சிந்தனையாளன் மாக்கியவெல்லி/மந்திரகோலா (நாடகம்)

விக்கிமூலம் இலிருந்து


நூல் சுருக்கம் : 4
மந்திர கோலா
(மாக்கியவெல்லி எழுதிய இன்பியல் நாடகத்தின் சுருக்கம்)

நாடக உறுப்பினர்

கலிமாக்கோ - பிளாரன்சைச் சேர்ந்த ஓர் இளைஞன். சிரோ - அவனுடைய வேலைக்காரன்.
லிகுரியோ - ஒரு தரகன்,
மெசர் நிக்கியா - ஒரு வழக்கறிஞர்,
லுக்கிரிசியா . அவர் மனைவி,
சோஸ்ட்ராட்டா - அவள் தாய்,
டிமோஷியோ - பாதிரியார்.

காட்சி : 1
பிளாரன்ஸ் நகரில் ஒரு சதுக்கம்

வேலைக்காரன் சிரோ போகப் புறப்படுகிறான் : வாலிபன் கலிமாக்கோ அவனைத் தடுக்கிறான்.

கலி : டேய், சிரோ! போகாதே! இங்கேயே இரு

சிரோ : சரி, இருக்கிறேன், எசமான்!

கலி : நான் பாரிஸிலிருந்து திடீரென்று புறப்பட்டது உனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். அப்படித் திடீரென்று புறப்பட்டு வந்தவன் இங்குவந்து ஒரு மாத காலமாக எதுவும் செய்யாமல் இருப்பதைக் கண்டு நீ இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா?

சிரோ : உண்மைதான்! எசமான்!

கலி : இதன் காரணத்தை நான் முன்னமேயே உன்னிடம் சொல்லவில்லை என்றால், அது நான் உன்மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்பதால் அல்ல. எதையும் தேவையானால் ஒழிய யாரிடமும் சொல்லாமல் இருப்பது தான் இரகசியத்தைக் காப்பாற்றச் சிறந்த வழி என்பது என் கருத்து. ஆனால், இப்போது உன் உதவி எனக்குத் தேவைப்படுகிறபடியால் எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லப்போகிறேன்.

சிரோ : நான் உங்கள் வேலைக்காரன் தானே! வேலைக்காரர்கள் தங்கள் முதலாளிகளின் காரியங்களில் தலையிடக் கூடாது. ஆனால், அவர்கள் அதில் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், அவர்கள் உண்மையாக வேலை செய்யவேண்டும். நான் அவ்வாறுதான் இதுவரை நடந்திருக்கிறேன். இனிமேலும் நடப்பேன்.

கலி : எனக்குப் பத்து வயதாகும்போது என் பெற்றோர் இறந்து போனதும், அதன்பின் நான் பாரிசுக்குப் போய் இருபது ஆண்டுகள் அங்கேயே நிரந்தரமாக இருந்து வருவதும், இந்த் வீ ட்டைத் தவிர வேறு எல்ல்ாச் சொத்துக்களையும் விற்று விட்டு அமைதியாகக் காலங்கழித்து வந்ததும் உனக்குத் தெரிந்தது தான்!

சிரோ : ஆம் நன்றாகத் தெரியும்.

கலி : ஆனால், நான் இன்பமாயிருப்பது காலத்திற்குப் பொறுக்கவில்லை. அது, நண்பன் காமிலோ கல்பூசியைப் பாரிஸ் பட்டணத்துக்கு அனுப்பி வைத்தது.

சிரோ : புரிகிறது! உங்கள் கவலைக்குக் காரணம் என்னவென்பது இப்போதுதான் எனக்குப் புரிய ஆரம்பிக்கிறது:

கலி : பிளாரென்ஸ்காரர்கள் யார் வந்தாலும் நம் வீட்டிற்கு வரவேற்று விருந்து வைப்பதுதான் என் வழக்கமாயிற்றே? நண்பன் காமிலோ கல்பூசியும் அவ்வாறே என்னால் சிறப்பிக்கப்பட்டான். ஒருநாள் சாப்பாட்டுக்குப் பிறகு நாங்கள் எந்த நாட்டுப் பெண்கள் அழகிகள் என்று விவாதித்துப் பேசிக்கொண்டிருந்தோம். இத்தாலியப் பெண்கள் தான் அழகிகள் என்று காமிலோ வாதாடினான். இன்னொரு நண்பன் பிரெஞ்சுப் பெண்களுக்கு நிகரான அழகிகள் உலகத்திலேயே கிடையாதென்றான். கடைசியில், இத்தாலியப் பெண்கள் எல்லோரும் அழகிகள் அல்ல என்று காமிலோ ஒப்புக் கொண்டாலும், தனக்குச் சொந்தக்காரியான ஒரு பெண்ணுக்கு ஈடான அழகி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து தேடினாலும் கிடைக்கமாட்டாளென்று உறுதியாகக் கூறினான்.

