என் சரித்திரம்/73 நானே உதாரணம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—73

நானே உதாரணம்

ப்பிரமணிய தேசிகர் எழுபொற் கோட்டை வழியாகக் காளையார் கோயில் முதலிய ஸ்தலங்களைத் தரிசனம் செய்து கொண்டு மதுரைக்கு அருகிலுள்ள திருப்பூவணத்தை அடைந்து அங்கே பரிவாரங்களுடன் தங்கினார். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்ட காலங்களிலும், தேவாரம், தலபுராணங்கள் முதலியவற்றைப் படித்த காலங்களிலும் பல சிவஸ்தலங்களுடைய வரலாறுகளை நான் அறிந்திருந்தேன். பிள்ளையவர்களுக்கும் அவரோடு பழகியவர்களுக்கும் சிவஸ்தல தரிசனத்தில் ஆவல் உண்டு. நான் அத்தகைய சமூகத்திற் பழகியவனாதலின் இடையிடையே சிவ ஸ்தல தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் அந்த ஸ்தலங்களைப் பற்றிய செய்திகளை ஞாபகப்படுத்திக் கொள்வதோடு புதிய விஷயங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்வேன்.

பாண்டிநாடு புகுதல்

சோழ நாட்டைக் கடந்து பாண்டிநாட்டெல்லையில் புகுந்தவுடன் சுப்பிரமணிய தேசிகர், “இது வரையில் சோழ நாட்டைத் தான் நீர் பார்த்திருக்கிறீர் இனிமேல் பாண்டி நாட்டின் வளத்தைக் காணலாம்” என்றார். அப்படிச் சொல்லும்போது அவர் குரலில் ஓர் உத்ஸாகம் இருந்தது. தம் சொந்த நாடாகிய பாண்டி நாட்டை அடையும்போது அவருக்கு உத்ஸாகம் இருப்பது இயல்பு தானே?

திருவிளையாடற் புராணத்தைப் பல முறை படித்தும் பிரசங்கம் செய்தும் ஈடுபட்ட நான் பாண்டி நாட்டின் பெருமையை நன்றாக அறிந்திருந்தேன். அந்நாட்டு எல்லையை அணுகிவிட்டோமென்பதைக் கேட்டவுடன் எனக்கும் அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. திருப்பூவணத்திற்கு வந்தபோது அந்த ஸ்தலத்தையும் வைகை நதியையும் கண்டு என் கண்கள் குளிர்ந்தன. பொன்னனையாளெனும் கணிகையினுடைய முத்தத்தை ஏற்றுக் கொண்டு கன்னத்தில் தழும்புற்ற பெருமானைத் தரிசித்தேன். மதுரைத் தலத்தைக் காண வேண்டுமென்ற விருப்பம் வர வர மிகுதியாயிற்று.

சுப்பிரமணிய தேசிகர் திருப்பூவணத்தில் தங்கியிருப்பதை அறிந்து மதுரையில் இருந்த கனவான்களும், மதுரை ஆலயத் திருப்பணிச் செட்டியார்களும் அங்கே வந்து தேசிகரைக் கண்டு வரவேற்று முகமன் கூறிவிட்டுச் சென்றார்கள்.

மதுரை செல்லுதல்

பிறகு தேசிகர் அங்கிருந்து புறப்பட்டு ஒருநாள் காலையில் மதுரையைச் சார்ந்த வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மேல் கரையிலுள்ள கோயிலில் பரிவாரங்களுடன் தங்கினார். அவ்விடத்தில் ஆதிமூலம்பிள்ளை என்பவர் பலவிதமான அலங்காரங்கள் செய்து மிக்க விமரிசையுடன் பூஜை முதலியவற்றைச் செவ்வனே நடத்தி மகேசுவர பூஜையும் செய்வித்து ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இரண்டு வேளையும் அன்னமளித்தார். அவர் பெரிய கண்டிராக்டர்; தருமசிந்தை மிக்கவர்; குரு பக்தியும் சிவ பக்தியும் நிரம்பியவர்; மதுரை வாசிகளுக்கு அவரிடத்திற் பேரன்பு இருந்தமைக்கு அடையாளமாக, ‘ஆதிமூலம் பிள்ளைத் தெரு’ என்று ஒரு தெருவிற்குப் பெயர் வைத்திருக்கின்றனர்.

