கலைக்களஞ்சியம்/அறிவாய்வு

விக்கிமூலம் இலிருந்து

அறிவாய்வு (Reasoning) : அறிவைக்கொண்டு ஆராய்ந்து உண்மையைக் கண்டு கொள்வதற்குப் பயன்படும் கருவிகள் பிரமாணங்கள் என்று வடமொழியிலும், அளவைகள் என்று தமிழிலும் கூறப்பெறும். அவை காண்டல், கேட்டல், கருதல் என்பனவாகும். அவற்றை வடமொழியில் முறையே பிரத்தியட்சம், சப்தம், அனுமானம் என்று கூறுவர். பொறிகளின் வாயிலாகப் பொருளின் தன்மையை அறிவது காண்டலாகும். பிறர் கூறக் கேட்பது கேட்டலாகும். சிந்தித்தும் சோதனை செய்தும் அறிதல் கருதலாகும்.

காண்டல் வாயிலாகக் கிடைக்கும் அறிவு உடனேயே கிடைக்கிறது. அதனால் கிடைக்கும் அறிவை அநேகமாக உண்மை என்றே நம்பிவிடுகிறோம். ஆயினும் பொருளின் அமைப்பு, சூழ்நிலை, புலன்களின் குறைபாடு, அறிவின் குற்றம் முதலியன காண்டலுக்கு இடையூறுகளாக அமைந்து, மனத்தில் தவறான எண்ணங்களைத் தோற்றுவிக்கக்கூடும்.

புலன்களால் கண்டறிய முடியாதவற்றை நாம் பெரும்பாலும் பிறர் கூறக் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் பிறர் கூறுவதை நாம் உண்மை என்று நம்பவேண்டுமானால், அவர் தாம் கூறும் பொருளைப்பற்றி ஐயம் திரிபறத் தெரிந்தவராகவும், நம்மிடம் நல்லெண்ணம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

நேரில் காண்டல், பிறரிடம் கேட்டல் ஆகிய இரண்டும் பயன்படாத இடத்து அனுமானத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முயல்கிறோம். அனுமானத்தால் நாம் பெறும் கருத்துக்கள் உண்மையானவைகளாக இருக்கவேண்டுமானால் நம்முடைய ஆய்வுக்கு ஆதாரமாக இருக்கும் கருத்துக்கள் உண்மையாயும், நாம் ஆய்வு நடத்தும் முறை சரியானதாயும் இருத்தல் வேண்டும்.

மனத்தில் அறிவு நிலை, உணர்ச்சி நிலை, இயற்றிநிலை என மூன்று நிலைகள் உண்டு. அவற்றுள் அனுமானம் அல்லது கருதலானது அறிவுநிலையில் உயர்ந்த பகுதியாகும்.1. எண்ணங்களை அடைதல். 2. அவைகளைப் பொருத்தமாகக் கோவை செய்தல். 3. அதன் காரணமாக எழும் கருத்தை அறிதல். 4. அக்கருத்தைப் புதிதாக மனத்தில் அமைத்துக்கொள்ளுதல் ஆகிய அனைத்தும் கருதல் என்னும் செயலில் அடங்கும். ஆகவே இவ்வனுமானக் கருவி வாயிலாக, நாம் இதுகாறும் அறிந்தவற்றைத் துணையாகக்கொண்டு ஆராய்ந்து, இதுகாறும் அறியாதவற்றை அறிந்து கொள்கிறோம். குழந்தையானது தன்னுடைய சூழ் அறிந்துகொள்வதற்கு முதலில் காண்டல் நிலையை முறையையும், முயன்று தவறித் தெளியும் (TrialError) முறையையுமே கையாள்கின்றது. நாள் ஆக ஆக, அது காணும் பொள்களின் தன்மை, அவற்றிடையே காணப்பெறும் ஒப்புப் பொருத்தம், பொருளுக்கும் கருத்துக்குமுள்ள வேறுபாடு முதலியன அதன் மனத்தில் எழுகின்றன. அதனால் அது தன் அனுபவத்தையும் பிறர் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொண்டு எதையேனும் செய்ய முயலுமுன், இப்படிச் செய்யலாம் என்று ஆராய்ந்து பார்த்து நடக்கத் தொடங்குகிறது. ஆகவே கருதல் என்னும் செயல் நாம் பிறந்து வெகு நாட்கள் ஆவதற்கு முன்னதாதவே நடைபெறத் தொடங்கிவிடுகிறது. அது ஆயுள் முழுவதும் நடக்கின்றது.

