குறுந்தொகை 41 முதல் 50 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

பாடல்: 41 (காதலருழை)[தொகு]

பாலை - தலைவி கூற்று

காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.

என்றது, பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர்
அணிலாடு முன்றிலார். (தன் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்)

பாடல் தரும் செய்தி[தொகு]

அவர் என்னுடன் இருந்தபோது திருவிழாக் காலத்தில் ஊர் மகிழ்ந்திருக்குமாறு போல மகிழ்ந்திருந்தேன். திருவிழா முடிந்த மறுநாள் ஒவ்வொரு வீடும் வெறிச்சோடி அதன் முற்றத்தில் அணில் விளையாடுவது போல அவர் என்னைப் பிரிந்திருக்கும்போது என் நெஞ்சில் அவர் நினைவு என்னும் அணில் விளையாடிக்கொண்டிருக்கிறது.

பாடல்: 42 (காமமொழி)[தொகு]

குறிஞ்சி - தோழி கூற்று

காம மொழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென வருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.

என்பது, இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது.

பாடியவர்
கபிலர்.

பாடல் தரும் செய்தி[தொகு]

மழை நின்றுவிட்டால் அருவி கொட்டுவது நின்றுவிடுமா? காம ஆசை இல்லாவிட்டால் நம் தொடர்பு அற்றுப்போகுமா? (இதோ இருக்கிறேன். எடுத்துக்கொள்.) - தலைவி சொன்னது.

பாடல்: 43 (செல்வாரல்லர்)[தொகு]

பாலை - தலைவி கூற்று

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

என்பது, பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது.

பாடியவர்
ஒளவையார்.

பழந்தமிழ்[தொகு]

  • அலமலக்குறும் = அலைமோதும்
  • ஒல்வாள் = தளர்வாள்

பாடல் தரும் செய்தி[தொகு]

பிரிந்து செல்லமாட்டார் என்று பொறுப்பற்று இருந்துவிட்டேன். பிரிந்தால் நான் மனம் தளரமாட்டேன் என்று அவர் பொறுப்பற்று இருந்துவிட்டார். ஆனால் அவர் இப்போது பிரிகிறார். நான் நல்லபாம்பு கௌவியது போல் துடிக்கிறேன். நான் தளர்வதால் அவரும் அதே போலத் துடிக்கிறார்.

பாடல்: 44 (காலேபரி)[தொகு]

செவிலித்தாய் கூற்று
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
என்பது, இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது.
பாடியவர்
வெள்ளிவீதியார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

அவள் அவனுடன் சென்றுவிட்டாள். தேடிச் சென்ற செவிலித்தாய் அலுத்துப்போய்ச் சொல்கிறாள்.

ஓடி ஓடிக் கால்கள் ஓய்ந்தன. பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்துப் போயின. இந்த உலகில் வானத்து மீன்களைக் காட்டிலும் பலர் உள்ளனர். (எனக்கு மட்டும் இந்த நிலை ஏன் வரவேண்டும்?)

பாடல்: 45 (காலையெழுந்து)[தொகு]

மருதம் - தோழி கூற்று

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூர னெல்லினன் பெரிதென
மறுவறுஞ் சிறுவன் றாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.
என்பது, தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழித் தோழி வாயில் நேர்ந்தது.
பாடியவர்
ஆலங்குடி வங்கனார்.

பழந்தமிழ்[தொகு]

பெண் திணை[தொகு]

மொழி நிலையில் உயர்திணை, அஃறிணை என்னும் பாகுபாடுகளே உள்ளன. வாழ்வு நிலையில் அகத்திணை, புறத்திணை என்னும் பாகுபாடுகளும், அவற்றின் உட்பிரிவுத் திணைகளும் உள்ளன. இந்தப் பாடலில் பெண்பால் ஒருத்தி தன்னைப் பெண்திணைப் பிறப்பு என்று கூறிக்கொள்வது புதுமை.

பாடல் தரும் செய்தி[தொகு]

பாடல்: 46 (ஆம்பற்பூ)[தொகு]

மருதம் - தலைவி கூற்று

ஆம்பற் பூவின் சாம்பலன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவினுண் டாது குடைவன வாடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.

என்பது, பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது.

பாடியவர்
மாமலாடன். (இந்தப் புலவர் பெயரை மாமிலாடன் எனவும் குறிப்பிடுகின்றனர் - சு. வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம் பாட்டும் தொகையும்)

பாடல் தரும் செய்தி[தொகு]

  • ஆம்பல் பூ சாம்பல் நிறம் கொண்டது.