மதுரை நகரத்திலிருந்த கலெக்டர் ஆபீஸ் சிரஸ்தேதாராக இருந்தவரும் கௌரவம் மிக்கவருமாகிய வேங்கடசாமி நாயுடு என்பவரும், வேறு சில கனவான்களும் மறு நாட் காலையில் வந்து விமரிசையுடன் தேசிகரை அழைத்துச்சென்றனர். வையையின் தென்கரையில் தேசிகர் தங்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த ஒரு சத்திரத்தில் அவர் இறங்கினார். அதனைச் சுற்றி வெகு தூரம் வரையில் கொட்டகைகளும் பந்தல்களும் போட்டு அலங்கரிக்கப் பெற்றிருந்தன.

ஆயிரக்கணக்கான பேர்கள் உண்ணுவதற்குப் போதுமான அரிசி முதலிய பொருள்கள் திருவாவடுதுறையிலிருந்து வண்டி வண்டியாக வந்து குவிந்தன. வையையின் இரு கரைகளிலும் நெருக்கமாக உள்ள தென்னஞ்சோலைகளும் அந்நதியில் விசாலமான மணற்பரப்பும் நீரோட்டமும் கண்களைக் கவர்ந்தன.

கனவான்களின் வருகை

அப்பொழுது அங்கே ஸ்மால்காஸ் கோர்ட்டு ஜட்ஜாக இருந்த ஸர். டி, முத்துசாமி ஐயர், ஜட்ஜ் முத்துசாமி செட்டியார், டிப்டி கலெக்டர் சூரிய மூர்த்தியா பிள்ளை, திருவனந்தபுரம் திவானாக இருந்த திருமங்கலம் முன்ஸீப் கிருஷ்ணஸாமி ராவ் முதலிய பிரபலஸ்தர்கள் தேசிகரால் அழைக்கப்பட்டு வந்து அவரோடு சல்லாபம் செய்து சென்றார்கள். முத்துசாமி ஐயருடைய புகழ் அப்பொழுதே ஓரளவு பரவியிருந்தது. அவரை நான் கண்டபோது அவரது ஆடம்பரமில்லாத தோற்றமும், மெல்லென்ற வார்த்தைகளும் எனக்கு வியப்பை உண்டாக்கின.

கல்லிடைக் குறிச்சியிலிருந்து சின்னப் பண்டார ஸந்நிதியாகிய ஸ்ரீ நமசிவாய தேசிகர் வந்து சேர்ந்தார். திருவையாற்றிலிருந்து மகா வைத்தியநாதையரும் அவர் தமையனாரும் வந்து தேசிகரோடு தங்கியிருந்தனர். தேசிகர் என்னை அவர்களிடம் ஒப்பித்து, “இவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். யாத்திரை முழுவதும் நம்முடன் இருக்கவேண்டும்” என்றார். அவர்களுடைய வரவினால் நானும் பெரு மகிழ்ச்சியை அடைந்தேன்.

கும்பாபிஷேகச் சிறப்பு

மகா கும்பாபிஷேகத்திற்காக வந்திருந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள ஜமீன்தார்களும், மிட்டாதார்களும், தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் வந்து கூடியிருந்தனர். தமிழ்நாட்டின் பல பாகங்களில் உள்ள பிரபுக்களெல்லாம் அந்நகரத்தில் ஒருங்கே சேர்ந்திருந்தனர். அவர்களிற் பெரும்பாலோர் வந்து சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சென்றனர். அவர்கள் வரும்போதெல்லாம் உடனிருந்து பாடல் சொல்லும் வேலையில் நான் ஈடுபட்டிருந்தேன்.