நம் உள்ளத்தில் நிகழும் இயற்றி நிலை (Will) அறிவு காரணமாகவும் உண்டாகலாம், உணர்ச்சி காரணமாகவும் உண்டாகலாம், இயல்பூக்கங்கள் (Instincts ) காரணமாகவும் உண்டாகலாம். இயல்பூக்கங்களுக்கும் உணர்ச்சிக்கும் வயப்பட்டவன் எதையும் தீர ஆராய்ந்து செய்யமாட்டான். தீர ஆராய்ந்து செய்வதே செம்மையாகச் செய்யப்படும்.

இந்த ஆய்வு முறை எப்பொழுது நடைபெறுகிறது என ஆராய்வோம்: 1. இயல்பூக்கம் காரணமாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ ஒரு செயலைச் செய்யும்போது அது நனவின்றிச் செய்யும் செயல் எனப் பெறும். அத்தகைய செயல் செய்யும்போது ஆய்வு எதுவும் நடைபெறுவதில்லை. ஆனால் அந்தச் செயல் நடைபெறும்போது ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அப்பொழுது உடனே நனவு வேலை செய்யத் தொடங்குகிறது. அறிவு அந்தத் தடங்கல்களை நீக்கும் வழியைத் தேடுவதற்காக ஆய்வு முறையைக் கையாள்கிறது. 2. ஏதேனும் ஒரு செயலைச் செய்ய எண்ணும்போது அதைச் செய்யப் பல வழிகள் தோன்றக்கூடும். அவற்றுள் எது ஏற்றவழி என்று தெரிய அறிவு அப்பொழுதும் ஆய்வு முறையைப் பயன்படுத்துகிறது. 3. உலகத்தில் காணப்பெறும் எல்லாப்பொருள்களையும் நிகழ்ச்சிகளையும்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் மக்கள் உள்ளங்களில் எழுவது இயற்கை. அதன் காரணமாகவும் உள்ளத்தில் ஆய்வு முறை எழுகின்றது. அப்பொழுது காணும் உண்மைகளே விஞ்ஞானச் செல்வமாகும். இதுதான் சீவ சிருஷ்டியில் மனிதன் உயர்ந்தவன் என்னும் சிறப்பை அவனுக்குத் தருகின்றது.

நாம் உண்மை என்று கொள்வதை யெல்லாம் நம்புகின்றோம். ஆனால் நாம் நம்புவதெல்லாம் உண்மையான அறிவு என்று கூற முடியாது. தக்க ஆதாரங்களைக்கொண்ட நம்பிக்கையே உண்மையான அறிவாகும். நாம் காண்டல், கேட்டல் என்னும் இவைகளால் வருபவற்றையும், நம்முடைய இச்சையின் வழி வந்தவற்றையும் நம்பினால் அவை உண்மையான நம்பிக்கைகள் ஆய்விடமாட்டா. அடிப்படைக் கருத்துக்களிலிருந்து துலங்கும் கருத்தைக் கண்டு, அவற்றிற்கு இடையேயுள்ள தொடர்பை அறிந்து தெளிவுறும் மனத்தின் செயலே ஆய்வாகும். அத்தகைய ஆய்வு வாயிலாகப் பெறும் கருத்தே உண்மையான நம்பிக்கையாம். அதுவே உண்மை யறிவைத் தருகிறது.

