என் சரித்திரம்/103 சுப்பிரமணிய தேசிகர் வியோகம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—103

சுப்பிரமணிய தேசிகர் வியோகம்

த்துப்பாட்டை வெளியிடலாமென்று முடிவு செய்த போது என் கையில் அந்நூலின் ஏட்டுப் பிரதிகள் இரண்டே இருந்தன. அவற்றுள் ஒன்று அபூர்த்தியானது. வேலூர்க் குமாரசாமி ஐயர் கொடுத்த பிரதி பூர்த்தியாக இருந்தாலும் வழுக்கள் மிகுதியாகக் காணப்பட்டன. நச்சினார்கினியர் உரையும், சிறுசிறு பகுதிகளாக அமைத்துள்ள மூலமும் பிறவும் ஒன்றாகச் சேர்ந்து கலந்திருந்தன. அவர் செய்யும் அன்வயத்தினால் பாட்டின் உருவம் இன்னதுதானென்று நிச்சயிப்பது கஷ்டமாக இருந்தது. பின்னும் சில பிரதிகள் கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாமென்று எண்ணினேன்.

சென்னைப் பிரயாணம்

அச்சமயத்தில் தியாகராச செட்டியார் தாம் இயற்றிய மருந்து வெண்பா மாலை, திருச்சிற்றம்பல வெண்பா அந்தாதி, திருவொற்றியூர்பாதி திருவாரூர்பாதி அந்தாதி என்னும் மூன்று பிரபந்தங்களை அனுப்பி அச்சிட வேண்டுமென்று எழுதியிருந்தார். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கு அப்போது கண்ணின் நோய் அதிகரித்து மிக்க துன்பம் உண்டாக்கியது. சென்னையிலிருந்து ‘பிராக்மன்’ என்ற ஆங்கிலக் கண் வைத்தியர் வந்து கண்ணைப் பரிசோதித்தார். தேசிகருடைய தேகத்தில் வன்மை குறைந்து விட்டதென்று அவர் சொல்லியதோடு, ஆதீன சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்வதாயின் முன்னாடியே செய்து விடுவது நலமென்றும் பெரிய காறுபாறு தம்பிரானிடம் தனித்துக் கூறினார். சின்னப் பட்டத்தின் பொருட்டுச் சென்னையிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்த அருணாசலத் தம்பிரானென்பவரை யாவரும் பட்டத்துக்குட்டியென்று வழங்கி வந்தனர். அவருக்கு உடனே சின்னப் பட்டம் கட்டி விடலாமென்றெண்ணிச் சுப்பிரமணிய தேசிகர் நல்ல நாள் பார்த்துப் பத்திரிகையும் எழுதச் செய்தார். சென்னைக்குச் சென்று அப்பத்திரிகையை அச்சிட்டு வரவேண்டு மென்று எனக்குக் கட்டளையிட்டார். அப்போது கிறிஸ்துமஸ் விடுமுறையாக இருந்தமையால் அங்ஙனமே செய்வதாக ஒப்புக் கொண்டேன். தியாகராச செட்டியாருடைய பிரபந்தங்களை அச்சிடுவதற்கும் பத்துப்பாட்டை அச்சிடும் முயற்சிக்கும் சென்னைப் பிரயாணம் அனுகூலமாக இருக்குமென்று நினைத்தேன்.

நல்ல வேளை பார்த்து என்னைத் திருவாவடுதுறையிலிருந்து தேசிகர் அனுப்பினார். எனக்கு மாத்திரம் ஏதோ உள்ளுக்குள்ளே ஒரு பயங்கரமான குறிப்புத் தோற்றியது. அவருடைய பலஹீனத்தைக் கண்டு வருந்தினேன். ஒரு முறை விடை பெற்றுக்கொண்டு போனவன் மறுபடியும் வந்து அவரைப் பார்த்துவிட்டுச் சென்றேன்.

