குறுந்தொகை 91 முதல் 100 முடிய

விக்கிமூலம் இலிருந்து

பாடல் 91 (அரிற்பவர்ப்)[தொகு]

மருதத்திணை
தலைவி கூற்று
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி அரில் பவர் பிரம்பின் வரி புறம் விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம் குண்டுநீர் இலஞ்சி கெண்டை கதூஉம்
தண்டுறை யூரன் பெண்டினை யாயிற் தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்
பலவா குகநின் னெஞ்சிற் படரே பல ஆகுக நின் நெஞ்சின் படரே
ஓவா தீயு மாரி வண்கைக் ஓவாது ஈயும் மாரி வண் கை
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி கடும் பகடு யானை நெடு தேர் அஞ்சி
கொன்முனை யிரவூர் போலச் கொன் முனை இரவூர் போல
சிலவா குகநீ துஞ்சு நாளே. சில ஆகுக நீ துஞ்சு நாளே. (91)
என்பது, 1.பரத்தையர் மாட்டுப் பிரிந்த தலைமகன், வாயி்ல் வேண்டிப் புக்கவழித் தன் வரைத்தன்றி அவன் வரைத்தாகி தன் நெஞ்சு நெகிழ்ந்துழித் தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது.
2.பரத்தையிற் பிரிந்து வந்தவழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறியதுமாம்.
பாடியவர்
ஒளவையார்.
சிறப்பு
அதியமான் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்பு.

செய்தி[தொகு]

கெண்டைமீன் பிரப்பம் பழத்தைக் கவர்ந்து உண்ணும் குளங்கள் சூழ்ந்த நாட்டை உடையவன் தலைவன். அவனது மனைவி நீ ஆயின் இரவூர் போல நீ துஞ்சும் நாள் சிலவாகுக. உன் நெஞ்சம் அவன் என்னைக் கவர்ந்து உண்டதை நினைந்து நினைந்து வருந்தும் நாள் பலவாகுக - இவ்வாறு பரத்தை தலைவிக்குச் சொல்லும் பாடல் இது.

கெண்டைமீன் பிரம்புப் பழத்தைக் கௌவும் என்றது தலைவன் பரத்தையைக் கௌவிக்கொண்டதை உணர்த்தும் உள்ளுறை.

வரலாறு[தொகு]

இரவூர் என்னும் ஊரை அதியமான் நெடுமான் அஞ்சி தன் யானைப்படையுடன் சென்று தாக்கினான். அதுமுதல் இரவூர் மக்கள் சில நாட்களே உறங்கினர். பலநாள் அவன் தாக்கியதை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகி வருந்தினர்.

அருஞ்சொல்[தொகு]

  • அரில் = புதர்
  • பவர் = கொடி
  • குண்டு = ஆழம்
  • படர் = நினைவுத் துன்பம்

பாடல் 92 (ஞாயிறு பட்ட)[தொகு]

நெய்தல்திணை
தலைவி கூற்று
ஞாயிறு படட வகல்வாய் வானத் << >> ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை << >> அளிய தாமே கொடு சிறை பறைவை
யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த << >> இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய << >> பிள்ளை உள்வாய் செரீஇய
விரைகொண் டமையின் விரையுமாற் செலவே. << >> இரை கொண்டமையின் விரையுமால் செலவே.
என்பது, காமமிக்க கழிபடர் கிளவியாற் பொழுதுகண்டு சொல்லியது.

(காமம் மிக்க கழிபடர் கிளவி= காமம் மிகுந்த நிலையில், மிகத் துன்பமுற்றுப் பேசும் பேச்சு)

பாடியவர்
தாமோதரன்.

செய்தி[தொகு]

ஞாயிறு மறையும் மாலை வேளை. பறவை தான் கொண்டுவந்த இரையைத் தன் குஞ்சில் வாயில் செருகிவிட்டு, மீண்டும் இரை கொண்டுவர விரைந்து பறந்துகொண்டிருக்கிறது. பிரிந்து சென்றவர் திரும்பவில்லை. (பறவையைப் போல வந்துவிட்டாவது அவர் செல்லலாகாதா) - என்று தலைவி எண்ணுகிறாள்.

