எழுப்பெழுபது

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

எழுப்பெழுபது என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற 70 - பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும். ஆயினும், சில பாடல்களே தற்போது வரை கிடைத்துள்ளன.

காப்பு நேரிசை வெண்பா[தொகு]

தங்கச் சிலைஏட்டில் தந்த எழுத் தாணிகொடு
துங்கப் பெருநூலைத் தூய்மையுடன் - சங்கையற
வேதமுனி சொல்ல விள்க்கினான் பாதமலர்
போதமெனப் போற்றுவோம் புக்கு.

வேண்டுகோள்[தொகு]

(அறுசீர் விருத்தம்)

கலைவாணி நீயுலகில் இருப்பதுவும்,
கல்வியுணர் கவிவல் லோரை
நிலையாகப் புரப்பதுவும். அவர்நாவில்
வாழ்வதுவும் நிசமே அன்றோ!
சிலைவாண னாஇருந்த யிரம்புயங்கள்
துணிந்துமுயர் சீவன் உற்றான்
தலையாவி கொடுத்திடும்செங் கந்தருயிர்
பெற்றிடவும் தயைசெய் வாயே.

வேறு[தொகு]

பலபல மதங்கள் தோறும் பற்பல வடிவ மாகி
அலகிலா விளையாட் டென்றும் ஆடிடும் முருக வேட்கு
நலமுறும் அனுச ரான நம்குல முதலி தங்கள்
தலைதனை உடலிற் கூட்டித் தந்தருள் வாணித் தாயே.

தோற்றமும் ஈறும் அற்ற தோம்இலா உருவம் கொண்டு
மாற்றலர் சூரன் ஆதி மன்னரை மதித்துக் காய்ந்த
நாற்றிசை போற்றும் எங்கள் நாமவேல் குமரன் பின்னே
சாற்றரும் குலர்க்குள் ஆவி தந்தருள் வாணித் தாயே.

உரைசெயும் வேத கோடி உட்பொருள் ஆகிநின்ற
பரசிவன் இவனே என்று பன்முறை ஏத்த நிற்கும்
ஒருபொரு ளான கந்தன் உடன்வரு மரபார் இன்று
தருதலை ஆவி கொள்ளத் தந்தருள் வாணித் தாயே.

பண்டொரு நாளில் மேருப் பருப்பத முடியில் நின்றே
அண்டங்கள் எல்லாம் தன்னில் அடக்கியே காட்சி தந்த
முண்டக முளரித் தாளான் முருகவேள் துணைவர் தந்த
தண்தலை ஆவி சேரத் தந்தருள் வாணித் தாயே.

ஒருவனோ டொருத்தி ஒன்றென் றுரைத்திடும் உலகம் எல்லாம்
தருபவன் ஆகிஅன்று தாமரைக் கிழவோன் தன்னைப்
பெரும்பகல் சிறையில் வைத்த பீடுசேர் முருகன் பின்னே
வருங்கலர் ஆவி கொள்ள வைத்தருள் வாணித் தாயே.

தேவரும் போற்ற மேல்நால் தெய்வத யானைத தோளை
மேலியே இந்தி ரற்கு வேண்டிய வரங்கள் ஈந்த
தேவர்கள் தேவ னான செய்யவேட் கனுசர் ஈந்த
தாவரும் தலைக்குள் ஆவி தந்தருள் வாணித் தாயே.

தெள்ளிய சீர்த்தி கொண்ட சிவமுனி வரனால் கண்ட
வள்ளியைத் தொண்டை நாட்டு வரைதனில் வதுவை செய்த
எள்ளிலை வடிவேற் கையன் இடத்தவர் எனக்குத் தந்த
தள்ளரும் தலைக்குள் ஆவி தந்தருள் வாணித் தாயே.

வேண்டிய போகம் எல்லாம் விருப்புடன் உலகுக்(கு) ஆக்கும்
ஆண்டியாம் பழனி மேய ஆண்டிதன் வழியில் வந்த
காண்டகு குந்தர் இன்னே காட்டிய தலைகள் எல்லாம்
மீண்டவர் பெற்று வாழ விழைந்தருள் வாணித் தாயே.

மோனமா முனிவர் தேற முப்பொருள் கையால் காட்டி
ஞானமாம் சத்தி தன்னை நற்கரத்(து) அமைத்தே எங்கள்
கானமான் குறத்தி மாதைக் கடிமண விழாவில் கண்ட
வானவேள் அனுசர்க் (கு) ஆவி வழங்கருள் வாணித் தாயே.

முந்தொரு பகலில் தேவர் முனைப்பினை ஒழிப்பான் புக்குச்
சந்திர சூட னாகித் தனிப்பெரு வெளியில் வந்தோர்
மந்திரத் துரும்பை நாட்டி வலிகெடச் செய்த எங்கள்
கந்தனுக் கிளையார்க் காவி கண்டருள் வாணித் தாயே.

பிஞ்ஞகன் வேண்டி நிற்கப் பிரணவப் பொருளைக் கூறிக்
கஞ்சனைத் தளையில் நீக்கிக் காணவரும் கோலம் கொண்ட
மஞ்ஞையில் இவர்ந்து கந்த மாதனைத் திருந்தான் பின்னோர்
உஞ்சிட ஆவி சேர உவந்தருள் வாணித் தாயே.

குந்தர் குணமாட்சி[தொகு]

நிலைத்தந்தார் புவியினுக்கு; யாவருக்கும்
அபிமானம் நிலைக்கத் தந்தார்;
கலைதந்தார் வணிகருக்குச்; சீவனம்செய்
திடவென்றே கையில் யாண்டும்
விலைதந்தார் தமிழனுக்குச் செங்குந்தர்;
என்கவிக்கு விலையா கத்தான்
தலைதந்தார்; எனக்கொட்டக் கூத்தனெனும்
பெயரினையும் தாம்தந் தாரே.

எழுப்பெழுபது முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=எழுப்பெழுபது&oldid=15568" இலிருந்து மீள்விக்கப்பட்டது