இராசகோபாலாசாரியர் செய்த உதவி

சென்னையில் இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கித் தியாகராச செட்டியாருடைய பிரபந்தங்களையும் திருவாவடுதுறைச் சின்னப் பட்டப் பத்திரிகையையும் அச்சுக்குக் கொடுத்தேன். பத்துப் பாட்டுக் கையெழுத்துப் பிரதிகளைக் கையிலே கொண்டு போயிருந்தேன். மூலம் தனியேயில்லாத அந்தப் பிரதியை என் நண்பர் தேரழுந்தூர் இராசகோபாலாசாரியரிடம் காட்டி, “பிரதியில் தனியே மூலம் இல்லை, உரையுடன் சிறு சிறு பகுதிகள் மாத்திரம் உள்ளன. அந்தப் பகுதிகளும் அன்வயத்தால் முன்பின் மாறி இருக்கின்றன” என்று கூறினேன். அவர், “அந்தச் சிறு பகுதிகளான மூலங்களையெல்லாம் தனியே எழுதி வைத்துக்கொண்டால் பிறகு பொருளைக் கொண்டும் வேறு ஆதாரங்களைக் கொண்டும் ஒழுங்கு படுத்திக் கொள்ளலாமே” என்றார். அவருக்குச் சட்டென்று தோற்றிய அந்த யோசனை அதுகாறும் எனக்குத் தோற்றவில்லை. முல்லைப் பாட்டை அவர் கையிலே கொடுத்தேன். அவர் சில பகுதிகளை எழுதிக் காட்டினார். அவ்வாறே செய்வதாகச் சொல்லி அவருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொண்டேன். பிற்காலத்தில் எவ்வளவோ சிரமமான ஏட்டுப் பிரதிகளோடு போராட்டிக் கஷ்டப்பட்டு நல்ல அனுபவம் அடைந்தாலும் அச் சமயம் அவர் தெரிவித்தது எனக்குப் பரம உபகாரமாக இருந்தது.

சேலம் இராமசுவாமி முதலியாரோடு பொழுது போக்குவது எனக்கு இன்பமாக இருந்தது. பூண்டி அரங்கநாத முதலியாரையும் கண்டு பத்துப்பாட்டை ஆராயத் தொடங்கியிருக்கிறேனென்று தெரிவித்தேன். அவர் கேட்டு மகிழ்ந்தார்.

சின்னப் பட்டப் பத்திரிகை அச்சிட்டானவுடன் தபாலில் திருவாவடுதுறைக்கு அனுப்பி விட்டேன். தியாகராச செட்டியாருடைய பிரபந்தங்கள் அச்சிட்டு நிறைவேறும் நிலையில் இருந்தன.

துக்கச் செய்தி

ஒரு நாள் காலையில் எட்டு மணிக்கு இராமசுவாமி முதலியார் பங்களாவில் இருந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு கடிதம் வந்தது. பார்த்தேன்; கண்களில் நீர் வழிய அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்து விட்டேன். திருவாவடுதுறை ராயசம் பொன்னுசாமி செட்டியார், “இன்று (7-1-1888) மாலை நான்கு மணிக்கு மகா ஸந்நிதானம் பரிபூரணமாயிற்று. குறிப்பிட்டிருந்தவர்களுக்கே சின்னப் பட்டம் இன்று பன்னிரண்டு மணிக்கு ஆகிவிட்டது” என்று அதில் எழுதியிருந்தார்.

என் உள்ளத்துள் பெருந் துக்கம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்த உலகத்தில் பிள்ளையவர்களுக்குப் பின்பு பற்றுக்கோடாக யார் உள்ளார்களென்று ஏங்கியிருந்த எனக்கு நல்ல கொள்கொம்பாக உதவிக் கற்பகம் போல் வேண்டுவனவெல்லாம் வழங்கி ஆதரித்த பெருவள்ளலை இறுதிக் காலத்தில் உடனிருந்து பார்க்க முடியாமல் ஊழ்வினை தடுத்துவிட்டதே என்ற ஏக்கம் தலைக் கொண்டது. உடனே ஒரு கார்டை எடுத்து அன்றிரவே புறப்பட்டு வருவதாக எழுதினேன். கீழே “இரவலரும் நல்லறமும் யானுமினி யென்பட நீத்து”ச் சென்றாயே என்ற கம்ப ராமாயண (ஆரண்ய காண்டம், சடாயு காண்படலம், 21) அடியை எழுதித் திருவாவடுதுறைக்கு அனுப்பினேன்.