இந்தப் பாடல் முழுமையும் உள்ளுறையாக அமைந்துள்ளது.

பாடல் 93 (நன்னலந்)[தொகு]

மருதத் திணை
தலைவி கூற்று
நன்னலந் தொலைய நலமிகச் சாஅ << >> நல் நலம் தொலைய நலம் மிக சாஅய்
யின்னுயிர் கழியினு முரைய லவர்நமக் << >> இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
கன்னையு மத்தனு மல்லரோ தோழி << >> அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே. << >> புலவி அஃது எவனோ அன்பு இலங்கடையே.
என்பது, வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது.
பாடியவர்
அள்ளூர் நன்முல்லையார்.
(ஒப்பு நோக்குக
குறள்:1309, 1310)

செய்தி[தொகு]

தலைவன் பரத்தையிடம் இருந்துவிட்டு இல்லம் மீள்கிறான். தலைவி அவனை வீட்டுக்குள் நுழைய விடவில்லை. தோழி தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு தலைவியிடம் கூறுகிறாள். தலைவி அதனையும் ஏற்றுக்கொள்ளாமல் தோழிக்குக் கூறும் செய்தி இது.

என் மனநலம் தொலைந்தாலும், உடல்நலம் சாய்ந்துபோனாலும் ஆவரை வீட்டுக்குள் வா என்றுமட்டும் சொல்லிவிடாதே. அவரிடம் நான் புலவிப்பிணக்குப் போட்டுக்குக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாயா? இல்லவே இல்லை. அவர் எனக்கு யார்? (கணவர் அல்லர்) தாயும் தந்தையும் ஆவர். தாய் தந்தையரிடம் புலவி கொள்வார்களா? - என்கிறாள் தலைவி.

பாடல் 94 (பெருந்தண்)[தொகு]

முல்லைத்திணை
தலைவி கூற்று
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத் << >> பெரு தண் மாரி பேதை பித்திகத்து
தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே << >> அரும்பே முன்னும் மிக சிவந்தனவே
யானே மருள்வேன் றோழி பானா << >> யானே மருள்வேன் தோழி பால் நாள்
ளின்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்து << >> இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
மென்னா குவர்கொல் பிரிந்திசி னோரே << >> என் ஆகுவர் கொல் பிரிந்திசினோரே
யருவி மாமலைத் தத்தக் << >> அருவி மா மலை தத்த
கருவி மாமழைச் சிலைதருங் குரலே. << >> கருவி மா மழை சிலைதரும் குரலே.
என்பது, பருவங்கண்டு ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பதுபடத் தலைமகள் சொல்லியது.
பாடியவர்
கந்தக் கண்ணன்

செய்தி[தொகு]

மாரிக்காலத்தில் பூக்கும் பித்திகைப் பூ தன் சிவந்த அரும்புகளை விட்டுப் பூக்க இருக்கிறது. அதைக் கண்டு (அவர் வரவில்லையே என்று) நானே மருண்டுகொண்டிருக்கிறேன். இந்த நிலையில் பிரிந்து சென்றுள்ள அவர் நள்ளிரவில் கருக்கொண்டு தொகுதியாய் ஒன்றுபட்டிருக்கும் மேகம் இடிப்பதைக் கேட்டால் (நான் வருந்துவேன் என்று எண்ணி) என்ன ஆவாரோ? எனவே என் வருத்தத்தைப் பற்றிக் கவலைப்படாதே - என்கிறாள் தலைவி தோழியிடம்.