கும்பாபிஷேகம் உரிய காலத்தில் மிக்க சிறப்போடு நடை பெற்றது. சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தார். நானும் சென்று தரிசித்தேன். அக்கூட்டத்தில் அவ்வாலயத்தின் உண்மை அழகைத் தெரிந்து மகிழச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்போது தான் முதன் முதலாக மணி ஐயரை நாங்கள் பார்த்தோம். தேசிகரும் அவரைச் சேர்ந்தவர்களும் சிரம மின்றிக் கும்பாபிஷேக தரிசனம் செய்வதற்கு அவர் உடனிருந்து உதவி புரிந்தார். அவரைக் கண்ட அந்தச் சில நிமிஷங்களில் அவருடைய சுறுசுறுப்பையும், உபகார சிந்தையையும், ஜனங்களுக்கு அவர்பால் இருந்த மதிப்பையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

மணி ஐயர்

கும்பாபிஷேக தரிசனத்திற்குப் பின் தேசிகர் தம் விடுதிக்குச் சென்றார். மணி ஐயரைக் கண்டது முதல் அவரோடு சில நேரம் பேசி இன்புற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. ஆதலால் தக்க மனிதரிடம், “தங்களைப் பார்த்துப் பேசிப் பழக வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருக்கிறது. நாம் அங்கே வந்து பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு நிமிஷமும் தங்களைக் காண வேண்டுமென்ற ஞாபகத்தோடேயே இருக்கிறோம்” என்று சொல்லியனுப்பினார். அதைக் கேட்டவுடன் மணி ஐயர், “நமக்கும் அவர் களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஒரு குறிப்பிட்ட வேளையில் வருவதாக முன்னமே தெரிவித்து அவ்வாறே தேசிகருடைய விடுதிக்கு வந்தார். அந்த மேதாவியைப் பார்க்க வேண்டுமென்றும், அவரது பேச்சைக் கேட்கவேண்டுமென்றும் எண்ணிப் பலர் கூடியிருந்தனர். தேசிகர் தக்க பிரதிநிதியை அனுப்பி அவரை எதிர்கொண்டழைக்கச் செய்து வரவேற்று உட்காரச் செய்து சம்பாஷணை செய்யத் தொடங்கினர்.

மதிநலம் படைத்த மணி ஐயரும், சிறந்த ரஸிகராகிய சுப்பிரமணிய தேசிகரும் பேசும்போது அப்பேச்சில் இனிமை பொங்கித் ததும்பியது. அங்கே கூடியிருந்தவர்கள் விழித்த கண் மூடாமல் காதை நெரித்துக்கொண்டு அவர்களைக் கண்டும், அவர்கள் பேச்சைக் கேட்டும் மகிழ்ந்தனர். மணி ஐயர் விஷயங்களைத் துணிவாகவும். வெடுக்கு வெடுக்கென்றும் எடுத்துச் சொன்னபோது அவருடைய தைரியமும் சத்தியத்தில் அவருக்கிருந்த நம்பிக்கையும் புலனாயின. தேசிகர் மிகவும் நயமான மெல்லிய இனிய சொற்களால் அப்பெரியாரைப் பாராட்டினார். ஸம்ஸ்கிருத சுலோகங்களையும், தமிழ்ப் பாடல்களையும் சொல்லிச் சந்தோஷமுறச் செய்தார். மணி ஐயர் இலக்கியச் சுவையை நுகரும் இயல்பினராதலால் அவற்றைக் கேட்டு அனுபவித்தார்.

வேதநாயகம் பிள்ளை பாடல்

அப்பெருங் கூட்டத்தில் மதுரை மாநகரத்திற்கு உயிராக விளங்கிய மணி ஐயருடைய முன்னிலையில் ஏதேனும் பாடல் சொல்லும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்போது அருகிலிருந்த வேணுவனலிங்கத் தம்பிரான் ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கினார். பேச்சுக்கிடையில், “மாயூரம் முன்ஸீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் மகா ஸந்நிதானத்தின் விஷயமாகப் பல பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். மணி ஐயரும், “எங்கே, அந்தப் பாடல்களைக் கேட்கலாமே” என்று சொல்லவே, நான் என் உத்தியோகத்தைப் பார்க்கத் தொடங்கினேன். வேதநாயகம் பிள்ளை கூறிய பல பாடல்களைச் சொல்லி அவற்றிற்குரிய சந்தர்ப்பத்தையும் பொருளையும் எடுத்துரைத்தேன். “இந்த மாதிரியான மகாசபையை வேறு எங்கே பார்க்கப் போகிறோம்” என்ற நினைவினால் எனக்கு வர வர ஊக்கம் அதிகமாயிற்று.