அப்போது இந்த உலகத்தையே நான் மறந்தேன். அந்த நிமிஷத்திலேயே திருவாவடுதுறைக்குப் போக வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று.

இராமசுவாமி முதலியார் இந்தச் செய்தியை அறிந்து மிக்க வருத்தமடைந்தார். எனக்கு ஆறுதல் கூறினார். தேசிகருடைய உயர்ந்த குணங்களை எடுத்துச் சொன்னார். எனக்கோ துக்கம் பொங்கியது. அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன்.

இரங்கற் பாடல்கள்

நின்ற இடத்திலே நின்றேன்; ஒன்றும் ஓடவில்லை; புஸ்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்று விட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி, எனக்கு வந்த பெருமையைக் காணும்போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வது போல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்த மகோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன். என் துக்கத்தை ஆற்றிக் கொள்ள வழியில்லை. சில செய்யுட்கள் இயற்ற எண்ணினேன். என் உள்ளத்துயரமே செய்யுளாக வந்தது. அவர் திருவுருவத்தை இனிப் பார்க்க இயலாதென்ற நினைவு வரவே நான் மனத்திற் பதித்து வைத்திருந்த அவ்வுருவம் எதிர் நின்றது.

“கருணையெனுங் கடல்பெருகு மடையாய நினதுவிழிக்
      கடையுஞ் சீதத்
தருணமதி யனையமுக மண்டலமுந் தெளியமுத
      தாரை போல
வருமினிய மொழிவாக்கும் வருவோர்க்கு வரையாது
      வழங்கு கையும்
திருவருட்சுப் பிரமணிய குருமணியே காண்பதென்று
      சிறியேன் மன்னோ.”

[வரையாது-கணக்கின்றி.]

நான் சென்னைக்குப் புறப்படும் போது “நல்ல வேனையில் புறப் படவேண்டும்” என்று அவர் சொல்லியனுப்பியது ஞாபகத்திற்கு வந்தது. நல்ல வேளையிற் புறப்பட்டதாகத்தான் முன்பு எண்ணினேன். ஆனால் அந்தச் சமயத்திலோ அந்த வேளை மிகப் பொல்லாத வேளையென்று எண்ணும்படி ஆகிவிட்டது.

“நல்வேளை தனிற்சென்னை நகர்க்கேகப் புறப்படென
      நவின்றே யென்னை
ஒல்வேளை தனில்விடுத்தாய் அவ்வேளை நினைப்பிரிய
      உஞற்றும் தீய
அல்வேளை யென்பதனை அறியாது பிரிந்து துய
      ரடைந்தே னந்தோ
வில்வேளை வென்றபெரு விறலுடைச்சுப் பிரமணிய
      விமல வாழ்வே.”

[உஞற்றும்-செய்யும். வேளை வென்ற பெருவிறல்-மன்மதனைத்துறவொழுக்கத்தால் வென்ற வீரம்.]

இவ்வாறு வேறு சில விருத்தங்களைப் பாடினேன்; சில வெண்பாக்களையும் சில கண்ணிகளையும் இயற்றினேன். அவற்றுள் இரண்டு கண்ணிகள் வருமாறு:—

“தெய்வத் தமிழின் செழுஞ்சுவையைப் பாராட்டும்
சைவக் கொழுந்தின் சபைகாண்ப தெந்நாளோ?”
“இன்றிரப்பார் வந்தா ரிலரென் றியம்புகுணக்
குன்றின்மொழி கேட்டுவகை கூருநாள் எந்நாளோ?”

அந்தப் பாடல்களை வைத்துக்கொண்டு தனிமையிலே வருந்தினேன். என் துரதிருஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டேன். அன்று இரவே புறப்பட்டு உடன்வந்த சிலருடன் நேரே திருவாவடுதுறையை அடைந்தேன்.

