கலைக்களஞ்சியம்/அருணந்தி சிவாசாரியார்

விக்கிமூலம் இலிருந்து

அருணந்தி சிவாசாரியார் : சைவசந்தானாசாரியர்களுள் இரண்டாமவராகக் கருதப்படுகின்ற அருணந்தி சிவாசாரியார் ஆதிசைவ மரபைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் சதாசிவாசாரியார் என்று கூறப்படுகிறது. சைவாகமங்கள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றைப் பிறர்க்கு ஓதிவந்தமையால் இவருக்குச் சகலாகம பண்டிதர் என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது: இவர் நடு நாட்டிலே பெண்ணையாற்றின் வடகரையிலுள்ள திருத்துறையூரில் வாழ்ந்து வந்தவர். இவர் காலம் பதின்மூன்றாவது நூற்றாண்டு என்று அறியக்கிடக்கிறது. முதலில் இவர் மெய்கண்டார்க்குக் குலகுருவாயிருந்ததும், பின்பு அவருக்கு முதல் மாணவரானதும் மெய்கண்டார் வரலாற்றில் காணலாகும். அருணந்தி என்ற பெயர் இவருக்கு மெய்கண்டாரால் இடப்பெற்றது.

தம் ஆசிரியர் ஏவலுக்கேற்ப அருணந்தி சிவஞான போதத்தை முதல் நூலாகக் கொண்டு, அதன் வழிநூலாகத் தாமியற்றிய சிவஞான சித்தியாரில் சைவத்திறத்தினை விளக்குகிறார். சித்தியார், சித்தாந்த சாத்திரங்களுள் மிக விரிவான நூல்; பரபக்கம், சுபக்கம் என்னும் இருபெரும் பகுதிகளைக் கொண்டது. உலகாயதன், சௌத்திராந்திகன், யோகாசாரன், மாத்தியமிகன், வைபாடிகன், நிகண்டவாதி, ஆசீவகன், பட்டாசாரியன், பிரபாகரன், சத்தப் பிரமவாதி, மாயாவாதி, பாற்கரியன் (பரிணாம மாயாவாதி), நிரீச்சுர சாங்கியன், பாஞ்சராத்திரி என்ற புறச் சமயத்தவருடைய கொள்கைகளை முதலில் கூறி, அப்புறச் சமயங்களைச் சித்தாந்தத்தால் மறுப்பது பரபக்கம். சித்தாந்த சாத்திர நூல்களுள் சித்தியார் ஒன்றில் மட்டுந்தான் அளவை கூறப் பெற்றிருக்கிறது. தத்துவ சாஸ்திரங்கள் முதலில் அளவை கூறுவது மரபு. நிறுத்த முறையில், காட்சி, கருதல், உரை போன்றவற்றுள் எவை தமக்கு உடன்பாடு என்று கூறி, அவற்றைக் கொண்டு தம் கொள்கைகளை நிலை நிறுத்தல் எல்லாச் சமயங்களுக்கும் ஒப்பமுடிந்த கொள்கை. சித்தியார் சுபக்கத்தில் அளவை கூறியபின், கடவுள், உயிர், கட்டு (பதி, பசு, பாசம்) இவற்றின் உண்மை, இவற்றின் பொது இயல்பு விடுபட்டுக் கடவுளை சிறப்பியல்பு, கட்டினின்றும் அடையவேண்டிய வழிகள், கடவுளை அடைந்தோர் தன்மை முதலியன கூறுகிறார். சமயத் துறையில் மட்டுமன்றி, இலக்கியத் துறையிலும் சித்தியார் மிக உயர்ந்த நூலாகத் தமிழ் அறிஞர்களால் பாராட்டப்பெறுகிறது.

