் மனுஷ்யன் என்ற ஒரு மளையாள நாடகத்தைக்காணும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதன் பின் சில நாட்களில் தமிழ் வித்துவானும் மலையாள மொழியிலே நன்கு பயிற்சி பெற்ற வருமான திரு பா. ஆதிமூலனார் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மனிதன் நாடகத்தைத் தமிழில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். அவர் தாமே மலையாள நாடகாசிரியர் முதுகுளம் ராகவன் பிள்ளையைச் சந்தித்து, நாடகத்தின் உரிமையை வாங்கித் தமிழில் எழுதித்தருவதாக வாக்களித்தார். கோவை முகாமில் மனிதன் நாடகம் எங்கள் கையில் கிடைத்தது. திரு பா. ஆதிமூலஞரோடு திரு கா.சோமசுந்தரம் அவர்களும் வந்திருந்தார். இவர் ஏற்கனவே வைரம்செட்டியார் கம்பெனிக்கு எதிர்பார்த்தது என்னும் நாடகத்தை எழுதிக் கொடுத்தவர். சோமசுந்தரம் ஆதிமூலஞரின் மாணவர். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்தே மனிதனை உருவாக்கியிருப்பதாக அறிந்தோம்.

மனிதன் மனுஷ்யனின் தழுவல்

மனிதன் மனுஷ்யனின் மொழி பெயர்ப்பு அன்று; தழுவல் என்றே சொல்ல வேண்டும். ஆம்; கருத்து ஒன்றைத்தவிர நாடக அமைப்புகள் முழுவதும் தமிழ் ஆசிரியர்களால் உருவாக்கப் பட்டவையே. மலையாள மனுஷ்யன் நாடகத்திலே இருந்த, குறைபாடுகளையெல்லாம் போக்கி, கதையின் கருத்தைத் தெளிவு படுத்தும் முறையில் புதிய உத்திகள் சிலவற்றைச் சேர்த்து, தமிழ் மனிதனை மிக உயர்வாகப் படைத்திருந்தார்கள் ஆசிரியரும், மாணவரும். நாடகத்தின் கருப்பொருள் எங்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. இதனை வெற்றிகரமாகத் தயாரிப்பதற்குரிய வழி வகைகளை ஆராய்ந்தோம்.

காட்சிகள் ஓரளவுக்குத் தாயாரிக்கப்பட்டன. எல்லோருக்கும் பாடம் கொடுக்கப்பெற்றது. மனிதன் என்ற பெயருக்குரிய டாக்டர் சுகுமாரனாக தம்பி பகவதியும், ஒவியன் ராஜனாக நானும், டாக்டரின் மனைவி சாவித்திரியாக எம். எஸ். திரெளபதியும், ஓவியனின் தங்கை சரசாவாக எம். கருப்பையாவும், டாக்டரின் சிற்றன்னை பிரேமாவாக கே. ஆர். சீதாராமனும், பிரண்டாக (பிரண்டு) ராமசாமியும், டாக்டரின் தந்தையாக டி. என். சிவதாணுவும் பாத்திரங்களை ஏற்றார்கள்.

உருண்டோடும் மனிதன்

மின்சார நிபுணர் விஸ்வேஸ்வரன் இமயத்தில் நாம் ஆரம்பத்தில் தமிழ்க் கொடியை இமயத்தில் பறக்கவிட்டுக் காட்டியது போல் மனிதனிலும் ஒரு புதுமையைச் செய்தார். மதமிலான் - மானியான் - உத்தமன் - மன்னிப்பான் என்ற எழுத்துக்களை தனித்தனியே பெட்டிகளாக செய்து, பல்புகள் போட்டு, சிவப்புக் காகிதங்கள் ஒட்டி ம-னி-த-ன் என்ற ஒவ்வொரு எழுத்தும் தலைகீழாக உருண்டோடுவது போல் காட்டி, இறுதியாக, மனிதன் என்ற எழுத்துகள் நிலைத்து நிற்பதுபோல் மிக அருமையாக செய்திருந்தார்.