அங்கே நான் விரும்பிய பொருளைக் காண முடியுமா? தேசிகர் நிற்கும் இடம், இருக்குமிடம், பாடம் சொல்லும் இடம் முதலிய இடங்களையெல்லாம் போய்ப் பார்த்தேன். அங்கே அவருடைய உருவம் இருப்பதாகப் பிரமை கொண்டேன். காணாமல் மயங்கினேன்.

புதிய தலைவர்

புதிய தலைவர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் என்னும் திருநாமத்தோடு பதினேழாம் பட்டத்து ஆதீனத் தலைவராக விளங்கினார். அவர் என்பால் அன்போடு பேசி ஆறுதல் கூறினார். என்னுடைய என்னுடைய துயரம் ஆற்றுவிப்பார் முயற்சிக்கு அப்பாலதாக இருந்தது. திருவாவடுதுறையில் எல்லாம் இருந்தன. ஒரு தலைவர் போனார்; ஆனால் வேறொரு தலைவர் வந்துவிட்டார். சமாதியடைந்த தலைவருக்குக் குரு பூஜையும் புதிய தலைவருக்குச் சிறப்பும் நடைபெற்றன. அப்போது அந்த ஊர் திருவிழாக் கோலத்திலே இருந்தது.

ஆனாலும் சுப்பிரமணிய தேசிகருடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள் உள்ளத்தில் துக்கந்தான் நிரம்பியிருந்தது. அவர்கள் சம்பிரதாயத்திற்காக உடம்பைச் சுமந்துகொண்டு அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தனர்.

குரு பூஜை

முறைப்படி சுப்பிரமணிய தேசிகருடைய சமாதிக்கு ஒவ்வொரு நாளும் பூஜை நடைபெற்றது. இறுதி நாளன்று விசேஷமான பூஜை நிகழ்ந்தது. அதன் பொருட்டுப் பல ஊர்களிலிருந்து மடத்தைச் சேர்ந்த அடியார்கள் வந்திருந்தனர். திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான பிரபுக்களும் வித்துவான்களும் வந்தார்கள். அவர்களோடு சம்பாஷித்துக் கொண்டிருந்தேன்.

திருநெல்வேலியில் திருவாவடுதுறை மடத்துச் சிஷ்யர்கள் பலர் உண்டு. அவர்களுள் மிகமுக்கியமானவராகிய அம்பலவாண கவிராயரென்பவரது பரம்பரையிற் பிறந்தவர்களாகிய கவிராச நெல்லையப்பப் பிள்ளை, கவிராச ஈசுவர மூர்த்தியா பிள்ளை என்று இரண்டு கனவான்கள் உண்டு. இளையவராகிய கவிராச ஈசுவர மூர்த்தியா பிள்ளையென்பவர் அப்போது குரு பூஜைக்கு வந்திருந்தார். சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாக அவர் வீட்டு ஏட்டுப் பிரதி எனக்குக் கிடைத்தது. பத்துப் பாட்டு பிரதியும் கிடைக்கலாமென்ற நோக்கத்தால், அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “சிந்தாமணிப் பதிப்புக்குத் தங்கள் பிரதி உபயோகமாக இருந்தது. இப்போது பத்துப் பாட்டைப் பதிப்பிக்க உத்தேசித்திருக்கிறேன். ஸந்நிதானம் இருந்தால் எவ்வளவோ அனுகூலமாக இருக்கும். துரதிருஷ்டவசத்தால் அவர்களை இழந்து விட்டோம். உங்களைப் போன்ற அன்பர்கள் ஆதரவு எனக்கு அதிகமாக வேண்டும். பழைய தமிழ் நூலாராய்ச்சி மிகவும் சிரமத்தைத் தருகிறது. பத்துப் பாட்டு ஏட்டுப் புஸ்தகங்கள் இன்னும் சில கிடைத்தால் நலமாக இருக்கும். திருநெல்வேலிக்கு வந்து தங்கள் வீட்டு ஏடுகளைப் பார்க்க எண்ணி யிருக்கிறேன். அதற்கு அனுமதி அளிப்பதோடு தங்களைச் சேர்ந்த மற்ற வித்துவான்கள் வீட்டிலுள்ள ஏடுகளையும் பார்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். எந்தச் சமயத்தில் வந்தாலும் உதவி புரிவதாக அவர் வாக்களித்தார்.

