காளிதாசன் உவமைகள்/விலங்கு, ஊர்வன, பறப்பன

விக்கிமூலம் இலிருந்து

8. விலங்கு, ஊர்வன, பறப்பன

நிலத் தாய் நமக்கு உணவு தந்து வளர்ப்பவள்; எல்லையற்ற கருணையும் பொறுமையும் உடையவள்; அவள் அகம் குளிர, மேனி குளிர, மழையும் பெய்தது. மழைநீர் புற்றுக்களில் புகுந்து அங்கிருந்த பாம்புகளை வெளியேற்றி விட்டது. அவை சீறி வருகின்றன. பாம்பின் சீற்றத்துக்கு நிலமா காரணம்?

கைகேயி இயற்கையாகத் தூயவள்; அருளுள்ளம் கொண்டவள்; இராமன் வளர்ந்தது அவள் கையில்; தசரதன் அன்பு மழை பொழிந்தனன் அவள் மேல். ஆனால், கைகேயியிடமிருந்தே இரு நச்சுப்பாம்புகள் புறப்பட்டன; அவை கொடியன; அவை தசரதனைக் கடித்தன. அவற்றின் நஞ்சு அவன் மாயக் காரணம் ஆனது அச் செயலுக்குக் கையேயியா காரணம்? ர. 12:5

'கந்த' யானை கூட்டத்திற்குத் தலைமை பூணுகிறது அவ் யானைக்கன்று, 'களபம்', இளம் பருவத்தது எனினும், மற்ற யானைகளை அடக்கும் திறன் பெற்றது. அத்திறன் அதன் இயற்கை மணத்தால் உண்டாவது.

பாம்புக்குட்டி இளையதாயினும் அதன் நஞ்சு விரைவும் கொடுமையும் உடையது.

அரசன் சிறுவனாயினும் உலகிற்குத் தலைமை பூண்டு மக்களை உயர்விக்கும் திறனையும், அவர்களைப் பகைவரிடமிருந்து காக்கும் திறனையும் இயற்கையாகப் பிறவியிலேயே பெறுகிறான்; வயதால் அன்று. வி. 5:18

குரங்குப் படைகள், இராமனுடன் இலங்கையிலிருந்து அயோத்திக்கு வந்தன. இராமன் அவற்றிற்கு நகரமாந்தர்க்கு உரிய ஆடை அணிகளைத் தந்து அலங்காரம் செய்வித்தான். முடிசூட்டும் ஊர்வலத்தில் குரங்குகள் யானைகளின் மேல் நகரத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டன.

குரங்குகள் யானை ஏறி அறியா; எனினும், மலைகளில் ஏறிப் பழகியன. ஆகையால் தாம் மலைகளின் மேல் செல்வதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தன. ஏன்? யானைகளின் உயரமும் பருமனும் மலைகளை ஒத்தன; அவை பொழியும் மதநீர் மலை வீழ் அருவிகளை ஒத்தது.

குரங்குகள் தம் இயற்கைச் சூழ்நிலையில் இருப்பனவாக எண்ணின. ர. 13:74

பாம்பை ஒருவன் மிதித்து விடுகிறான்; உடனே பாம்பு அவனைக் கடிக்கிறது. ஏன்? அவன் குருதியைக் குடித்துத் தன் பசியையோ தாகத்தையோ தீர்த்துக்கொள்ளுவதற்காக அன்று; அவனால் பட்ட தாக்கத்தைப் பொறுக்காது தன் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே.

இராவணன் சீதையை வஞ்சனையால் கவர்ந்தான்; அது இராமன் வில்லின் ஆற்றற்கு மாசு இதை இராமன் தான் பட்ட அவமானமாகவே கருதினான். தனக்கு உண்டான பழியை மீட்கும் பொருட்டுப் படைகளைக் கூட்டி, கடலைத் தூர்த்து, இராவணனைக் குலத்தோடும் களைந்தானே அன்றி, சீதையை மீட்டு அவளுடன் மறுவாழ்வு தொடங்க வேண்டும் என்பதற்காக அன்று. இராவண அழிப்பே இராமனுடைய குறிக்கோள்.

முதலை நீரில் காந்து உறையும்; கரையில் கல்லோடு கல்லாகப் படுத்திருக்கும்; தன்னைக் காட்டிக் கொள்ளாது; முதலை உள்ள நீர்நிலை தெளிந்திருக்கும்.

அஜனுக்குத் தீங்கு இழைக்கக் கருதிய அரசர் அவனிடம் வலிய வந்து திருமணப் பரிசுகள். தந்தனர்; மகிழ்ச்சிக்குறி காட்டித் தம் கருத்தை மறைத்தனர்; தெளிந்த மடுவில் முதலைகளைப்போல மறைந்திருந்தனர். ர. 7:30

நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபெருமானால் உமையின் கண் எதிரே சாம்பலாகி வீழ்ந்தான் மன்மதன். பயத்தால் நடுங்கிய உமை கண்களை மூடி மயங்கிக் கிடந்தாள். உமையின் தந்தையாகிய இமவான் மயங்கிக் கிடந்த மகளைத் தூக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு, மலைச் சிகரங்களுக்கு இடையில் தன் இருப்பிடம் நோக்கி நடந்தான். அந்தக் காட்சி விண்ணில் உள்ள யானை ஒன்று கீழே இழிந்து, தாமரை மலரை நாளத்துடன் தன் கொம்பிடை ஏந்தி, நீண்ட உடலோடு, நெட்டடிகளை எட்ட வைத்து, தன் வழியே செல்வது போல இருந்தது. கு. 73.9

காட்டில் ஒரு மரம், அருகில் இருந்த கொடி மரத்தில் படர்ந்தது. நாளடைவில் கொடியும் மரப்படையில் வேரூன்றி மரத்தைச் சூழ்ந்தே வளர்ந்தது.

ஒரு நாள் பெரிய யானை ஒன்று காட்டு மரங்களை விளையாட்டாக ஒடித்துத் தள்ளியது. அம்மரத்தையும் வீழ்த்தியது. அம் மரத்தை அண்டி இருந்த கொடிகளின் கதி என்ன?

ரதி சிவனிடம் கேட்கிறாள்: “காமனை நீ அழித்தது பாதி அழிவே; அவனை அன்றிக் கதி வேறில்லாத என்னையும் அழித் தாலன்றோ அழிவு முடிவுறும்?” கு. 4:31

சுருக்க - விளக்கம்

கு - குமார சம்பவம்
சா - சாகுந்தலம்
மா - மாளவியாக்கியம்
மே - மேகதூதம்
ர - ரகுவம்சம்
வி- விக்ரம ஊர்வசியம்