கலைக்களஞ்சியம்/ஆகமம்

விக்கிமூலம் இலிருந்து

ஆகமம் என்னும் வடமொழிப் பதத்தின்பொருள் தொன்று தொட்டு வரும் அறிவு என்பதாகும். அது பொதுவாக வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் அமைந்த பெயராக இருப்பினும், சிறப்பாகக் கடவுளுடைய வழிபாட்டை இரகசியம், மந்திரம், மூர்த்தி, ஆலயம் ஆகிய முறைகளில் விரித்துக் கூறும் தொகுதியின் பெயராக வழங்கி வருகின்றது. வழிபடும் கடவுளின் பெயரை வைத்து ஆகமம் பலவகைப்படும். சிவ னுடைய வழிபாட்டைக் கூறுவது சைவாகமம். விஷ்ணுவின் வழிப்பாட்டைக் கூறுவது வைஷ்ணவாகமம். சக்தியின் வழிபாட்டைக் கூறுவது சாக்தாகமம்.

சைவ ஆகமங்கள் ஆன்மாக்கள் மலத்தை அகற்றி இன்பம் பெறும் மார்க்கத்தைக் குறித்துச் சிவன் அருளிய நூல்களே என்பர். கடவுள் சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாத பொருளாயிருப்பதால் அவரை மிகச்சிலரே மறைகள் கூறும் வண்ணம் வழிபட முடியும். பெரியோர்கள் தம் உடலையே ஆலயமாகக் கொண்டு தம்மையே இறைவனாக வழிபடுவர். ஏனையோர் வழிபடுவதற்காகவே கோயில்களை அமைக்குமாறு ஆகமங்கள் கூறுகின்றன. ஆலயம் என்பதன் பொருள் ஆன்மாக்களை இறைவனிடம் லயிக்கும்படி செய்யும் இடம் என்பதாம்.

சிவாலயத்தில் இறைவன் உள்ள இடம் மூலஸ்தானம். அங்கு லிங்கமே காணப்படும். அதற்குக் காரணம் கடவுள் உருவமாயும் அருவமாயும் இருப்பதேயாகும். சிவன் ஒருவனே பரமாத்மா. அதனால் அவனுக்கே லிங்கம் உரியது என்று சைவாகமம் கூறும். அதனாலேயே மூலஸ்தானத்தில் மற்றத் தேவர்க்கெல்லாம் உருவமே அமைக்கப்படுகின்றது.

ஆலய அமைப்பு: மூலஸ்தானம் அல்லது கர்ப்பக்கிருகம் ஆலயத்தின் பிற பகுதிகளைவிட மிகச் சிறியதாக இருக்கவேண்டும். அருச்சகர் மட்டும் நின்று அபிடேகம் செய்து, உடை உடுத்திச் சந்தனம் அணிந்து, அலங்காரம் செய்யவும், வலம்வரவும் இடமிருந்தால் போதும்.

அதற்கு அடுத்தபடி அமைக்கப்படுவது அர்த்த மண்டபம். இது கர்ப்பக் கிருகத்தைவிடச் சற்று விசாலமானது. அங்கு நின்றே அருச்சகர் அலங்கார தீபாராதனை செய்வார்; பரிசாரகர் தீபமேற்றித் தருவார். பக்தர்கள் அர்த்த மண்டபத்தைவிடப் பெரியதான மகா மண்டபத்தில் நின்று தரிசனம் செய்வர்.

அர்த்த மண்டபத்தில் சிவலிங்கத்துக்கு எதிர்முகமாக நந்தி விக்கிரகம் அமைந்திருக்கும். மூலஸ்தானத்தின் வாசலின் வலது புறம் விநாயகரும் இடது புறம் சுப்பிரமணியரும் இருப்பர். அவர்களருகே துவாரபால மூர்த்திகள் இருவர் நிற்பர். கர்ப்பக் கிருகத்தின் வெளிப்புறம் தெற்குச் சுவரில் தட்சிணாமூர்த்தி உருவமும், மேற்குச் சுவரில் லிங்கோத்பவ மூர்த்தி உருவமும், வடக்குச் சுவரில் துர்க்காதேவி உருவமும் காணப்படும். துர்க்கைக்கு எதிரில் எதிர் முகமாகத் தனியே சண்டிகேசர் இருப்பர்.

ஆலயத்தை வலம் வருமாறு அமைக்கப்படும் இடம் பிராகாரம் எனப்படும். மூன்று அல்லது ஐந்து பிராகாரங்களை அமைத்தல் வேண்டும். வெளிப் பிராகாரத்தில் வாயிலுக்கு நேரே பலிபீடம், கொடிமரம், பெரிய நந்தி ஆகியவைகளை அமைப்பர்.

முதல் வாயிற்படியில் கோபுரம் கட்டப்பெறும். கோபுரம் இறைவன் எங்கும் தங்கி எல்லாமாக இருக்கிறான் என்னும் உண்மையைக் காட்டுவதாகும். மூலஸ்தானத்தின் மீதும், கோபுரத்தின் மீதும் பொற்கலசங்களை அமைக்க வேண்டும். மதிற் சுவர் மீதும், கோபுரத்திலும் சிவாலயம் என்று குறிப்பிடும் பொருட்டு நந்தியையேனும் சிவகணங்களையேனும் அமைத்தல் வேண்டும்.

இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறும் பொருட்டுப் புதிய ஆலயங்களை அமைக்குமாறும், பழைய ஆலயங்களைப் புதுப்பிக்குமாறும் ஆகமங்கள் கூறுகின்றன். சிவஸ்தல யாத்திரை, சிவாலயத் தொண்டு, ஆலய நிர்மாணம், மண்டப நிர்மாணம், திருக்குளம் அமைத்தல், விக்கிரங்களை அமைத்தல், பூசைக்குரிய பொருள்களை வழங்கல், உற்சவம் நடத்துதல், கொடி பிடித்தல், முரசு அடித்தல், வாத்தியம் வாசித்தல் முதலிய கைங்கரியங்களைச் செய்வோர் சிவகதி பெறுவர்.

ஆகமத்தில் கிரியாபாதம், சரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் என நான்கு பிரிவுகள் உள. அவற்றுள் கிரியாபாதம் சிவாலயம் செல்லுதல், சிவ தரிசனம் செய்தல், சிவதீட்சை பெறுதல், மந்திர ஜபம் செய்தல், சிவசின்னம் அணிதல், சிவப்பிரசாதம் உண்ணல் முதலிய சிவதருமங்களைப்பற்றிக் கூறும். சரியா பாதம், பவித்திரோத்ஸவம், லிங்கபேதம், பூசைக்கு ஏற்றவை, பூசிக்கத்தகாத லிங்கம், சிவலிங்கப் பிரதிட்டை, நியாசம் முதலியவற்றைப் பற்றிக் கூறும். யோகபாதம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, சமாதி என்னும் யோக உறுப்புக்கள் எட்டையும் பற்றிக் கூறும். இந்த நான்கு பாதங்களையும் உடைய சிவாகமங்கள் இருபத்தெட்டாகும். இவ் விருபத்தெட்டையும் திருமூலர் தமது திருமந்திரத்தில் வருணிக்கிறார்.

சிவாகமங்களின் உள்ளே சிவன் இருப்பதாக உபாசனை செய்வோரும் சிவ கதி பெறுவர். இவ்வாகமங்களில் பல இன்றும் அச்சேறாமல் இருக்கின்றன. காமிகாகமம், காரணாகமம், வாதுளாகமம், சுப்பிரபேதாகமம், புட்கராகமம் ஆகிய ஐந்தும் கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்டுள. இவைகளில் சிலவற்றிற்குத் தமிழ் மொழி பெயர்ப்புக்களும் உள. ஆகமங்களில் கூறப்பட்டுள்ள கும்பாபிஷேகம், நித்திய பூசை முதலிய நற்கருமங்களை விளக்குவதற்காகத் தனியாக நூல்களும் இயற்றப்பெற்றுள.

ஆலய சேவை : மனிதன் பசு, இறைவன் பதி, மாயை பாசம். சிவயோகத்தால் மனம் ஒருமைப்படுவதற்காகக் கிரியை சரியை முதலியவைகளை அனுஷ்டித்தால் சிவன் அருள் உண்டாகும். சிவன் அருளால் சிவஞானம் உண்டாகும். சிவ ஞானத்தால் பாசம் அகன்று பேரானந்தம் உண்டாகும். ஆகவே பேரானந்தம் பெற ஆலய சேவை முக்கியமான சாதனமாகும்.

ஆலய சேவை செய்ய விரும்புவோர் நற்குருவை அடைந்து, சிவதீட்சை பெற்றுப் பஞ்சாட்சர உபதேசம் பெறவேண்டும். அவர்கள் ஆத்ம சுத்தி, ஸ்நான சுத்தி, திரவிய சுத்தி, லிங்க சுத்தி, மந்திர சுத்தி என்னும் பஞ்ச சம்ஸ்காரத்துடன் ஆலயம் செல்லல் வேண்டும். நீராடி,மடி உடுத்தி, விபூதி, உருத்திராக்கம் அணிந்து, கனி மலர்களுடன் போய், அருச்சகர் ஆலயம் திறந்து விளக்கேற்றிய பின்னர் உள்ளே செல்லவேண்டும்.

கோபுரம் என்பது தூல லிங்கமாதலால் அதைக் கண்டவுடனே வணங்க வேண்டும். பின்னர்க் கொடிமரத்தின் அருகே ஐந்து வணக்கம் செய்து, நந்தியிடம் விடைபெற்று, முதலில் விநாயகர், சுப்பிரமணியர், அம்பிகை ஆகியவர்களை வழிபடல் வேண்டும். அதன்பின் சத்தியோஜாதம், தத்புருடம், வாமதேவம், அகோரம் என்னும் லிங்கத்தின் நான்கு முகங்களும் நான்கு திக்குகளிலும் இருப்பதாகத் தியானம் செய்ய வேண்டும். ஈசானம் என்னும் ஐந்தாவது முகம் மேல்நோக்கி இருப்பதாக நினைத்து, அதைத் தனக்கு அபிமுகமாக வரும்படி பிரார்த்திக்க வேண்டும்.