ஒரு கண்டனம்

குரு பூஜையின் இறுதி நாள் இரவு மடத்தில் ஒரு சபை கூடியது. புதிய தலைவராகிய அம்பலவாண தேசிகரது முன்னிலையில் பலர் சுப்பிரமணிய தேசிகர் பரிபூரணமானதற்கு இரங்கியும், புதிய தலைவரை வாழ்த்தியும் தாம் இயற்றிய செய்யுட்களைச் சொல்லிப் பொருள் கூறினார்கள். நான் அப்போது அங்கே இல்லை.

ஆதீனத்து அடியாராகிய பழனிக் குமாரத் தம்பிரானென்பவர் தாம் இயற்றிய இரங்கற் பாக்களை வாசித்து வந்தார். அவற்றுள் ஒரு பாட்டின் பகுதியாகிய, “குருமணி சுப்பிரமணிய குலமணியா வடுதுறைப்பாற் கொழித்துக் கொண்ட ஒரு மணி சிந்தாமணியை யுதவுமணி” என்பதற்குப் பொருள் சொல்லும் போது, “சிந்தாமணியை உதவுமணி” என்ற பகுதிக்கு, ‘இந்த மடத்தில் தமிழ்க் கல்வி கற்று இப்போது கும்பகோணம் காலேஜிலிருக்கும் சாமிநாதையர் சீவகசிந்தாமணியைப் பதிப்பிப்பதற்கு ஊக்கமளித்துப் பிரதி முதலியன கொடுத்த மகாஸந்நிதானத்தின் அருஞ் செயலை நினைத்தும் சொன்னேன்’ என்று ஒரு காரணம் கூறினாராம். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர், “சைவ மடமாகிய இந்த இடத்தில் ஜைன நூலுக்குச் சிறப்புத் தருவது நியாயமன்று. சாமிநாதையர் இந்தமடத்திற்கு வேண்டியவராக இருந்தும் உமாபதி சிவாசாரியார் ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ என்று சொல்லியிருக்கும் ஜைன நூலை அச்சிட்டது தவறு. அதை நாம் கண்டிப்பதோடு அந்த நூல் பரவாமல் இருக்கும்படி செய்ய வேண்டும்” என்றாராம். அவர் அயலூரிலிருந்து வந்து மடத்திற் சில காலம் தங்கியிருந்தவர். எனக்கும் பழக்கமானவரே.

அதைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும் திடுக்கிட்டனர். அவர்பால் அவர்களுக்குக் கோபமும் உண்டாயிற்று. அவரை உடனே எதிர்த்துத் தக்க நியாயங்கள் கூறி அடக்கி விட்டார்கள். என் நண்பராகிய புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் அவர்மீது சில வசை கவிகளைப் பாடிப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர் காதிற் படும்படி சொல்லிக் காட்டச் செய்தார்.

இந்தச் செய்திகளைக் கேட்டு நான் வருத்தமடைந்தேன். என் அன்பர்கள், “தூஷணை செய்வதே தம் தொழிலாகக் கொண்ட பொறாமைக்காரர்கள் சிலர் உலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறு காரணம் கிடைத்தாலும் போதும்; அதைப் பற்றுக்கோடாக வைத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். இதற்கெல்லாம் வருந்திப் பயனில்லை. உங்கள் உண்மை மதிப்பையும் உழைப்பையும் தெரிந்துகொண்டவர்கள் அவர்கள் செயலைப் பொருட்படுத்தவே மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

குரு பூஜை நிறைவேறியது. வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்கள் தங்கள் ஊருக்குச் சென்றனர். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அன்புச் செயல்களை நினைந்து நினைந்து பொழுது போக்கும் அளவோடு நான் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டேன்.