ஆம்பல் பூவைப்போல் நிறம் கொண்ட ஊர்க்குருவி வீட்டுக் கூரையில் கூடு கட்டிக்கொண்டு வாழும். வீட்டு முற்றத்தில் காயவைத்திருக்கும் பொருள்களைத் தின்றுவிட்டு மரத்தடியில் எருவாகிக்கொண்டிருக்கும் பூ, விதை போன்றவற்றையும் பொறுக்கி உண்ணும். அவர் பொருள் தேடச் சென்ற நாட்டில் அந்தக் குருவி இல்லை போலும். (இருந்திருந்தால் அதனைப் பார்த்தவுடன் என் நினைவு வருமல்லவா? - இப்படி தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

பாடல்: 47 (கருங்கால்)[தொகு]

தோழி கூற்று


கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.
என்பது, இரா வந்தொழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது.
பாடியவர்
நெடுவெண்ணிலவினார். பாடலிலுள்ள தொடரால் பெயர் சூட்டப்பட்டவர்.

செய்தி[தொகு]

  • புலிக் குருளை என்பது புலிக்குட்டி
  • 'வீ' என்பது வீழும் பூ
  • துறுகல் - பெருங்கல், துறுகல்(குறும்பாறை), சிறுகல் எனப் பாறைக் கற்களை வேறுபடுத்திக் கூறுவர்.

வேங்கைமரத்தின் அடிமரம் கருமை கொண்டது. (அதன் பூ பொன் நிறம் கொண்டிருக்கும்) வேங்கைப்பூ உதிர்ந்துகிடக்கும் குறும்பாறை புலிக்குட்டி போல் நிலா வெளிச்சத்தில் தோன்றும். திருட்டுத்தனமாகக் காதலியை அடைய இரவில் வருபவருக்கு நன்மை தருவதாக இல்லை என்று தலைவி நினைத்து நிலவைத் திட்டுகிறாள்.

பாடல்: 48 (தாதிற்செய்)[தொகு]

தோழி கூற்று


தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பி னொருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.

என்பது, பகற்குறிக்கட் காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாகலின், (தொல்.களவு,16) வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.

செய்தி[தொகு]

  • பாவை - மணலில் வீடு கட்டி விளையாடுவது போல பாவைப்பொம்மை செய்து மகளிர் விளையாடும் விளையாட்டு பாவை. இந்தச் சங்ககால விளையாட்டு மார்கழி மாதத்தில் வைகறைப் பொழுதில் பாவையரை எழுப்பி அழைத்துக்கொண்டு சென்று நீராடும் விளையாட்டாக மாற்றம் பெற்றதை 'திருப்பாவை', 'திருவெம்பாவை' பாடல்களால் அறியலாம்.
  • ஓரை - நீரோடும் நிலத்தில் மகளிர் தோழிமாருடன் ஆடும் விளையாட்டு.

விளையாடும் மகளிர் பூந்தாதுகளால் பொம்மைப்பாவை செய்து பகலில் விளையாடினர். இதனை இப்படியே விட்டுவிட்டுச் சென்றால் காலையில் இந்தப் பாவை வருந்தும் என்று தலைவியிடம் தோழிமார் கூறினர். அதனால் தலைவி இரவு முழுவதும் அதனைக் கைநழுவ விடாமல் காத்துக்கொண்டு வருந்தினாள். இவள் நன்னுதல் பாவை. இவள் கையாறு ஓம்பியதோ தாதினால் செய்த பாவை. இவளுக்கு ஆறுதல் சொல்லக்கூடாதா என்று தோழி காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியிடம் கூறுகிறாள்.

பாடியவர்
பூங்கணுத்திரையார். பொங்கி வரும் ஊதைக்காற்றின் கடல்லையைப் பாடிய காரணத்தால் இவர் பூம் கணுத் திரையார் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளார்.

பாடல்: 49 (அணிற்பல்)[தொகு]

தலைவி கூற்று
அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே.

என்பது, தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது.

பாடியவர்
அம்மூவனார்.
  • திணை - நெய்தல்

செய்தி[தொகு]

சேர்ப்பு

முண்டகம், முண்டகப் பூ அணில் பல்லைப் போல் பூத்திருக்கும். மாக்கழி, மணியின் நிறம் போலச் சிவந்திருக்கும். பண்பின் உச்சம், இந்தப் பிறப்புப் போய் மறுபிறவி வந்தாலும் நீதான் என் கணவன். நான்தான் உன் மனைவி.

பாடல்:50 (ஐயவி)[தொகு]

தலைவி கூற்று
ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறையணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை நெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.

என்றது, கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது.

பாடியவர்
குன்றியனார்.

செய்தி[தொகு]

  • திணை - மருதம்

ஞாழல் பூ வெண்சிறு கடுகு போலப் பூத்து, சிவந்த மருதம்பூ உதிர்ந்து பழம்பூவாய்க் கிடக்கும் பரப்பின் மேல் உதிரும் ஆற்றுத்துறையால் அழகு பெற்றிருக்கும் ஊருக்குத் தலைவர் அவர். ஆனால் அவரைத் தழுவிய என் தோள் வளையல் கழலும்படி துவண்டு தணிமையில் வாடுகிறது. (அவர் பரத்தையிடம் உள்ளார்)