அதன்பின் சவ்யப் பிரதட்சிணம், அபசவ்யப் பிரதட்சிணம், சவ்ய அபசவ்யப் பிரதட்சிணம், சிம்மப் பிரதட்சிணம், சிருங்கலாப் பிரதட்சிணம், நாகவக்கிரப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் என்னும் ஒன்பது பிரதட்சிணங்களுள் ஒன்றை மும்முறை செய்து, சண்டிகேசரிடம் சிறிது கையைத் தட்டிச் சப்தம் செய்து, “சிவன் திருவடியில் மனத்தைப் பதிய வைத்த சண்டிகேசரே, சிவ சேவையின் பலத்தைக் கொடுத்தருளும்” என்று விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்பின் வைரவரைத் தரிசித்துவிட்டுத் தட்சிணாமூர்த்தியின் திருமுன்னே அல்லது கொடி மரத்தின் அருகே அமர்ந்து சிறிதுநேரம் பஞ்சாட்சர ஜபம் செய்து, கோபுர வாயிற்படியில் அமர்ந்து, தம்மைத் தொடர்ந்து வந்த மகாபலி முதலியவர்களை அனுப்பி விட்டு வீடு செல்ல வேண்டும்.

சிவதீட்சை பெற்று ஆசாரிய அபிடேகம் ஆனவரே லிங்கத்தைத் தொட்டு அபிடேகம், அலங்காரம், அருச்சனை முதலியவற்றைச் செய்யத் தக்கவர் ஆவர்.

சக்தி உள்ளவர்கள் மண்டபம் கட்டுதல், கோபுரம் அமைத்தல், தடாகம் உத்தியானம் அமைத்தல், வாகனங்களைச் செய்து அளித்தல்,பிரதோஷம் சுக்கிரவாரம் முதலிய விழாச் செய்வித்தல், ஆலயத்தைப் பெருக்கி மெழுகிக் கோலமிடல்முதலிய தொண்டுகள் செய்யலாம்.

பஞ்ச பர்வ உற்சவம், பிரமோற்சவம், வாகனம், இரதத்தின் அமைப்பு, சிற்பம் முதலியவற்றைப் பற்றியும் ஆகமங்கள் கூறுகின்றன. சோ. ச.

வைணவ ஆகமங்கள் கோயில்களிலும் வீடுகளிலும் வைத்து வணங்கும் விஷ்ணு விக்கிரகத்தின் தத்துவத்தைப்பற்றியும் வழிபாட்டு முறைகளைப்பற்றியும் கூறும் சமஸ்கிருத நூல்களாகும். அவை விக்கிரக ஆராதனையின் தத்துவார்த்தத்தை விளக்குவதோடு கோயில்களையும் விஷ்ணு விக்கிரகத்தையும் நிர்மாணிக்க வேண்டிய முறைகள், விச்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகள், நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகள், விழாக்காலங்களில் வழிபடுவோரிடம் காணப்படவேண்டிய தகுதிகள், பக்தி சிரத்தையோடு வழிபடுவோர் அடையும் புண்ணிய பலன்கன் ஆகியவற்றை விரிவாகக் கூறுகின்றன. இந்நூல்களின் எண் நூற்றெட்டு என்பர். அவைகள் சங்கிதைகள் என்றும், தந்திரங்கள் என்றும் கூறப்பெறும். சங்கிதை என்பது தொகுதியென்றும், தந்திரம் என்பது முறை என்றும் பொருள்படும். இவை ஸ்ரீ வைணவர்களுடைய வேதநூல்களில் ஒரு பாகமாகும்.

இவை அனைத்தையும் மொத்தமாகப் பாஞ்சராத்திரங்கள் என்றும், பாகவத சாஸ்திரம் என்றும் கூறுவார்கள். பாகவதர்கள், சாத்வர்கள், ஏகாந்திகர்கள் என்று பலவாறு கூறப்பெறும் ஒருநெறிய சித்தத்துடன் பகவானிடம் பக்தி செய்யும் அடியார்களைப் பாத்ம தந்திரமானது பாஞ்சராத்திரிகர் என்று அழைக்கின்றது. பாஞ்சராத்திர வணக்க முறை ஏகயானம் அதாவது ஒரேவழி என்று கூறப்படும். இது பாகவதர்கள் ஒரே கடவுள் வாதிகள் என்பதைக் குறிக்கும். ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு கல்யாண குணங்களுக்கும் பகம் என்று பெயர். அவைகளை உடையவர் பகவான். பகவானே அவர்களுடைய வழிபடு தெய்வமாவர். ஆதலால் பகவானை வழிபடும் விஞ்ஞானம் பாகவத சாஸ்திரம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. பகவானை, வழிபடும் சமயம் பாகவத தருமம்.

இந்தச் சாஸ்திரம் பண்டைக்காலத்திலேயே தோன்றியதாகக் கூறுவர். இதை வேதங்களின் முடி என்று ஸ்ரீ பிரசன்ன சங்கிதையும், இப்பொழுது பதரிகாச்சிரமம் என்று வழங்கும் நரநாராயண ஆச்சிரமத்தில் நாராயணனே இதை நாரதருக்கு உபதேசித்தான் என்று ஈசுவர சங்கிதையும் கூறுகின்றன. பாஞ்சராத்திரமானது வேதம்போல் தொன்மையானது என்று ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் கருதுகிறார்கள். ஆளவந்தார் என்ற யாமுனாசாரியார் பாஞ்சராத்திர ஆகமத்தின் தொன்மையையும் பிரமாணத்தையும் நிலைநாட்டுவதற்கென்று ‘ஆகமப் பிரமாணியம்‘ என்னும் நூலை எழுதியிருக்கிறார். பாஞ்சராத்திரங்கள் வேதங்களுக்குப் புறம்பானவை என்று சில வைதிக மதவிசேஷங்கள் கூறிவந்ததை மறுப்பதற்காகவே அவர் அந்த நூலை எழுதினார். வேதாந்த தேசிகரும் அதே நோக்கத்துடன் தான்'பாஞ்சராத்திர ரட்சை' என்னும் பாண்டித்தியம் நிறைந்த நூலை இயற்றினார்.