பாடல் 95 (மால்வரை)[தொகு]

குறிஞ்சித்திணை
தலைவன் கூற்று
மால்வரை யிழிதருந் தூவெள் ளருவி << >> மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற் << >> கல் முகை ததும்பும் பல் மலர் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமக << >> சிறுகுடி குறவன் பெரு தோள் குறு மகள்
ணீரோ ரன்ன சாய << >> நீர் ஓரன்ன சாயல்
றீயோ ரன்னவென் னுரனவித் தன்றே. << >> தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.
என்பது, தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
பாடியவர்
கபிலர்.
(ஒப்பு நோக்குக
குறள்: 1088)

செய்தி[தொகு]

புணர்ந்த தலைவியை எண்ணும் தலைவன் மாறுபட்டவனாக அவன் தோழனுக்குத் தென்படுகிறான். அதைப்பற்றிப் பாங்கத்தோழன் தலைவனிடம் வினவுகிறான். தலைவன் தன் காதலியைப்பற்றிச் சொல்கிறான்.

அவள் சிறு குடும்பத்தில் பிறந்த குறவன் மகள். அவள் சின்னப் பெண். என்றாலும் அவளது தோள்(மார்பகம்) பருமையானது. அவளது மேனி தழுவும்போது நீர் போலக் குளுமையானது. பிரிந்திருக்கும்போது அது தீயைப் போல என்னைச் சுட்டு என் மனவலிமையை அழித்துவிட்டது - என்கிறான் தலைவன்.

தலைவனின் நெஞ்சுரம் தீ. அவள் மேனி நீர். நீர் பாய்ந்து தீயை அணைத்துவிட்டது.

பாடல் 96 (அருவிவேங்கை)[தொகு]

குறிஞ்சித்திணை
தலைவி கூற்று
அருவி வேங்கைப் பெருமலை நாடற் << >> அருவி வேங்கை பெரு மலை நாடற்கு
கியானெவன் செய்கோ வென்றி யானது << >> யான் எவன் செய்கோ என்றி யான் அது
நகையென வுணரே னாயி << >> நகை என உணரேன் ஆயின்
னென்னா குவைகொ னன்னுத னீயே. << >> என் ஆகுவை கொல் நல் நுதல் நீயே.
என்பது, தலைமகனை இயற்பழித்துத் தெருட்டுந் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது.
(இயற் பழித்தல்= இயல்பைப் பழித்துக் கூறுதல்; தெருட்டல்= தெளிவித்தல், தேற்றுதல்)
பாடியவர்
அள்ளூர் நன்முல்லை.

செய்தி[தொகு]

அவன் அருவிச் சாரலில் வேங்கை பூக்கும் பெருமலை நாடன். அவன் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தான். (நான் என்ன செய்வேன்? நானும் என் வாயால் அவன் புன்னகையை அவனுக்குத் திருப்பித் தந்துவிட்டேன். (அதனால் என் நுதலில் பசலை) உன் நுதல் நன்னுதல். - தலைவன் தலைவி இயல்புகளைத் தோழி பழித்துக் கூறியபோது தலைவி தன்னைப் பழித்தது சரி என்றும், தன் காதலனைப் பழித்தது சரியன்று என்றும் சொல்கிறாள்.

பாடல் 97 (யானேயீண்டை)[தொகு]

நெய்தல்திணை
தலைவி கூற்று
யானே யீ்ண்டை யேனே யென்னலனே << >> யானே ஈண்டையேனே என் நலனே
வானா நோயொடு கான லஃதே << >> ஆனா நோயொடு கானல் அஃதே
துறைவன் றம்மூ ரானே << >> துறைவன் தம் ஊரானே
மறையல ராகி மன்றத் தஃதே. << >> மறை அலர் ஆகி மன்றத்து அஃதே.
என்பது, வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்
வெண்பூதி.

செய்தி[தொகு]

திருமண மாலம் தள்ளிச் செல்கிறது. தலைவி தலைவனை எண்ணித் தன் தோழியிடம் சொல்கிறாள்.