அருணந்தி இயற்றிய மற்றொரு நூல் இருபாவிருபஃது என்னும் பெயருடையது. இந்நூல் பத்து வெண்பாவும் பத்து அகவலுமாக இரண்டுவகைப் பாவால் அமைந்துள்ளதால் இருபாவிருபஃது என்னும் பெயர்பெற்றது. ஆசிரியரை முன்னிலைப்படுத்தி மாணவன் வினவுவதாகவும், வினாவுக்கு ஆசிரியர் விடையளிப்பதாகவும் அமைந்துள்ளது இந்நூல். ஆசிரியர் கூற்றாக உள்ளனவே சித்தாந்த உண்மைகள்.

அருணந்தி இயற்றிய நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் சித்தாந்த உண்மைகள் வருமாறு:

1. இறைவன் உண்டு: ஒருவன், ஒருத்தி, ஒன்று என்று உலகம் முத்திறப்பட்டுத் தோன்றி, நின்று, அழிவதால் அதை இயற்றியவன் ஒருவன் உண்டு. அவனே இறைவன்.

2.உயிர் உண்டு, உயிர் பல : உயிர் என்பது உடலின் வேறாக, அறிவு, விழைவு, செயல் என்னும் மூன்றை உடையது. 'உயிர் ஒன்று' என மறைகள் கூற, 'உயிர் பல' எனக் கொள்ளுவது எவ்வாறு பொருந்துமெனின், மறைகள் உயிர்க்குத் தலைவன் ஒருவனே என்பதை வற்வற்புறுத்த 'உயிர் ஒன்று' எனக் கூறுகின்றன. எழுத்துக்கள்தோறும் செல்லும் அகரம்போல உயிர்களோடு சிவனும் சேர்ந்து நிற்கிறான்.

3. கட்டு: (i) இருவினை: உயிர்கள் நுகரும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் இருவினை. இருவினையால் உயிர்கள் பிறந்து இறந்து இவ்வுலகத்திற்கு வருவதும் இங்கிருந்து போவதுமாகும்.

(ii) மாயை : உலகத்திற்கு முதற் காரணமாக அணுக்களைக் கொள்ள முடியாது. அவைகள் அவயவப் பகுப்புடையனவாதலால் பகுப்பின்றியுள்ள மாயையே முதற் காரணம்.

(iii) ஆணவம்: ஒன்றாயிருந்தும், அநேக சக்தியுடையதாய்த் தொடக்கம் அற்றதாய், உயிரின் அறிவொடு தொழிலை ஆர்த்து, செம்பினிற் களிம்பு போன்று உயிரோடு இயைந்து நின்று அறியாமை காட்டுவது ஆணவம்.

இவை மூன்றும் உயிர்க்குத் தளை. நெல்லுக்கு முளை, தவிடு, உமிபோல இவை மூன்றும் உயிரின் உண்மை வடிவை மறைக்கின்றன.

4. மானுடப் பிறவியின் நோக்கமும் அருமையும்: இறைவன் பணிக்காக மானுடப் பிறவி எய்துகிறது. உருவம் அழியக் கூடியதால் பிறவியின் நோக்கத்தை மறவாது உருவம் உள்ளபோதே இறைபணி நின்று உய்வதற்கான வழி தேடவேண்டும்.

5. இறைவன் உயிர்களை ஒறுத்தற்குக் காரணம் : தாய்தந்தையர் தம்புதல்வர்கள் நன்னெறியில் செல்லுவதற்காகச் சிற்சில வேளைகளில் அவர்களை ஒறுத்தல் போலவும், மருத்துவன் சில நோய்களை இனிய மருந்து கொண்டு போக்கினும், வேறு சிலவற்றை அறுத்துக் கீறித் தீர்த்தல் போலவும், இறைவன் உயிர்களுக்கு வினைப்பயன்களை ஊட்டி வினையறுப்பான்.

6. உயிர்களுக்கு அன்பு செய்தல் : உயிர்களுக்கு அன்பு செய்யும் முயற்சிக்கு அடிப்படை இறைவனிடத்தன்பு. இறைவனிடத் தன்பில்லார் அடியவர்க் கன்பில்லார் ; எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார். அன்பற்ற அவர்கள் பிணத்தையொப்பர். அவர்களோடு இணங்குவதும் தவறு. வ. ஆ. தே.