ஆகமங்கட்குப் பாஞ்சராத்திரம் என்ற பெயர் ஏற்பட்டதன் காரணம் விளங்கவில்லை. பலர் பலவாறு கூறுவர். யோகம், சாங்கியம், பௌத்தம், ஆருகதம், பாசுபதம் ஆகிய ஐந்து சாஸ்திரங்களும் ஆகமங்களின் முன்னிலையில் இருள்போல் தோன்றுவதால் ஆகமங்ககளுக்குப் பாஞ்சராத்திரங்கள் என்னும் பெயர் உண்டாயிற்று என்று பாத்ம தந்திரம் கூறுகின்றது. பஞ்ச ஐந்து; ராத்திரம் - ஞானம். அதனால் பாஞ்சராத்திரம் என்பது ஐந்துவகை ஞானங்களைக் கூறுவதாகும் என்று நாரத பாஞ்சராத்திரம் கூறுகிறது. அவித்தையை ஒழிப்பதால் அதற்குப் பாஞ்சராத்திரம் என்னும் பெயர் உண்டானது என்று பிரம சங்கிதை கருதுகின்றது. பாஞ்சராத்திரிகர்கள் நாள்தோறும் ஐந்துவித கர்மங்கள் செய்வதால் அவர்களுக்கு அந்தப் பெயர் உண்டாயிற்று என்று சிலர் கூறுவர்.

நாராயணன் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச என்னும் ஐந்து உருவங்களில் தன்னை வெளிப்படுத்துகிறான் என்பதே வைணவ ஆகமங்களின் முக்கியமான கொள்கையாயிருப்பதால் அதுதான் பாஞ்சராத்திரம் என்னும் பெயர் வந்ததற்குக் காரணம் என்று டாக்டர் ஒட்டோ ஷ்ரேடர் என்பவர் அஹிர்புத்னிய சங்கிதையை ஆதாரமாகக்கொண்டு கூறுகிறார். அவர் கூறும் கொள்கைதான் பாஞ்சராத்திர தத்துவ சாஸ்திரத்தின் உயிர்நாடி. அதுவே கடவுள் சூக்குமத்தினின்றும் தூலமாக வெளிப்படுத்திக்கொள்ளும் அவதார முறையாகும். பர, வியூக, விபவ நிலைகள் அண்டத்தில் பரம்பொருள் என்றும் மறைந்து நிற்கும் நிலைகளாகும். அந்தர்யாமி நிலை ஆன்மாவிடம் கோவில்கொண்டிருப்பது. அர்ச்ச நிலைதான் அடியார்கள் எளிதில் கண்டு வணங்குதற்கு ஏற்ற தூல் நிலை. ஆதலால் அவதாரங்கள் அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் சம்பந்தமுடையவைகளே. கடவுள் பெரிதினும் பெரிதாயும், சிறிதினும் சிறிதாயுமிருக்கிறார்.

இந்தப் புராதனக்கொள்கையை அவ்வப்போது தோன்றி உபதேசித்த ஆசாரியார்கள் பலராவார். அவர்களுள் நம்மாழ்வார் என்னும் சடகோபரே தலையாயவர். அவரும் மற்றப் பக்த சிரேஷ்டர்களும் மக்கள் நலம் கருதித் தம் கருணையின் காரணமாக அவதாரம் செய்ததாகக் கூறுவர். பாஞ்சராத்திரக் கொள்கையை உபதேசித்தவராகச் சடகோபரைக் கூறுவதுபோலவே சனகர், சாண்டிலியர், பிரகலாதர், சுக்கிரீவர், அனுமார், விபீஷணர் ஆகியவரையும் கூறுவார்கள். பிருகத் பிரம சங்கிதை இந்த ஆசாரியார்களின் பட்டியில் இராமானுசரையும் சேர்த்திருக்கின்றது.

பாஞ்சராத்திர வைணவ ஆகமங்கள் ஸ்ரீ வைணவன் ஆவதற்கு அனுஷ்டிக்கவேண்டிய ஐந்து சம்ஸ்காரங்களை அல்லது சமயக்கடன்களைக் கூறுகின்றது. அவை சமயத்தின் இரகசியத்தை அறிவதற்கான தீட்சைகளாகும். 1. விஷ்ணுவின் சின்னங்களாகிய சங்கும் சக்கரமும் தோள்களில் முத்திரித்துக்கொள்ளும் தாபம், 2. நெற்றியிலும் நெஞ்சிலும் திருமண்ணும் ஸ்ரீ சூரணமும் கொண்டு நாமம் இட்டுக்கொள்ளும் புண்டரம், 3. கடவுளுடைய அடியான் என்பதைக் காட்டும் பொருட்டுக் கடவுளுடைய திருநாமங்களில் ஒன்றுடன் தாசன் என்னும் மொழியைச் சேர்த்துப் புதிதாகப் பெயர் கொள்ளும் நாமம், 4. தீட்சை பெறும்பொழுது ஆசாரியர் செவியில் கூறும் தெய்விக மந்திரம், 5. இந்த நான்குபுறக் கடன்களின் பலனாகத் தைலதாரைபோல் ஈசுவரனிடம் இடைவிடாமல் ஐக்கியப்பட்டு நிற்கும் யோகநிலை. எப்பொழுதும் ஈசுவர, சன்னிதானத்தில் இருப்பதாக எண்ணி வாழ்வதற்கான வழியை வகுப்பதே இச்சமயக் கடன்களின் நோக்கம்.

