கனியமுது/மானங் காத்தாள்.

விக்கிமூலம் இலிருந்து



காலையிலே கழனிக்குச் செல்வார் ; வெய்யில்
கடுமையாக ஏறியபின் வீடு வந்தும்
வேலையிலே முதியவரின் சாயல் இன்றி
மிடுக்கிருக்கும்; சுறுசுறுப்பு மிகுந்தி ருக்கும்!
மாலையிலே மையிருட்டுப் படரு முன்னர்
மடிப்புடனே சலவையுடை தரித்த வாறு,
சாலையிலே கைப்பிரம்பைச் சுழற்றிக் கொண்டே
சடசடென கடந்திடுவார் ; இரவே மீள்வார் !


“இங்கேரம் நகரத்தில் அலுவல் என்ன ?
என்றவரின் மனைவிளக்குக் கேட்ப தில்லை.
பொன்னேபோல் கணவரையே போற்றிக் கொண்டு
புழுக்கத்தை மனத்திற்குள் மூடிக் காப்பாள் !
தன்னிடத்தில் இல்லாத எதையோ அந்தத்
தையலிடம் பெறத்தானே செல்லு கின்றார் ?
‘என்னிடத்தே வைத்த அன்புங் குறையக் காணேன் ,
ஏனதிலே தலையிடுதல் ? என்றி ருப்பாள்.

பத்தாண்டு காலத்தின் முன்னே, ஓர் நாள்
பணம்கேட்க நகருக்குச் சென்ற போது
வித்தாரக் கள்வன், இவர் கடனுக் கஞ்சி
வீட்டைவிட்டே மறைந்தோடி ஒழிந்து போகக்
கொத்தாத கனிபோன்ற மனைவி ஒன்று
கொடுமைநிலைக் காட்பட்டுத் தவித்தல் கண்டு
பித்தான நெஞ்சத்தில் இரக்கம் பொங்கப்
பேணிவரத் தலைப்பட்ட அன்பு நாதர்...


ஏமாந்த கமலத்தைக் தேற்றச் சென்றே
இனம்விளங்கா மனமயக்கம் எய்தப் பெற்றார் !
காமாந்த காரமில்லை; ஆனால் இன்பக்
காதலென்று கூறுதற்கோ வயது மில்லை !
சாமான்ய அன்புமில்லை; காணா விட்டால்
சாவதற்கும் துணிகின்றாள் கமலம் ! இந்தப்
பூமான்மேல் உயிர்வைத்தாள் ! உலகம் கண்டால்
புரளிச்செய்யும் என்பதனால் முடங்கி வாழ்ந்தாள்!

ஆனந்தம் கவிதைகள்


அன்புவெள்ளம் பெருகிவரும் உள்ள மேனும்
ஆற்றுவெள்ளம் கோடையிலே வறண்டாற் போல--
என்பு நரம் புக்குருதி தசைதோல் சேர்ந்த
இவ்வுடலும் நோய்ப்படுதல் இயல்பே யன்றோ?
அன்புநாதர் காய்ச்சலினால் அவதி யுற்றார் ;
ஐந்தாறு நாளாக எழவே யில்லை!
தன்பேதைக் கமலமுகம் மலரச் செய்யும்
தனிக்கதிரோன் காணாது வாடும் என்றே



மெதுவாகத் துணைநலத்தை அருக ழைத்து
வெண்கூங்கல் கோதிவிட்டுத் தயக்கத்தோடும்,
எதுவரினும் சரி என்ற உறுதி யோடும்,
ஏக்கமுறும் இதயத்தைத் திறந்து காட்டி,
இதுகாறுங் கூறாத செய்தி சொல்லி
இட்டுவர இறைஞ்சுகின்றார் ! ஆயின் அன்னை
“பொதுவாக இதுநமக்குப் பழக்க மில்லை ;
போர்முனையில் உள்ளமகன் வரப்போ கின்றான்.

கடிந்துகொள்வான்” என மறுக்க-மகனும் வந்தான் !
கண்களிலே புனல்சிங்தக் கதையைச் சொன்னாள் இடிந்துவிட்டான் ! “ எவளந்த இழிகு லத்தாள்,
என்தந்தை பணம் பறிக்கச் சூழ்ச்சி செய்தாள் ?
முடிந்துவிட்ட நாடகந்தான்! உடனே சென்று
மூதேவித் தொடர்புகளை முறிப்பேன்!” என்றான்.
ஒடிந்துவிழும் உள்ளத்தை நிமிர்த்திக் கொள்ள
உட்கார முயல்கின்ற தந்தை காலில்......


“அய்யோ, என் துரையே!” என் றோடி வீழ்ந்தே
அவிழ்ந்தலையுங் கூந்தலுடன் விழிநீர் ஓட
மெய்சோரப் புலம்புகின்ற கமலம்-தன்னை
மேம்படுத்தித் தான்படுத்த இறைவன் நோக்கிப்
பொய்யோ நம் வாழ்வெல்லாம் ? புனிதங் கெட்டுப்
புன்மொழிகள் கேட்டுயிருந் தரியேன்!” என்றாள்;
மெய்யாக்கி வெற்றுடலைக் கிடத்தி விட்டு,
மேன்மையுடன் உயிர்நீத்து மானங் காத்தாள் !