நான் இங்கே இருக்கிறேன்.
என் நலமாகிய கற்பு இன் காதலன் தழுவிய கானல் நிலப்பரப்பில் கிடக்கிறது.
என் காதலனாகிய துறைவன் தன் ஊரில் இருக்கிறான்.
எங்களுடைய உறவு மட்டும் இந்த ஊர் மன்றத்தார் வாயில் ஊஞ்சலாடிக்கொண்டிருப்பது எப்படி? விந்தை!

பாடல் 98 (இன்னளாயினள்)[தொகு]

முல்லைத்திணை
தலைவி கூற்று
இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த் << >> இன்னள் ஆயினள் நன்னுதல் என்று அவர்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே << >> துன்ன சென்று செப்புநர் பெறினே
நன்றுமன் வாழி தோழி நம் படப்பை << >> நன்றுமன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம்புதற் கலித்த << >> நீர்வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே. << >> மாரி பீரத்து அலர் சில கொண்டே.
என்பது, பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.
பாடியவர்
கோக்குளமுற்றன்.

இப்பாடல் 'குறிப்பு நுட்பம்' எனும் அணி.

செய்தி[தொகு]

தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் ஊரார் அலர் தூற்றுகின்றனர். தலைவி இன்ன நிலையில் இருக்கிறாள் என்று தலைவனிடம் சொன்னால் நன்றாயிருக்குமே என்று தலைவி தன் தோழியிடம் எடுத்துரைக்கிறாள்.

அவரிடம் சென்று சொல்லுவோர் இங்கு மாரிக் காலத்தில் பூத்திருக்கும் பீர்கம் பூ போல என் நெற்றியில் பூத்திருக்கும் பசலைப் பூ பற்றிய செய்திப் பூவையும் அவர்கள் அவரிடம் எடுத்துச் சென்றால் நல்லது. - என்கிறாள்

'மாரிப் பீரத்து அலர்' என்பது இங்கு மாரிக்காலத்தில் பூத்திருக்கும் பீர்க்கம் பூவையும், தலைவன்-தலைவி உறவைப் பற்றிப் பேசப்படும் அலராகிய மறைமுகப் பேச்சையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பாடல் 99 (உள்ளினென)[தொகு]

பாலைத்திணை?
தலைவன் கூற்று
உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி << >> உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து << >> நினைத்தனென் அல்லெனோ பெரிதே நினைத்து
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே << >> மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை << >> நீடிய மரத்த கோடு தோய் மலிர் நிறை
யிறைத்துணச் சென்றற் றாஅங் << >> இறைத்து உண சென்றற்று ஆஅங்கு
கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே. << >> அனை பெரு காமம் ஈண்டு கடைக்கொளவே.
என்பது, பொருள் முற்றிப் புகுந்த தலைமகன் எம்மை நினைத்தும் அறிதிரோ?என்று தோழிக்குச் சொல்லியது.

(முற்றி= பொருள் சம்பாதித்து; புகுந்த= மீண்டு வந்த)

பாடியவர்
ஒளவையார்.

செய்தி[தொகு]

  • மலிர்நிறை = ஏரி மதகில் பீரிட்டுப் பாயும் நிறைநீர் அழுத்தம்
  • கனைப்பெருங் காமம் = பொலிகாளை போலக் கனைத்துக்கொண்டு பெருகிவரும் காமம்
  • கடைக்கொளல் = ஏரியின் கடைவாயிலில் பாய்துவரும் நீர்போல் வெளிப்படல்

பொருள் தேடச் சென்ற தலைமகன் அவனது பணி முற்றுப் பெற்று இல்லம் திரும்பியவுடன் தோழியிடம் சொல்கிறான்.

பொருள் தேடும் காலத்தில் உங்களைப் பற்றிய எண்ணம் எனக்கு வந்ததல்லவா!
நீங்கள் எப்படியிருப்பீர்கள் என்று மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன் அல்லவா!
அப்படி நினைக்கும்போது நீங்கள் பொறுத்துக்கொண்டிருப்பதை எண்ணி வியந்தேன் அல்லவா!
அப்படிப் பொறுத்துக்கொள்வதுதான் உலகத்துப் பண்பு என்று எண்ணி அமைதி கொண்டேன்.
அப்போது நான் எந்த நிலையில் இருந்தேன் தெரியுமா?

