கல்லாடம்/66-70

விக்கிமூலம் இலிருந்து

பாடல்:66

கற்புப் பயப்பு உரைத்தல்[தொகு]

எழுகடல் வளைந்த பெருங்கடல் நாப்பண்
பத்துடை நூறு பொற்பமர் பரப்பும்
ஆயிரத்து இரட்டிக் கீழ்மேல் நிலையும்
யோசனை உடுத்த மாசறு காட்சிப்
பனிக்குப் பொருப்பில் திடர்கொள் மூதூர்க் (5)
களவுடை வாழ்க்கை உளமனக் கொடியோன்
படர்மலை ஏழும் குருகமர் பொருப்பும்
மாஎனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும்
கடுங்கனல் பூழி படும்படி நோக்கிய
தாரை எட்டுறையும் கூரிலை நெடுவேல் (10)
காற்படைக் கொடியினன் கருணயொடு அமர்ந்த
புண்ணியக் குன்றம் புடைபொலி கூடல்
பிறைச்சடை முடியினன் பேரருள் அடியவர்க்கு
ஒருகால் தவறா உடைமைத் தென்ன
பிரியாக் கற்பெனும் நிறையுடன் வளர்ந்த (15)
நெடுங்கயல் எறிவிழிக் குறுந்தொடித் திருவினள்
தெய்வமென் றொருகால் தெளியவும் உளத்திலன்
பலவுயிர் தழைக்க ஒருகுடை நிழற்றும்
இருகுல வேந்தர் மறுபுலப் பெரும்பகை
நீர்வடுப் பொருவ நிறுத்திடப் படரினும் (20)
ஏழுயர் இரட்டி மதலைநட் டமைத்த
தன்பழங் கூடம் தனிநிலை அன்றி
உடுநிலை வானப் பெருமுகடு உயரச்
செய்யுமோர் கூடம் புணர்த்தின்
நெய்ம்மிதி உண்ணாது அவன்கடக் களிறே. (25)

பாடல்:67

மருவுதல் உரைத்தல்[தொகு]

பெண்எனப் பெயரிய பெருமகள் குலனுள் உணாநிலன் உண்டு பராய அப் பெருந்தவம் கண்ணுற உருப்பெறும் காட்சியது என்னக் கருவுயிர்த் தெடுத்த குடிமுதல் அன்னை நின்னையும் கடந்தது அன்னவள் அருங்கற்பு (5) அரிகடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற நிலமகள் கடந்தது நலனவள் பொறையே இருவினை நாடி உயிர்தொறும் அமைத்த ஊழையும் கடந்தது வாய்மையின் மதனே கற்பகம் போலும் அற்புதம் பழுத்த (10) நின் இலம் கடந்தது அன்னவள் இல்லம் பேரா வாய்மைநின் ஊரனைக் கடந்தது மற்றவள் ஊரன் கொற்ற வெண்குடையே ஏழுளைப் புரவியோடு எழுகதிர் நோக்கிய சிற்றிலை நெரிஞ்சில் பொற்பூ என்ன (15) நின்முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர் மற்றவள் பார்த்த மதிக்கிளை யினரே உடல்நிழல் மான உனதருள் நிற்கும் என்னையும் கடந்தனள் பொன்னவட்கு இனியோன் கொலைமதில் மூன்றும் இகலறக் கடந்து (20) பெருநிலவு எறித்த புகர்முகத் துளைக்கை பொழிமதக் கறையடி அழிதரக் கடந்து களவில் தொழில்செய் அரிமகன் உடலம் திருநுதல் நோக்கத்து எரிபெறக் கடந்து மாறுகொண்டு அறையும் மதிநூல் கடல்கிளர் (25) சமயக் கணக்கர் தம்திறம் கடந்து புலனொடு தியங்கும் பொய்உளம் கடந்த மலருடன் நிறைந்து வான்வழி கடந்த பொழில்நிறை கூடல் புதுமதிச் சடையோன் மன்நிலை கட வா மனத்தவர் போல (30) ஒன்னவர் இடும்திறைச் செலினும் தன்நிலை கடவாது அவன்பரித் தேரே. (32)

பாடல்:68


பள்ளிடத்து ஊடல்[தொகு]

நீரர மகளிர் நெருக்குபு புகுந்து கண்முகம் காட்டிய காட்சித்து என்ன பெருங்குலை மணந்த நிறைநீர்ச் சிறைப்புனல் மணிநிறப் படாம்முதுகு இடையறப் பூத்து சுரும்பொடு கிடந்த சொரிஇதழ்த் தாமரை (5) கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது நிழல்தலை மணந்து புனல்கிட வாது விண்உடைத் துண்ணும் வினைச்சூர் கவர்ந்த வானவர் மங்கையர் மயக்கம் போல பிணர்க்கரு மருப்பின் பிதிர்பட உழக்கி (10) வெண்கார்க் கழனிக் குருகெழப் புகுந்து கடுக்கைச் சிறுகாய் அமைத்தவாற் கருப்பை இணைஎயிறு என்ன இடை இடை முள்பயில் குறும்புதல் முண்டகம் கரும்பெனத் துய்த்து செங்கண் பகடு தங்குவயல் ஊரர்க்கு (15) அருமறை விதியும் உலகியல் வழக்கும் கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி ஐந்திணை வழுவாது அகப்பொருள் அமுதினை குறுமுனி தேறவும் பெறுமுதல் புலவர்கள் (20) ஏழ்எழு பெயரும் கோதறப் பருகவும் புலனெறி வழக்கில் புணருலக வர்க்கும் முன்தவம் பெருக்கும் முதல்தா பதர்க்கும் நின்றறிந் துணர தமிழ்ப்பெயர் நிறுத்தி எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன் (25) மெய்த்தவக் கூடவிளைல்பொருள் மங்கையர் முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும் சொல்லினும் துவக்கும் புல்லம் போல எம்மிடத்து இலதால் என்னை தம்முளம் தவறிப் போந்தது இவ்விடனே. (30)