“தடையில் கொடைச்சுப் பிரமணி
     யையநிற் சார்ந்தவர்கொள்
கொடையை அவர்சொல வேண்டுங்
    கொலோவவர் குட்சிசொலும்
இடைசொலுங் கண்டமுங் காதுஞ்
    சொலுமிறு மாப்புடைய
நடைசொலுங் கையிற் குடைசொலும்
    வேறென்ன நான்சொல்வதே”

என்னும் செய்யுளைக் கூறிவிட்டு விரிவாகப் பொருள் சொன்னேன். பிறகு, “இப்பாடலில் ஸந்நிதானத்தின் கொடை வகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருளைத் தனியே பெற்றவர்கள் பலர் உண்டு. எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றதற்கு உதாரணம் நானே. நான் மடத்து அன்னமே பல வருஷங்களாக உண்டு வருகிறேன். இடையில் கட்டிக்கொண்டிருப்பதும் என் பெட்டியில் இருப்பதும் இவர்கள் அளித்த வஸ்திரங்களே கழுத்தில் உள்ள கௌரீசங்கரகண்டி இவர்கள் வழங்கியதே, காதில் அணிந்து கொண்டுள்ள கடுக்கனும், கையில் அணிந்திருக்கும் மோதிரமும் இவர்கள் கொடையே. ஆகவே என் குட்சியும் (வயிறும்) இடையும் கண்டமும் காதும் கையும் ஸந்நிதானத்தின் கொடையைச் சொல்லும், ஆனால் வேதநாயகம் பிள்ளையவர்கள் இந்தப் பாட்டில் சொல்லியிருக்கிற இறுமாப்புடைய நடையும் கைக்குடையும் என்னிடம் இல்லை; அவற்றை நான் விரும்பவும் இல்லை” என்று சொல்லி நிறுத்தினபோது சபையினர் யாவரும் சந்தோஷத்தை ஆரவாரத்துடன் தெரிவித்தனர். “ஒரு கிறிஸ்தவ கனவான் இவ்வளவு தூரம் பாராட்டியிருக்கிறாரே!” என்று பலர் வியப்புற்றனர். ஏதோ பெரிய காரியமொன்றைச் செய்து நிறைவேற்றியது போன்ற திருப்தியை நான் அடைந்தேன்.

நான் அந்தச் சபையில் அவ்வாறு பிரசங்கம் செய்ததைச் சுப்பிரமணிய தேசிகர் கேட்டுப் புன் சிரிப்பினால் தம்முடைய உவகையை வெளிப்படுத்தினர். அவர் புன்னகை அவரது சந்தோஷத்தை மாத்திரம் வெளிப்படுத்தியதாக நான் அப்போது எண்ணினேன். அதில் வேறு குறிப்பு இருந்ததென்றும், ‘இறுமாப் புடைய நடையும் குடையும்’ இல்லை என்று நான் கூறியது அவர் உள்ளத்திற் பதிந்திருந்ததென்றும் அப்போது எனக்குத் தெரியவில்லை; பிறகு தெரிய வந்தது.

மணி ஐயர் விடை பெற்றுக்கொண்டு சென்றார். சுப்பிரமணிய தேசிகர் சில தினங்கள் அங்கே தங்கியிருந்தார். அப்பால் என்னையும் மகா வைத்தியநாதையர் முதலியவர்களையும் புகைவண்டி மார்க்கமாகத் திருநெல்வேலி சென்று இருக்கும்படியும், தாம் சாலை மார்க்கமாக வருவதாகவும் சொல்லி எங்களை அனுப்பினார். நாங்கள் அவ்வாறே திருநெல்வேலி போய்ச் சேர்ந்தோம்.