ஏரியில் தேங்கிக் கிடக்கும் நீர் அதனை அடைத்திருக்கும் மதகு மரப்பலகை இடுக்குச் சந்துகளுக்கு இடையில் பீரிக்கொண்டு பாய்வது போல என் காம உணர்வு பீரிட்டுப் பாய்ந்துகொண்டிருந்தது. (முழுமையாக வெளிப்படாமல் அடங்கிக் கிடந்தது.) (ஏரி நீர் போல)

பாடல் 100 (அருவிப்பரப்)[தொகு]

குறிஞ்சித்திணை
தலைவன் கூற்று
அருவிப் பரப்பி னைவனம் வித்திப் << >> அருவி பரப்பின் ஐவனம் வித்தி
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்குங் << >> பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற் << >> காந்தள் வேலி சிறு குடி பசிப்பின்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும் << >> கடு கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் லோரி கொல்லிக் குடவரைப் << >> வல்வில் ஓரி கொல்லி குடவரை
பாவையின் மடவந் தனளே << >> பாவையின் மட வந்தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. << >> மணத்தற்கு அரிய பணை பெரு தோளே.
என்பது, 1.பாங்கற்கு உரைத்தது.
2. அல்லகுறிப்பட்டு மீள்கின்றான், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
(அல்லகுறிப்படுதல்= குறி அல்லாததைக் குறியாகப் பிறழ உணர்ந்து செல்லுதல்)
பாடியவர்
கபிலர்.
(சிறப்பு
கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி, அவனுடைய கொல்லி மலை, அதில் வாழும் கொல்லிப்பாவை பற்றிய குறிப்புக்கள்)

செய்தி[தொகு]

  • மடவந்தனள் - மடம் என்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத மடப்பத் தன்மை. மடவா என்பது அதன் வழிவந்த வினை. மடவரல் என்பது மடப்பத் தன்மை உடைய பெண். (மடவா+ந்+த்+அன்+அள்)

தலைவன் தலைவியை அடையச் செல்கிறான். அவள் சொன்ன குறியிடத்துக்குச் செல்ல இயலவில்லை. வேறு இடத்துக்குச் சென்றுவிட்டு மீள்கிறான். அப்போது அவன் அவளைப் பற்றி நினைக்கிறான்.

அவள் கொல்லிப்பாவை போல் அறியாப் பாவை(பொம்மை). கொல்லிப் பாவைக்குப் பருத்த மார்பகம். அதனைத் தழுவ முடியுமா? முடியாது. அதுபோல அவளையும்(தன் காதலியையும்) தழுவமுடியாது. - இப்படி அவன் எண்ணம் ஓடுகிறது.

ஓரி வள்ளல்[தொகு]

ஓரி நாட்டு மக்கள் அருவி பாயும் நிலத்தில் ஐவன நெல் விதைப்பர். அந்த வயலில் பருத்த இலைகளை உடைய குளவிச் செடியும், பசுமையான மரல் என்னும் செடியும் ஐவன நெற்பயிரோடு வளரும். இந்தக் குளவி, மரல் ஆகிய களைச்செடிகளை அவர்கள் களையாகக் களைந்து எறிவர். மற்றொரு பக்கம் காந்தள் பூத்திருக்கும் வேலியை உடைய சிறு குடில்களில் வாழ்பவர்கள் பசி வந்தபோது தாம் சேமித்து வைத்திருக்கும் யானைத் தந்தங்களை உணவுப் பொருள்களுக்குப் பண்டமாற்றுச் செய்துகொண்டு வாழ்வர்.


குறுந்தொகை
[[]] :[[]] :[[]]