ஸ்ரீ வைணவ சமய தீட்சையைப் பெற்று முத்தி நெறியில் நிற்பதற்குச் சாதி, ஆசிரமம், வழக்கம், பால் முதலிய வேற்றுமைகளின்றி அனைவர்க்கும் உரிமை உண்டு என்று பாஞ்சராத்திர ஆகமங்கள் கூறுகின்றன. அதனால் முக்தி நாடி வருபவர் அனைவரும் ஐந்து சமயக் கடன்களையும் மேற்கொள்ளலாம். அவர்கள் எல்லோரும் சமமாகவே எண்ணப்படுவர் என்று ஈசுவர சங்கிதை கூறுகிறது.

பாகவதர்கள் நாள்தோறும் செய்யவேண்டிய ஐந்து. சரியைகளுக்குப் பஞ்சகலை என்று பெயர். அவை அபிகமனம், உபாதானம், இஜ்யம், சுவாத்தியாயம், யோகம் என்று பாத்ம தந்திரம் சரியை பாதம் என்னும் அத்தியாயத்தில் கூறுகின்றது. அபிகமனம் என்பதே நாள்தோறும் முதலில் செய்யவேண்டிய சரியை. நீராடலும் காலைப் பிரார்த்தனையமாகும். உபாதானம் என்பது பாகவத கைங்கரியத்துக்காக உடலைக் காப்பதற்கு வேண்டிய அளவு உணவோ, பொருளோ தேடும் தொழில் செய்தல். தேவைக்கு மிஞ்சிய பொருளைப் பெறவும் வைத்துக்கொள்ளவும் மறுத்தலாகிய அபரிக்கிரகமும் அதில் அடங்கும். இஜ்யம் என்பது வீட்டுக் கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ள விஷ்ணு விக்கிரகத்தை நாள்தோறும் சடங்குமுறை வழுவாது வணங்குதல். சுவாத்தியாயம் என்பது வைணவ வேத சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் ஆராய்தல். யோகம் என்பது எந்நேரமும் ஈசுவரனைத் தியானம் செய்தல். இந்தப் புண்ணிய கைங்கரியங்களுக்காக ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலைவரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஆகவே அபிகமனத்துடன் தொடங்கிய நாள் உறங்குமுன் தன்னை ஈசுவரனிடம் பரிபூரணமாக ஒப்புவிக்கும் தியானத்துடன் முடிவடைகின்றது.

இந்த வைணவ மதத்தைத் தமிழ்நாட்டில் பரவச் செய்தவர்கள் சடகோபர் முதலிய ஆழ்வார்களும், இராமானுசர் முதலிய ஆசாரியார்களும் ஆவர். “என் பக்தர்கள் என் பாதநீர் பருகி என் மதம் நடைபெறும் தமிழ் நாட்டில் அவதரிப்பர்” என்று பகவானே அருளிச் செய்திருப்பதாகப் பிருகத் பிரம சங்கிதை கூறுகிறது. பாகவதமும் ஆழ்வார்களைத் தமிழ் மக்களுடைய ஆன்ம லாபத்துக்காக அவதரித்த ஞானிகள் என்று கூறுகிறது. அவர்கள் அனைவரும் தாமிரபரணி, கிருத மாலை, பாலாறு, காவேரி ஆகிய நதி தீரங்களில் பிறந்தனர்.

சடகோபர் வைணவ மதத்தைத் தமிழில் செய்து தந்தபடியால், வேதம் தமிழ் செய்த மாறன் என்று பெயர் பெற்றார். நாலாயிரப் பிரபந்தங்கள் என்னும் தமிழ் வேதத்தைப் பகவான் சன்னிதானத்தில் வைணவ இன்னிசைப் பாடகர்கள் ஓதவேண்டும் என்று ஈசுவர சங்கிதை கூறுகிறது.

இராமானந்தர் என்பவர் பாகவத மதத்தை வடநாட்டில் பரவச் செய்ததுபற்றிப் பக்தமாலை என்னும் நூல் கூறுகிறது.

இவ்வாறு வைணவ ஆகமங்கள் பாகவத மதத்தை விளக்குவதோடு எவ்வாறு வடமொழியும் தென் மொழி யும் இந்திய மதக் கொள்கைக்கு ஒன்று சேர்ந்து உதவியுள்ளன என்பதையும் அறிவிக்கின்றன. வைணவ ஆகமங்கள் இன்றும் தென் இந்தியக் கோவில்களிலும் சடங்குகளிலும் நிலைத்து நிற்கின்றன.