பாடல்:69


வழிப்படுத்து உரைத்தல்[தொகு]

செங்கோல் திருவுடன் தெளிந்தறம் பெருக்கிய மறுபுல வேந்தன் உறுபடை எதிர்ந்த கொடுங்கோல் கொற்றவன் நெடும்படை அனைத்தும் சேர இறந்த *திருக்தகு நாளில் அவன்பழி நாட்டு நடுங்குநற் குடிகள் (5) கண்ணொடு கண்ணில் கழறிய போல ஒருவரின் ஒருவர் உள்ளத்து அடக்கித் தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி அம்பல் தூற்றும் இல்வூர் அடக்கி கடல்கிடந் தன்ன நிரை நிரை ஆய (10) வெள்ளமும் மற்றவர் கள்ளமும் கடந்து தாயவர் மயங்கும் தனித்துயர் நிறுத்தி பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்து கிடைப்பல் யானே நும்மை தழைத்தெழு தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும் (15) பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும் முடைத்தலை எரிபொடி உடைமையின் பாலையும் ஆமையும் சலமும் மேவலின் மருதமும் கடுவும் சங்கும் ஒளிர்தலின் நெய்தலும் ஆகத் தனது பேரருள் மேனியில் (20) திணைஐந்து அமைத்த இணைஇலி நாயகன் வரும்தொழில் அனைத்தும் வளர்பெரும் பகலே எரிவிரிந் தன்ன இதழ்ப்பல் தாமரை அருள்முகத் திருவொடு மலர்முகம் குவிய மரகதப் பாசடை இடையிடை நாப்பன் (25) நீலமும் மணியும் நிரைகிடந் தென்ன வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ்விரிப்ப குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவிப் பாசடைக் குடம்பை யூடுகண் படுப்ப துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து (30) விடும் அமு தருந்த விண்ணகத்து அணக்க சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் எறிதிரைப் பழனக் கூடல் செறிக இன்றம்ம திருவொடும் பொலிந்தே (35)


பாடல்:70


கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்[தொகு]

இருநிலம் தாங்கிய வலிகெழு நோன்மைப் பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து திருவெனும் குழவியும் அமுதெனும் பிள்ளையும் மதியெனும் மகவும் அமருலகு அறியக் கண்ணொடு முத்தம் கலுழ்ந்து உடல் கலங்கி (5) வாய்விட் டலறி வயிறுநொந் தீன்ற மனன் எழு வருத்தம் அதுஉடையை ஆதலின் பெருமயல் எய்தா நிறையினள் ஆக என்ஒரு மயிலும் நின்மகளாக் கொண்டு தோன்றிநின் றழியாத் துகளறு பெருந்தவம் (10) நிதிஎனக் கட்டிய குறுமுனிக்கு அருளுடன் தரள மும் சந்தும் எரிகெழு மணியும் முடங்குளை அகழ்ந்த கொடுங்கரிக் கோடும் அகிலும் கனகமும் அருவிகொண் டிறங்கிப் பொருநைஅம் கன்னிக்கு அணிஅணி பூட்டும் (15) செம்புடல் பொதிந்த தெய்வப் பொதியமும் உவட்டாது அணையாது உணர்வெனும் பசியெடுத்து உள்ளமும் செவியும் உருகிநின்று உண்ணும் பெருந்தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த தோடணி கடுக்கைக் கூடல்எம் பெருமான் (20) எவ்வுயிர் இருந்தும் அவ்வுயிர் அதற்குத் தோன்றாது அடங்கிய தொன்மைத் தென்ன ஆர்த்தெழு பெருங்குரல் அமைந்துநின் றொடுங்கிநின் பெருந்தீக் குணனும் ஒழிந்துளம் குளிருறும் இப்பெரு நன்றி இன்றெற்கு உதவுதி (25) எனின்பதம் பணிகுவல் அன்றே நன்கமர் பவள வாயும் கிளர்பச் சுடம்பும் நெடுங்கயல் விழியும் நிறைமலை முலையும் மாசறப் படைத்து மணிவுடல் நிறைத்த பெருமுகில் வயிறளவு ஊட்டித் திருவுலரு அளிக்கும் கடல்மட மகளே! (31)

கல்லாடம்
[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/66-70&oldid=486095" இலிருந்து மீள்விக்கப்பட்டது