கலைக்களஞ்சியம்/அரையர்

விக்கிமூலம் இலிருந்து

அரையர் : நாதமுனிகள் திவ்வியப் பிரபந்தத்தை வகுத்துப் பாட்டுக்களைக் கோயில்களில் ஓதுவதற்கு ஏற்பாடு செய்தார். இசையுடன் அவற்றைப் பாடவும், அவற்றின் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச் செய்கைகளைக் காட்டி நடிக்கவும் தம்முடைய உடன் பிறந்தாள் மக்கள் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் என்னும் இருவரையும் பழக்கினார். அவர்கள் இசைச் சுவையிலே துவக்குண்ட காயக சார்வபௌமர் என்னும் மேன்மை தோன்றும்படி அவர்களுக்கு அரையர் என்னும் பெயர் உண்டாயிற்று. அந்தப் பிரபுத்துவத்தைக் குறிக்கும் குல்லாவும், தொங்கல் பரிவட்டமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அவர்களுக்குப் பிறகு, கோயில்களில் இந்தத் தொண்டு புரிவோர் அரையர் எனப்பட்டனர்.

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய மூன்று தலங்களில்தான் இப்போது அரையர்கள் உண்டு. உடையவர் என்னும் இராமானுசரை அடுத்திருந்த பெரியோர்களில் அரையர்கள் பலர் இருப்பதால் அக்காலத்தில் பல கோயில்களில் அரையர்கள் இருந்தனர் எனத் தெரிகிறது.

பூசைக்குரிய மந்திரமாயும் வேதாந்தப் பெருநூலாயும் உள்ள பிரபந்தத்துக்கு ஆண்களையே பாடுபவராயும் ஆடுபவராயும் நாதமுனிகள் வைத்தார். ஆசாரிய நிலையிலிருந்து ஸ்ரீசடகோபத்தை எழுந்தருளப் பண்ணி, ஆழ்வார்களுக்கும் அல்லாதவர்க்கும் அனுக்கிரகிக்க அரையர்களே அருகராயினர்.

அரையர்களுக்குத் தம்பிரான்மார் என்றும் பெயர். தம்பிரான்மார் சிறந்த தமிழ் விரகர்கள். மதுரகவியாழ்வார் அருளிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்னும் பதிகத்திற்குத் தம்பிரான்படி வியாக்கியானம் என்று ஒன்று உண்டு. மற்றைப் பிரபந்தங்களில் சிறப்பான பல இடங்களில் அரையர்கள் சேர்த்த தமிழ்ச் சூர்ணிகைகளும் உண்டு. அவையெல்லாம் அரையர்களின் குடும்ப மந்திரங்கள் போல இருந்து வருகின்றன. அவர்கள் பெருமானுக்கு அவற்றை விண்ணப்பிக்கையில் பிறர் கேட்கக்கூடும்.

இப்போது மார்கழித் திருநாளில் தினந்தோறும் சில பாடல்களுக்கு அபிநயமும், கம்ச வதம், இராவண வதம், இரணிய வதம், பெருமாள் புறப்பாடு, திருவாராதனம், அமுதங் கடைதல், வாமனாவதாரம், முத்துக்குறி என்ற சிலவற்றுக்கு நடிப்பும் நடக்கின்றன. நம்பாடுவான் என்பவர் கைசிகம் என்னும் பண்ணைப் பாடித் திருமாலை வழிபட்டு முத்தி பெற்ற நாளாகிய கார்த்திகை மாதத்து வளர்பிறை ஏகாதசியாகிய கைசிகத்தன்றும், திருநெடுந்தாண்டகம் பாடுவதற்காக நியமித்த அன்றும் இரண்டொரு பாட்டுக்கு அபிநயம் உண்டு. இந்தத் திருநாட்கள் திவ்வியப் பிரபந்தமாகிய அருளிச் செயலைப் பாடவும், அபிநயிக்கவும், நடிக்கவுமே சிறப்பாக ஏற்பட்டன. உடையவர் காலத்தில் நாள்தோறும் அருளிச் செயலைப் பெருமாளிடம் அபிநயித்துப் பொருள் விளக்குவதே அரையர்களின் போதுபோக்காகவும் கோயில் காரியமாகவும் இருந்தது.

அரையர்களின் அபிநயத்தையும் இசையையும் பற்றிப் பல கதைகள் திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களில் காணலாம். எஸ். பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரையர்&oldid=1455652" இலிருந்து மீள்விக்கப்பட்டது