கலைக்களஞ்சியம்/ஆஞ்சைனா பெக்டரிஸ்

விக்கிமூலம் இலிருந்து

ஆஞ்சைனா பெக்டரிஸ் (Angina Pectoris) : இந்த நோயில் இருதயத்திசுக்களுக்கு இரத்தம் கொண்டு போகும் இதயத் தமனி (Coronary Artery) முழுவதும் அடைபடாமல் திடீரென்று இறுகிக் குறுகுவதால் அவைகளுக்குப் போதுமான அளவு இரத்த ஓட்டம் இல்லாமல் நோயாளிக்கு வலி ஏற்படுகிறது. சாதாரணமாகக் கோபம் வந்தாலோ, சாப்பிட்ட பிறகு வேகமாக நடந்தாலோ, ஓடினாலோ இது ஏற்படலாம். சாப்பிட்டவுடன் அதிக இரத்தம் வயிற்றிற்குச் சென்று விடுகிறது. அந்தச் சமயத்தில் வேகமாய் நடப்பதால் காலுக்கும் இரத்தம் வரவேண்டியிருக்கிறது. அதனால் இருதயத்திற்குப் போதுமான அளவு இரத்தம் போகாமல் அதற்குச் செல்லும் இரத்தக் குழாய் குறுகுகிறது. இதனால் இருதயத்தின் தசைக்கு இரத்தம் குறையவே வலி ஏற்படுகிறது. இந்த வலி தாங்கமுடியாத துன்பத்தைத் தரும். மார்பில் இருதயத்திற்கு முன்பக்கத்திலும் இடத் தோளிலிருந்து இடக்கைச் சிறுவிரல் வரையிலும் வலி ஏற்படும். நடந்துகொண்டிருக்கும் நோயாளி வலி பொறுக்க முடியாமல் அசைவற்றுச் சிலைபோல் நின்றுவிடுவான். சிறு விரலையும்கூட அசைப்பதற்குப் பயப்படுவான். மரணம் எற்படும் என்ற அச்சம் அதிகமாகத் தோன்றும். இம்மாதிரி வலி முதல் தடவை உண்டாகும்போதே மரணம் ஏற்படலாம். அல்லது பலமுறை வலி கண்ட பிறகு மரணம் ஏற்படலாம். எந்தச் சமயத்தில் மரணம் ஏற்படுமென்று சொல்ல இயலாது. அல்லது வலி படிப்படியாகக் குறைந்து, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் முழுவதும் நன்றாய்விடும். இந்த வலி காணும்போது இரத்த அழுத்தம் (Blood Pressure) அதிகரிக்கும். வலி இருக்கும்போது எலெக்ட்ரோ கார்டியோகிராப் (Electro cardiograph) வைத்துப்பார்த்தால் மாறுதல்கள் காணப்படும். ஆனாலும் வலி நின்றவுடனே அல்லது சிறிது நேரத்திற்கெல்லாம் ஒருவித மாறுதலும் காணப்படாது. முக்கியமாக இரத்த அழுத்தம் அதிகமாய் உள்ளவர்களுக்கே இந்த நோய் காண்கிறது.

நோய்க் கூறு: சாப்பிட்டவுடன் ரயிலுக்கோ பஸ்ஸுக்கோ ஓடும்போது மார்பில் வலி கண்டு, அதனால் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை என்று ஒருவர் நின்றுவிட்டால், இந்த நோய் தோன்றியிருக்கிறது என்றே நிச்சயிக்கவேண்டும். சில சமயங்களில் கிரந்தி (Syphilis) நோயினால் பெருந்தமனியில் நோய் ஏற்பட்டு இதயத் தமனிகள் வாய் குறுகிப்போவதால் இதே மாதிரியான தொந்தரவுகள் ஏற்படலாம். ஆனால் கிரந்தி நோயால் ஏற்படும் வலி மெதுவாகவே உண்டாகும்; மெதுவாகவே மறையும். இந்த நோயாளி அமைதியாய் இருந்தால் மட்டும் போதாது. நாளடைவில் கொஞ்சதூரம் நடந்தாலும் இந்த வலி ஏற்படலாம். இன்னும் சிலநாள் கழிந்த பிறகு நடக்காமலே உட்கார்ந்துகொண்டிருக்கும்பொழுதும் இந்த வலி ஏற்படலாம். அப்படி உடல் முயற்சி இல்லாமல் இருக்கும் பொழுதே வலி ஏற்படுமாயின் அது நல்ல குறியன்று.

சிகிச்சை: இந்த நோய் கண்டவுடனே என்ன காரணத்தினால் காரனெரி தமனிகள் குறுகுகின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும். உடம்பில் கிரந்தி நோய் இருக்கிறதா என்று இரத்தப் பரீட்சையால் கண்டுபிடித்துத் தக்க வைத்தியத்தைச் செய்யவேண்டும். நீரிழிவு நோய் இருந்தால் அதையும் கவனிக்கவேண்டும். வலி ஏற்பட்டிருக்கும்பொழுது வலியை நிறுத்த அமில் நைட்ராஸ் (Amyl Nitras) மருந்தை முகருவதற்குக் கொடுக்க வேண்டும். இதை முகர்ந்தவுடனேயே வலி நின்றுவிடும். உணவு மிதமாகவே இருக்கவேண்டும். உடம்பு களம் அதிகமாய் இருந்தால் அதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ரெ. சு.