சிரோ : புரிகிறது! புரிகிறது. அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதும் எனக்கு இப்போதே தெரிகிறது!

கலி : சரி, கேள். நிக்கியா என்பவரின் மனைவி லுக்கிரியோவின் பெயரைச் சொல்லி அவள் அழகையும், வடிவையும் பலவாறாகப் புகழ்ந்து பாராட்டிப் பேசினான் அவன். அது என் இதயத்தில் அப்படியே பதிந்துவிட்டது. இங்கு வந்தபின் அந்த அழகி லுக்கிரியோவின் புகழ் உண்மையிலேயே பெரிதாக இருந்தது. எனக்கு எப்படியாவது அவளையடைந்த்ாக வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிவிட்டது.

சிரோ : பாரிசில் இருக்கும் போதே நீங்கள் என்னிடம் சொல்லியிருந்தால் தகுந்த புத்திமதி சொல்லியிருப்பேன்.

கலி : டேய் உன் புத்திமதியொன்றையும் நான் எதிர் பார்க்கவில்லை. இதில் உன் உதவியையே எதிர்பார்க்கிறேன்.

சிரோ : தாராளமாகச் செய்கிறேன்! ஆனால், உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதோ?

கலி : அதற்குத் தான் வழியேயில்லாமல் இருக்கிறது. முதலாவதாக அந்த அழகியின் குணமே என் எண்ணத்திற்கு நேர்மாறானதாக இருக்கிறது. அவள் உத்தமபத்தினி. காதலைப் பற்றிச் சிறிதும் எண்ணாத கற்புக்கரசியாக இருக்கிறாள். அத்துடன் அவள் சொற்படி ஆடுகிற ஒரு பணக்காரனைக் கணவனாகப் பெற்றிருக்கிறாள். அவன் வாலிபன் அல்ல என்றாலும் கிழவனும் அல்ல. யார் வீட்டுக்காவது விருந்துக்கோ நடனத்திற்கோ அந்த அழகி வருவாள் என்று எதிர்பார்க்கலாமென்றால் அதற்கும் வழியில்லை. ஏனென்றால், அவளுக்கு நண்பர்களோ உறவினர்களோ கிடையாது. வெளி வேலைக்காரர்கள் யாரையும் அவர்கள் வீட்டுக்குள்ளே விடுவதில்லையாம். உள்ளேயிருக்கிற வேலையாட்களைக் கொண்டு ஏதாவது முயற்சி செய்யலாம் என்றால், அவர்கள் அந்தக் கற்புக்கரசியின் தூய குணங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவளை நெருங்குவதற்கே வழியில்லாமல் இருக்கிறது.

சிரோ : அப்படியானால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!

கலி : இருந்தாலும் நான் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கச் சில காரணங்கள் இருக்கின்றன.

சிரோ : என்ன?

கலி : அவளுடைய கணவன் மெசர் நிக்கியா படித்துப் பட்டம் பெற்ற மனிதரே தவிர புத்திசாலியல்ல. மிகவும் சாதாரணமான ஒரு முட்டாள். அடுத்தபடியாக, அவர்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு பிள்ளைக்கூடப் பிறக்கவில்லை. பிள்ளை வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். மூன்றாவதாக அந்தப் பேரழகியை பெற்றெடுத்த ஒர் தாய்க்காரி ஒர் உல்லாசப் பெண்மணி. பெரிய செலவாளி, ஆனால், இப்போது அவளிடம் ஏராளமாகப் பணம் குவிந்திருப்பதால் அவளை எப்படி வசப்படுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை.

சிரோ : நீங்கள் சிறிதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?

கலி : இல்லையென்று தான் சொல்லவேண்டும். ஆனால், திருமணங்கள் பேசி முடிக்கிற தரகன் லிகுரியோவை உனக்குத் தெரியுமே. அவன் மெசர் நிக்கியாவிடம் நல்ல பழக்கமுடையவன். பணமுடை ஏற்படும்போதெல்லாம் அடிக்கடி அவரிடம் சில்லறை வாங்கிக்கொள்வான். நான் அவனிடம் என் காதலை எடுத்துச் சொன்னேன். அவன் தன்னால் முடிந்தவரை உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறான்.