ஆய்வு நடைபெறுவதற்கு இன்றியமையாத கருவியாக இருப்பது மொழியாகும். மொழியே நம் உள்ளத்தில் கருத்துக்களை உருவாக்கவும், அவற்றைப் பிறர்க்கு உரைக்கவும் உதவுகிறது. ஆதலால் எதையும் ஆராயுமுன், அதற்குப் பயன்படும் சொற்களின் பொருளை உறுதி செய்துகொள்ளவேண்டும். சொல்லும் பொருளும் வேறுபட்டிருந்தாலும், சொற்கள்; இருபொருள் தருவனவாக இருந்தாலும், சொற்களின் பொருளை நன்கு அறியாதிருந்தாலும் அப்பொழுது ஆய்வு சரியாக நடைபெறாது; வழுக்கள் உடையதாக ஆகிவிடும்.

ஆராய்தல் என்பதைத் தர்க்கம் என்றும் கூறுவர். இத் தர்க்க முறை ஆராய்வில் மூன்று பகுதிகள் உள:

1. காண்டல், கேட்டல், கருதல் ஆகியவற்றால் கிடைத்த உண்மை 'ஆதார வாக்கியம்' எனப்படும்.

2. இதில் உட்கருத்தாய் அமைந்ததும், நாம் கண்டுகொள்வதுமான புதிய உண்மை 'முடிவு வாக்கியம் ’ எனப்படும்.

3. இவ்விரண்டுக்குமுள்ள தொடர்பு 'காரண வாக்கியம்' எனப்படும்.

உதாரணம்:

நீரைவிடக் கனம் குறைந்தவை நீரில் மிதக்கும். (ஆதார வாக்கியம்).
மரக்கட்டை நீரைவிடக் கனம் குறைந்தது. (காரண வாக்கியம்).
ஆதலால் மரக்கட்டை நீரில் மிதக்கும். (முடிவு வாக்கியம்).

இந்த முடிவை அனுமானம் என்றும், இதனால் கிடைக்கும் முடிவை 'அனுமிதி' என்றும் கூறுவர்.

1. காரணம் உண்மையாக இருந்தும், அனுமான முறை சரியாக இல்லாவிட்டால் அனுமிதி தவறாகி விடும்.

உதாரணம்:
சில மாணவர்கள் சரித்திரம் கற்கிறார்கள்.
சில மாணவர்கள் கணிதம் கற்கிறார்கள்.
ஆதலால் கணிதம் கற்கும் மாணவர் அனைவரும் சரித்திரம் கற்கிறார்கள்.

2. அனுமான முறை சரியாயிருந்தும், காரணம் உண்மையாக இல்லாவிட்டால் அனுமிதி பொய்யாகிவிடும்.

உதாரணம்:
மனிதர் அனைவரும் புல் தின்னுகிறார்கள்.
தேவதத்தன் ஒரு மனிதன்.
ஆதலால் தேவதத்தன் புல் தின்னுகிறான்.

3. காரண வாக்கியமும் முடிவு வாக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததாக இருந்தாலும் அனுமிதி பொய்யாகிவிடும்.

உதாரணம்:
மனிதர் அனைவரும் இறக்கும் தன்மை வாய்ந்தவர்.
மலையாளத்தில் மழை அதிகம்.
ஆதலால் நெல் விலை உயர்ந்துவிட்டது.

தவறான அனுமானம் ஒழுங்கற்றது; பொய்யான அனுமானம் உண்மையற்றது; ஒழுங்கும் உண்மையும் அனுமானத்தின் இரு பகுதிகளாகும்.

அனுமிதியானது காரண வாக்கியத்தைத் தழுவியதாயும், அதினின்று புதிதாகத் தோன்றியதாயும் இருத்தல் வேண்டும். காரண வாக்கியத் தொடர்பில்லாத அனுமிதிக்கு அனுமானம் என்னும் பெயர் பொருந்தாது. புதிதாகத் தோன்றாத அனுமிதி, கூறியது கூறல் என்னும் குற்றமுடையதாகும். மூன்றாவது உதாரணத்தில் நெல் விலை உயர்ந்துவிட்டது என்பது புதிய கருத்துத்தான்; ஆனால் அதற்கும் மலையாளத்தில் மழை அதிகம் என்பதற்கும் தொடர்பு இல்லை.

பகுப்பு அனுமான முறை (நிகமனவாதம்), தொகுப்பு அனுமான முறை (ஆகமனவாதம்) என ஆய்வு இருவகைப்படும்.