வைணவக் கோயில்களில் நடைபெற வேண்டிய வழிபாட்டுமுறை பாஞ்சராத்திர முறை என்றும் வைகானச முறை என்றும் இரு வகைப்படும். இரண்டு முறைகளுக்கும் அடிநிலையாகவுள்ள தத்துவசாஸ்திரம் ஒன்றே. வைகானச முறை கோயில் வழிபாட்டை மிக விரிவான வகையில் வகுத்துள்ளது. அதனால் அதைத் தந்திரம் அல்லது பிரயோகம் என்று கூறுவர். இந்த முறைப்படி வழிபாடு செய்ய எல்லா ஸ்ரீ வைணவர்க்கும் உரிமை கிடையாது. எல்லோரும் வீட்டிலும் கோவிலிலும் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடுசெய்யவே உரிமை உடையயவர்கள். வைகானச முறையை அனுஷ்டிக்க உரிமை உடையவர்கள் அதற்கென்று மிக்க தகுதி பெற்ற வைகானச அருச்சகர் அல்லது வைகானச விப்பிரர் மட்டுமே ஆவார். வைகானச அருச்சகர்கள் தனிக்குழுவினராவர். வைகானச அருச்சகர் ஆகிறவர் முதலில் விரிவான தீட்சையும் பயிற்சியும் பெறவேண்டும். வைணவக் கோயில்களுள் சில பாஞ்சராத்திர முறையையும், சில வைகானச முறையையும் கையாள்கின்றன. வைகானச முறையைக் கையாளும் கோயில்களில் வைகானச அருச்சகர்கள்தான் வழிபாடு நடத்தலாம். வைகானச விப்பிரர்களும் தனிச் சாதியினர்போல் இருந்து வருகிறார்கள். மை. ய.

சாக்தம் : சக்தி சம்பந்தமான கொள்கைக்குச் சாக்தமென்று பெயர். ஈசுவர தத்துவத்தைச் சக்தியாகவும், அதனையே உலகமாதாவாகவும் வழிபடும் சாக்த மதம் மிகப் பழமையானது ; சக்தி வழிபாடு வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. மொகஞ்சதாரோவில் பூமியின் கீழ் அகப்பட்ட தாய்த் தெய்வத்தின் விக்கிரகங்களாலும் இதன் பழமை வலியுறுகின்றது.

தாய்த் தெய்வ வழிபாடாகும் சாக்த மதம் இந்தியாவிலன்றி ஐரோப்பாவிலும் கிறிஸ்தவ மதம் ஏற்படுவதற்கு முன்பே இருந்ததாகப் பல பிரமாணங்களால் தெரிகின்றது. தனது பெண் வடிவத்தால் எல்லா உலகத்தையும் பிரகாசிக்கச் செய்து, தனது அபார சக்தியால் உலகிலுள்ள எல்லா நலன்களையும் ஓங்கச் செய்யும் மகத்தான பெண் தெய்வம் ரோம ராஜ்யத்திலுள்ள யாவராலும் வணங்கப் பெற்றிருந்தது என்றும், அந்தத் தாய்க்கடவுளுக்குச் சந்திர கலையோடு கூடிய சிரசில் நீண்ட கூந்தல் ஒரு பெரிய மாலைபோல் தொங்கிக் கொண்டிருந்த தென்றும் கூறுகின்றனர். இஃதன்றியும் அந்தப் பெண் தெய்வம் கீழ்வருமாறு தனக்குத் தானே கூறுவதாகவும் கூறுகின்றனர்:

“உலகில் சராசரமான எல்லாவற்றிற்கும் நானே தாய். எல்லாத் தத்துவங்களையும் நானே இயக்குகின்றேன். நானே தலைவி. நானே சிருஷ்டி கர்த்தா. தெய்வீக சக்திகளுக்கெல்லாம் நானே நாயகி. சுவர்க்கத்திற்கு அரசியும் நானே. ககோளத்திலுள்ள கிரஹ நக்ஷத்திர தேவதைகளுக்கெல்லாம் முதன்மையானவள் நானே. எனது நாமமும் தெய்வீக சக்தியும் உலகெங்கும் பிரகாசித்து அலங்கரிக்கின்றன. என்னை உலகத்தில் பல தேசங்களில் பற்பல வேற்றுமைகளோடு கூடிய பற்பல ஜாதியார் பற்பல விதமாகக் கூறுகின்றனர். பிர்ஜியர் தெய்வங்களின் தாய் என்றும், அதேனியர் மினர்வா என்றும், ஐப்ரியர் வீனஸ் என்றும், காண்டியர் டையனா வென்றும், ஸிஸிலியர் ட்ரோஜர் பினா என்றும், எலூஷியர் ஸிரெஸ் என்றும், சிலர் ஜூனோ என்றும், மற்றும் சிலர் பெல்லோனாவென்றும், வேறு சிலர் ஹிகேட் என்றும் என்னைக் கூறுகின்றனர். பழைமையான சன்மார்க்கப் பழக்க வழக்கங்களையுடைய எகிப்தியர்களும், கீழ்க்கரையிலுள்ள இத்தியோப்பியர்களும் என்னை ஐசிஸ் ராணி என்று அழைக்கின்றனர்.”

மேலும், பிரான்ஸ் தேசத்தில் சில பெண் தெய்வ உருவங்களைக் கண்டுபிடித்ததாகத் தெரிகின்றது. இதனால் தாய்த் தெய்வ வழிபாடு, பிரான்ஸ் தேசத்திலும், கிறிஸ்து மதம் உண்டாவதற்கு முன் இருந்ததாக ஏற்படுகிறது. பிரிட்டனிலும் இவ்வழிபாடு அக்காலத்திலேயே உண்டென அறிகிறோம்.

