கலைக்களஞ்சியம்/அல்லாஹூ

விக்கிமூலம் இலிருந்து

அல்லாஹூ : இப் பிரபஞ்சத்தையும் இதிலுள்ள எல்லாப் பொருள்களையும் படைத்தவனைக் குர்ஆனில் அல்லாஹூ என்ற பெயரால் அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் எந்த நாட்டிலிருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் தனி முதல்வனான எல்லாம் வல்ல இறைவனை அல்லாஹ் என்ற பெயராலேயே அழைக்கிறார்கள். முழு முதல்வன் குர் ஆனில் ரப்பு என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகிறான். அதன் பொருள் பரிபாலனம் செய்வோன் என்பது. அல்லாஹு என்ற பெயர் முழு முதல்வனுடைய முக்கியப் பெயராகும். ரப்பு முதலிய பெயர்கள் அவனுடைய சிறப்புப் பெயர்களைக் குறிக்கும். அல்லாஹுவின் சிறப்புப் பெயர்கள் தொண்ணூற்றொன்பது என்று முகம்மது நபி நாயகம் சொல்லியிருக்கிறார். அப்பெயர்களுக்கு அஸ்மா-அல்-ஸிபாத் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அல்லாஹு என்பது நூறாவது பெயராகச் சேர்த்து, ஏக ஈசுவரன் பெயராகக் கூறப்படுகிறது. அல்லாஹு என்பதை முதலிலும் தொண்ணூற்றொன்பது பெயர்களுக்குப் பிறகு நூறாவது பெயராகவும் வழங்குவது வழக்கம். இந்த நூறு பெயர்களை முஸ்லிம்கள் செபமாலையைக் கொண்டு பாராயணம் செய்வது வழக்கம். இச் சிறப்புப் பெயர்களை இரண்டு பிரிவுகளாகக் கொள்ளலாம். ஒன்று தன் அடியார்களுக்கு அவன் செய்யும் கிருபை, உபகாரம் இவற்றை விளக்குவது. மற்றொன்று அவனுடைய சக்தியை நிரூபிப்பது. இஸ்லாம் மார்க்கக் கொள்கைப்படி, “அல்லாஹு ஒருவன்; அவனுடைய சக்தியை மீற எவராலும் முடியாது; அவன் எப்பொழுதும் நிலைத்திருப்பவன்” என்ற கருத்துக்களை விளக்கக்கூடிய 'லா இலாஹ இல்லல் லாஹ' (வணக்கத்துக் குரியவன், அல்லாஹுவைத் தவிர வேறு ஒரு கடவுளும் இல்லை) என்ற வசனத்தை முஸ்லிம்கள் உள்ளன்போடு ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. குர்ஆனில் அல்லாஹு வினுடைய இயல்பு, தத்துவம் முதலியவற்றைப் பற்றித் தெளிவாகப் பலவகையில் குறிப்பிட்டிருக்கிறது. சை. மு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அல்லாஹூ&oldid=1455630" இலிருந்து மீள்விக்கப்பட்டது