1. நாம் ஆராய்ந்தறிந்த ஒரு பொது விதியை நாம் புதிதாய்க் காணும் ஒரு நிகழ்ச்சியுடன் பொருத்திப் பார்த்து, அந்நிகழ்ச்சியை விளக்குவதும், அதன்மூலம் பொதுவிதி உண்மை என்று காண்பதும் பகுப்பு அனுமானமாகும்.

உதாரணம்:
மனிதர் அனைவரும் இறக்கும் தன்மை வாய்ந்தவர். (பொதுவிதி).
தேவதத்தன் ஒரு மனிதன். (நிகழ்ச்சி).
ஆதலால் தேவதத்தனும் இறப்பான். (விளக்கம்).

2. நாம் கண்ட சில நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் பொதுவாயுள்ள ஒரு தன்மை இருப்பதைக் கண்டு, அந்தந்தத் தன்மை அதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் உண்டு என்று ஊகிப்பது தொகுப்பு அனுமானம்.

உதாரணம்:
இராமன், கிருஷ்ணன், கோவிந்தன் முதலிய நாம் கண்ட பலர் மனிதராக இருப்பதையும், அவர்கள் இறப்பதையும் கண்டு, எல்லா மனிதர்களும் இறப்பார்கள் என்று, கண்டவைகளிலிருந்து காணாதவற்றை ஊகிக்கிறோம்.

தொகுப்பு முறை, எண்ணிக்கைத் தொகுப்பு முறை (கணனாகமனம்) என்றும், விஞ்ஞானத் தொகுப்பு முறை என்றும் இருவகைப்படும். பல பொருள்கள் அல்லது நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட தன்மை உடையயனவாயிருப்பதை வைத்து, அவை போன்ற பொருள்களும் அல்லது நிகழ்ச்சிகளும் அதே தன்மை உடையனவாயிருக்கும் என்று அனுமானிப்பது எண்ணிக்கைத் தொகுப்பு முறையாகும். ஆனால் அவைபோன்ற பொருளோ அல்லது நிகழ்ச்சியோ ஒன்று அந்தத்தன்மை உடையதாக இல்லாதிருக்குமானால் அனுமானம் பொய்யாக ஆகிவிடும்.

ஒன்றிரண்டு பொருள்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ சோதனை முறைகளால் ஆராய்ந்து, அவற்றில் காணும் தத்துவம், அவற்றைப் போன்ற மற்றப் பொருள்கள் அல்லது நிகழ்ச்சிகளிடமும் உண்டு என்று கூறுவது விஞ்ஞானத் தொகுப்பு.

பத்து மரக்கட்டைகள் நீரில் மிதக்கக் கண்டதை வைத்து, எல்லா மரக்கட்டைகளும் நீரில் மிதக்கும் என்று கூறுவது எண்ணிக்கைத் தொகுப்பு. மரக்கட்டையையும் நீரையும் சோதித்து, மரக்கட்டை நீரைவிடக் கனங் குறைந்ததாக இருப்பதை அறிந்து, அதனால், 'மரக்கட்டை நீரில் மிதக்கும் தன்மை கொண்டதாய் இருக்கவேண்டும். ஆதலால் மரக்கட்டை நீரில் மிதக்கும்' என்று கூறுவது விஞ்ஞானத் தொகுப்பு. இந்த அனுமிதியே ஐயமற்ற பொதுவிதி அல்லது விஞ்ஞான நியதி எனப்படும்.

பகுப்பு முறை, தொகுப்பு முறை என்னும் இரண்டும் வேறுபட்டவையுமல்ல, முரணானவையுமல்ல. தொகுப்பு முறை நிகழ்ச்சிகளையோ, பொருள்களையோ ஆராய்ந்து, அவற்றிற்கு அடிப்படையாக இருந்து, அவற்றை விளக்கவல்ல நியதியைக் கண்டுபிடிக்கிறது. தொகுப்புமுறை தரும் நியதியை வைத்துப் புதுப்பொருள்களின் அல்லது நிகழ்ச்சிகளின் தன்மையை அறிவது பகுப்பு முறை. ஆகவே இரண்டு முறைகளும் தொடர்புடையன. இரு முறைகளும் பன்மையில் ஒருமையை அல்லது வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டறிய உதவுகின்றன.