யூதர்களும். இந்துக்களின் தாந்திரிக சக்தி வழிபாட்டைப் போலவே தாய்க் கடவுளை வழிபட்டு வந்தனரென்பதில் ஐயமில்லை. சீனர் ஜப்பானியர்களுடைய தந்திர சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்ததிலிருந்து புத்த மதத்திலும் சக்தி வழிபாடு மிகப் பழைய காலந்தொட்டு நடந்தேறி வந்ததாகக் கூறுகின்றனர். இதன் உண்மை ஸர் ஜான் உட்ராப் என்பவர் வெளியிட்டுள்ள பௌத்த தந்திர நூலாகிய ஸ்ரீசக்ரஸம்பாரம் என்பதனாலும் விளங்கும். இதனால் சாக்த மதம் சீனா, ஜப்பான், திபெத்து முதலிய கீழ்நாடுகளிலும் பரவியுள்ள விஷயம் விளங்குகின்றது.

சாக்தம் சிலருக்குத்தான் உரிமையுள்ளது என்று இந்தியாவில் கருதப்படவில்லை. சைவர், வைஷ்ணவர், பௌத்தர், ஜைனர், சீக்கியர் முதலிய எல்லா மதத்தினர்களுக்கும் சக்தி வழிபாட்டில் உரிமையுண்டு. அன்றியும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஆண், பெண் என்னும் வேற்றுமைகள் யாவுமின்றி யாவரும் இந்த சாக்த மதத்தைத் தழுவி ஒழுகிப் பெறுதற்கரிய பெரும் பேற்றைப் பெறலாம் என்று தந்திரங்கள் கூறுகின்றன.

சைவம், வைஷ்ணவம், பௌத்தம் முதலிய ஆகமங்களுக்குப் பொதுவாயுள்ள சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பெரும் பிரிவுகள் சாக்த ஆகமதத்திற்கும் உண்டு. இவற்றுள் சரியை-கிரியைகள் கரும காண்டத்திற் சேர்ந்தன. இவற்றுள்தான் யந்திரங்கள், மந்திரங்கள், புறமுக ஆராதனைக் கிரமங்கள், ஆசார பேதங்கள், இந்திர ஜாலாதிகள், வசியம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம் முதலிய தீய கருமங்கள் கூறப்பட்டுள்ளன. இவை மிக மிகத் தாழ்ந்த மனோபாவமுள்ள அதமாதிகட்குரிய விஷயங்களாகும். யோக மென்பது பிண்டமாகும் சரீரத்தில் மூலதாரம், சுவாதிஷ்டானம் முதலிய சக்கரங்களில் பற்பல சூட்சும தேவதைகளையும் பீஜாட்சரங்களையும் உள்முகமாகப் பாவனை செய்து ஜீவ சக்தியாகும் குண்டலினியை விழிப்படையச் செய்து, சுழுமுனை வழியாகச் சிரசிலுள்ள ஆயிரவிதழ்க் கமலத்தில் விளங்கும் செம்பொருளோடு சேர்த்து, அச்சேர்க்கையால் பெருகும் அமிர்தத்தைப் பருகி ஆனந்தமாக இருக்கும் நிலையை யுணர்த்துகின்றது.

ஞானபாகமோவெனின் உலகமாகும் அண்டத்திலும் பிண்டமாகும் சரீரத்திலும் தோன்றும் சக்திகள் யாவும் அண்ட பிண்டங்களுக்குச் சம்பந்தப் பட்டவையாதலின் சட சக்திகள் என்றும், அவை உற்பத்தி,

விகாரம், நாசம் முதலியவைகளற்ற சிற்சத்தியினின்றும் கற்பிதமாய்த் தோன்றினவாதலின் உண்மையல்லவென்றும், அருளாநந்த வடிவ சிற்சக்தி ஒன்றே உண்மையானதென்றும், இந்த அருட் சக்தியின் அருளால்தான் செம்பொருளை உணராமல் உணரலாமென்றும், இதனால் சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய பேரொளி வடிவப் பேரின்பமாகலாமென்றும் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே மெய்யுணர்வாகும் தத்துவ ஞானத்தையும், இதற்குச் சாதனமான யோகத்தையும் கூறும் ஞானம், யோகம் என்னும் ஆகம பாகங்களில் ஒழுக்கக் குறைபாடுகளுக்கு இடமேயில்லை. சாக்த ஆகமங்கள் தந்திர பேதங்கள் அறுபத்து நான்கென்று பெரியோர் வரையறுத்துள்ளார்கள்.