5-8-48இல் மனிதன் நாடகம் மிகச்சிறப்பாக அரங்கேறியது. அன்று கோவை நகரசபைத் தலைவர் டாக்டர் நச்சப்பா தலைமை வகித்தார். அன்றைய வசூல் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கருப்பையா பெண் வேடம்!

சரசுவாக நடித்த எம். கருப்பையாவும், பிரேமாவாக நடித்த கே. ஆர். சீதாராமனும் மிக அற்புதமாக நடித்தார்கள். சீதாராமனும் பெண் வேடத்தில் இளமையிலிருந்தே அனுபவம் பெற்றவர். எம். கருப்பையாவின் நடிப்புத்திறமையை பற்றித் தான் எல்லோரும் வியந்தோம். பல்வெறு உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டிய பாத்திரம் சரசு. இந்தப் பாத்திரத்தைத் திறமையாக நடித்து எல்லோருடைய பாராட்டுதலையும் பெற்றார் கருப்பையா. பிரண்டு ராமசாமியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவருக்குப் பிரண்டு என்ற அடை மொழி வந்ததே மனிதன் நாடகத்தின் மூலம்தான். இவருடைய நடிப்பின் சிறப்பினைப் பற்றியும் மனிதன் நாடகத்தின் மகத்தான வெற்றியைப் பற்றியும் இரண்டாவது பாகத்தில்சொல்ல எண்ணி விருக்கிறேன்.

நாடகத்திற்கான பாடல்களையும் வித்துவான் பா. ஆதி மூலனார் எழுதியிருந்தார். மனிதன் நாடகம் ஒழுக்கத்தை வலியுறுத்தும் உன்னதமான நாடகமாக விளங்கியது.

தமிழ் முரசுக்கு உதவி நாடகம்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்கள் நடத்தி வந்த தமிழ் முரசு என்னும் திங்கள் இதழின் நிதிக்காக 9-6-48இல் வித்தியா சாகரர் நாடகம் நடைபெற்றது. இந்நாடகம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ம. பொ, சி. அவர்கள் கோவைக்கு வந்திருந்தார். நானும் தலைவருமாகச் சில நண்பர்களிடம் சென்று நாடகத்திற்கென்று நிதியும் திரட்டினோம். ஆக, நடைபெற்ற வித்தியாசாகரர் நாடகத்திற்கு தியேட்டர் வசூல் நிதி வசூல் எல்லாமாகச் சேர்த்து ரூ. 3000 வசூலாயிற்று. இத் தொகையை தலைவரிடம் கொடுத்து தமிழ் முரசுக்கு வாழ்த்துக் கூறினோம்.

15-8-48 வரை மனிதன் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. சின்னண்ணா சென்னைக்குச் சென்று ஒற்றை வாடைத் தியேட்டரைப் பேசி முன் பணமும் கொடுத்து வந்து விட்டபடியால் மனிதன் நாடகத்திற்கு நல்ல வசூலாகியும், மேற்கொண்டு நடத்த முடியவில்லை.

16- 8- 48 இல் மனோகராவைப் பட்டாபிஷேகமாக நடத்திக் கோவை நாடகத்தை முடித்துக் கொண்டோம்.

ஏறத்தாழ ஒராண்டுகாலம் கோவையில் நாடகங்கள் நடித்தோம். பில்ஹணன் படம் எடுத்து முடிக்கப் பெற்றது. சமூக நாடகங்கள் மூன்றும், வரலாற்று நாடகம் ஒன்றும் ஆக நான்கு புதிய நாடகங்கள் தயாராயின.

தலைநகராகிய சென்னை மாநகருக்கு வந்து நாடகங்கள் நடத்த வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா, திரு. நாரண துரைக் கண்ணன், பேராசிரியர் வ.ரா., சொல்லின்செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, தலைவர் ம. பொ. சி. முதலிய பல அறிஞர்கள் எங்களை அடிக்கடி வற்புறுத்தி வந்தனார். எல்லோருடைய விருப்பத்தையும நிறைவேற்றும் நோக்கோடு, 19-8-48 இரவு கொச்சி எக்ஸ்பிரசில் தலைநகராகிய சென்னை மாநகருக்குப் பயணமானோம்.



(முதல் பாகம் நிறைவுறுகிறது)