இந்தியத் தர்க்க நூல்கள் அனுமானத்தைத் தன்பொருட்டனுமானம் (சுவார்த்த அனுமானம்) என்றும், பிறர் பொருட்டனுமானம் (பரார்த்த அனுமானம்) என்றும் இருவகையாகக் கூறும். முதல் அனுமானத்தைப் பிரகாச தர்க்கம் (கண்டுபிடித்தலைச் சார்ந்தது) என்றும், இரண்டாவது அனுமானத்தை நிரூபண தர்க்கம் (நிரூபித்தலைச் சார்ந்தது) என்றும் கூறுவதுண்டு. அறியாததைக் கண்டு பிடிப்பது பிரகாச தர்க்கம். அறிந்ததைப் பிறர்க்கு விளக்குவது நிரூபண தர்க்கம். நிரூபண தர்க்கமானது நாம் கூறும் சித்தாந்தம் உண்மை என விளக்குவது, பிறர் கூறும் சித்தாந்தத்தைப் பொய் எனத் தகர்ப்பது என்ற இரு பிரிவுகள் உடையது.

மேனாட்டு முறைக்கும் இந்திய நாட்டு முறைக்குமுள்ள வேறுபாடு வருமாறு: மேனாட்டுப் பகுப்புமுறை மூன்று உறுப்புக்களுடைய அனுமான மொழித் தொடருடையதாகும் (Syllogism).
உதாரணம்:
1. எல்லாத் தேவர்களும் சிரஞ்சீவிகள்.
2. இந்திரன் ஒரு தேவன்.
3. ஆதலால் இந்திரன் சிரஞ்சீவி.
இந்தியத் தர்க்க ரீதியான அனுமானமாகிய பஞ்சாவயவ வாக்கியமானது ஐந்து உறுப்புக்களுடையது.
உதாரணம்:
1. மலையில் நெருப்பு இருக்கிறது.
2. அதில் புகை தோன்றுவதால். 3. எங்குப் புகை தோன்றுகிறதோ அங்கு நெருப்புண்டு,அடுப்பில் இருப்பதுபோல். 4. இதுவும் அதுபோல். 5. ஆகையால் இதுவும் அதுவே.

மேனாட்டு முறையில் முதலில் காரணமும் பிறகு சித்தாந்தமும் காணப்படுகின்றன. இந்திய முறையில் முதலில் சிந்தாந்தமும் பிறகு காரணங்களும் காணப்படுகின்றன. இந்த முறையில் அடுப்பின் உதாரணத்தைக் கொண்டு, எங்குப் புகை தோன்றுகிறதோ அங்கு நெருப்பு இருக்கும் என்ற தொகுப்பு முறையும், மலையில் புகை தோன்றுவதால் அங்கு நெருப்பு இருக்கிறது என்று அந்நியதியின் காரணத்தால் ஊகித்த பகுப்பு முறையும் சேர்ந்திருப்பதைக் காணலாம்.

அனுமான வழுக்கள்: ஒழுக்கமும் உண்மையுமற்ற முடிபைத் தரும் அனுமானம் இழுக்குடையதாகும். இது அனுமான வழுவால் உண்டாகிறது. பொய்யான காரண வாக்கியங்கள், அனுமான விதிகளைத் தழுவாமை, மொழித் தவறுகள், பொருந்தாச் சித்தாந்தம் என்பன அனுமான வழுவுக்குக் காரணங்களாகும். உளறலாலும் பிடிவாதத்தாலும் வழு உண்டாகும். பொறிக் காட்சிக் கோளாறு, சோதனைத் தவறு, தப்பான ஒப்புமை, ஆதாரமின்றிப் பொதுவிதி ஊகித்தல் போன்றவை தொகுப்புமுறை அனுமானத்தில் வழுக்களை உண்டாக்கும். இவ்வழுக்கள் உண்டாகாதிருந்தால்தான் அனுமானம் உண்மையான கருத்துக்களைத்தர முடியும். ப. ச.