சாக்த ஆகமங்களின் சிறந்த சித்தாந்தம் வருமாறு: சூரியனிடத்தில் கதிர்களைப் போலவும், பூவில் மணம் போலவும், சந்திரனிடத்தில் நிலவு போலவும், இரத்தினங்களில் ஒளியைப் போலவும் கடவுள் அல்லது செம்பொருளிடத்தில் ஞானம், விமரிசம், சுதந்திரம், ஆநந்தம், அருள் எனப் பல படியாகக் கூறப்படும் ஓர் ஒப்பற்ற சக்தியுண்டு. செம்பொருளும் அருட் சக்தியும் ஒன்றே. கடவுளையும் சக்தியையும் எவ்வகையாகவேனும் வேறு பிரிக்க முடியாது. ஆதலின் அது அபின்னை. சூரிய கிரணங்கள் உலகை விளக்க வேண்டிச் சூரியனை விட்டுப் பகிர்முகமாய் வியாபித்து, வெயில் என்னும் பெயரைப் பெற்றதுபோலக் கடவுளின் அருட் சக்தியும், பிரபஞ்ச சிருஷ்டியின் பொருட்டு அக்கடவுள் வடிவத்தினின்றும் பகிர்முகப்பட்டுச் சட சக்தி யென்னும் பெயரை எய்தியது. இந்தச் சட சக்தியே மாயை என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

பேய்த்தேரில் புனல் தோன்றுவதைப் போல, அருட் சக்தியாகும் சிற்சத்தியில் உண்மையில் என்றும் இல்லாத சடமாயா சக்தி கற்பிதமாகத் தோன்றிற்று. இது கடவுளுக்குப் பின்னமானது ; வேறானது. செம்பொருள் இந்தப் பின்னச் சக்தியோடு கூடித்தான் இவ்வுலகைப் படைத்தது. உலகப் படைப்பின் நிமித்தமாகத்தான் அறிவானந்த வடிவ அருட்சக்தியினின்றும் சடமாயா சக்தியின் தோற்றம் உண்டாயது.இந்த மாயா சக்திக்குச் சம்பவிக்கக் கூடாதவற்றை யெல்லாம் சம்பவிக்கும்படி செய்யும் திறமை உண்டு. இதனின்றும் எண்ணிறந்த சக்திகள் தோன்றின. அவற்றுள் ஆதிசக்தி, பராசக்தி, ஞானசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்திகள் முக்கியமானவையாகும். மாயையோடு கூடிய கடவுளுக்கு உலகப் படைப்பின் நிமித்தமாகவுள்ள அறிவுக்கு ஞான சக்தியென்றும், படைக்க வேண்டும் என்னும் நினைப்பிற்கு இச்சா சக்தியென்றும், படைத்தலாகிய கிரியைக்குக் கிரியா சக்தியென்றும் பெயர்.

இவ்வுலகம் முப்பத்தாறு தத்துவங்களோடு விளங்குகின்றது. அவை சிவ தத்துவம், வித்யா தத்துவம், ஆன்ம தத்துவம் என மூன்று பெரும் பிரிவுகளை யுடையனவாகும். ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு. நிலம், நீர் முதலிய பூதங்கள் ஐந்து; கந்தம் முதலிய தன்மாத்திரைகள் ஐந்து ; கை கால் முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்து ; கண் காது முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்து; ரஜோகுணப் பிரதானமான அகங்கார விருத்தியொன்று; சத்துவகுண வடிவ புத்தி விருத்தியொன்று; தமோகுணமான மனோ விருத்தி யொன்று; குணங்களின் சமஷ்டி வடிவப் பிரகிருதி யொன்று ; ஆக இருபத்து நான்கு. இவை அசுத்த சடசொரூபங்களாகும். சீவன் போகத்தை அனுபவிக்கக்கூடிய சரீர வடிவினவாகும்.

வித்தியா தத்துவங்கள் ஏழு. இவற்றின் விளக்கமாவது: சித்தத்தோடு கூடிய சீவனே புருஷனெனப்படுவன். பேதத்தையுண்டாக்கும் ஆற்றலையுடையது மாயையெனப்படும். கலை, அவித்தை, ராகம், காலம், நியதி யென்னும் ஐந்து தத்துவங்களும் மறைப்புக்களாகும். ஐந்து கஞ்சுகங்களோடு கூடிய மாயையானது இறைவனுக்கு எள்ளளவும் பின்னப்படாத புருஷனை மயக்கி வேறுபடுத்துகின்றது.

சிவ தத்துவங்கள் ஐந்து. சுகம், சீவன், பரம் என்னும் இவற்றின் பரஸ்பர பேதத்தை யொழிக்கும் பகுத்தறிவே சுத்த வித்தை யெனப்படும். 'காணப்படும் இவ்வுலகு என் வடிவமே' என்று அறிவிப்பது ஈசுவர தத்துவமெனப்படும். 'நானே உலகாய்ப் பிரகாசிக்கின்றேன்' என்னும் அறிவுக்குச் சதாசிவ தத்துவ மென்று பெயர். பேரொளியாயும், அசங்கமாயும், அகர்த்தாவாயுமுள்ள செம்பொருளை உலகப் படைப்பில் சம்பந்தப்படுத்துவது சக்தி தத்துவமென்றும், சக்தி தத்துவத்தோடு கூடிய சக்தியினைச் சிவதத்துவமென்றும் சாஸ்திரங்கள் கூறும்.

இம் முப்பத்தாறு தத்துவங்கள் சைவாகமத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்தத்துவங்களுக்கு அதீதமாய் விளங்குவன சிற்சத்தியும் செம்பொருளுமாம். ந. சு.

நூல்கள் : Sir Arthur Avalon, Principles of Tantra Parts 1 & 2; Sadhana Mata Vol. 2, Gaekwad's Oriental Series.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆகமம்&oldid=1456328" இலிருந்து மீள்விக்கப்பட்டது