சிரோ : அவன் உங்களை ஏமாற்றிவிடாமல் இருக்க வேண்டும்!

கலி : அப்படியெல்லாம் செய்ய மாட்டான். மெசர்நிக்கியா தன் மனைவியைப் பிள்ளை வரத்திற்காக தீர்த்த யாத்திரைக்கு அழைத்து வரும்படிச் செய்வதாக அந்தத் தரகன் எனக்கு வாக்களித்திருக்கிறான்.

சிரோ : பத்தினி திர்த்த யாத்திரை போனால், உங்களுக்கு அது எப்படி உதவும்.

கலி : அவள் நீராட வருமிடத்தில், அவள் என்னைக் கவனிக்கும்படியாகவும், என்னுடன் பேசிப் பழகும்படியாகவும் செய்து கொள்ள வேண்டும்.

சிரோ : அவ்வளவு மோசமான யோசனையில்லை. அதோ தரகன் லிகுரியோவும், மெசர் நிக்கியாவும் வருகிறார்கள்.

கலி : சரி, கொஞ்சம் மறைந்து நிற்போம்.

(இருவரும் மறைந்து நின்று கொள்கிறார்கள். அழகியின் கணவன் நிக்கியாவும் தரகன் லிகுரியோவும் அந்தவழியில் பேசிக்கொண்டே வருகிறார்கள், பிறகு நிக்கியர் போய்விடுகிறார். தரகன் மட்டும் நிற்கிறான். வாலிபன் கலிமாக்கோ மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டு வருகிறான்)

கலி : லிகுரியோ! நீ மெசர்நிக்கியாவுடன் வந்ததைப் பார்த்தேன். காரியம் எப்படி முடிகிறதென்று அறிந்து கொள்வதற்காகவே காத்திருந்தேன்.

லிகு : அந்த மடப் பயல், பெரிய முன்னெச்சரிக்கை உள்ளவனாக இருக்கிறான். இந்த பிளாரென்சை விட்டு அடியெடுத்து வைப்பேனா என்று விட்டான். எப்படியோ ஓரளவு சரிப்படுத்தியிருக்கிறேன். ஆனால், அதனால் உமக்கு நன்மையுண்டோ? சொல்லுமையா!

கலி : ஏன் இல்லை!

லிகு : கேளும் இந்தத் தீர்த்த ஸ்தலங்களுக்கு எத்தனையோ பேர் வருவார்கள். வேறு எந்தப் பயலாவது அழகி லுக்கிரிசியாவின் பேரழகில் ஈடுபட்டுவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் உம்மைக் காட்டிலும் கவர்ச்சியானவனாக இருந்துவிட்டால், நாம் பாடுபட வேறொருவன் பலனடைந்ததாக முடிந்துவிடாதோ? சொல்லுமையா!

கலி : நீ சொல்லுவதும் சரிதான். ஆனால், வேறு ஏதாவது வழியிருக்கிறதா? அந்தப் பேரழகுப் பெண்மணியை அடைவதற்காக நான் கொள்ளை, கொலை எதுவும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். அவளையடையாவிட்டால் நான் செத்துப்போய் விடுவேன்.

லிகு : இப்படியெல்லாம் பேசாதிரய்யா! கொஞ்சம் அமைதியாயிரும். என்னால் முடிந்தவரை பார்க்கிறேன்.

கலி : உன்னைப் போன்ற தரகர்கள் ஏமாற்றியே பிழைப்பவர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் நான் உன்னைப் பரிபூரணமாக நம்புகிறேன்.

லிகு : இப்படியெல்லாம் நீர் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது. முதலில் விஷயத்தைக்கேளும், அவளுடைய புருஷன் மெசர் நிக்கியா பிரபு எந்தத் திர்த்த யாத்திரை ஸ்தலம் நல்ல பலனளிக்குமென்று கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வைத்தியரைப் பார்த்துவரும்படி என்னை அனுப்பி இருக்கிறார். நான் சொல்லுகிறபடி நீர் இப்போது நடக்க வேண்டும். நீர் வைத்தியம் படித்தவரென்றும், பாரீஸ் பட்டணத்தில் தொழில் நடத்தியதாகவும் கூறவேண்டும். நீர் தான் படித்திருக்கிறீரே, ஐயா, கொஞ்சம் லத்தின் வார்த்தைகளை ஊடே ஊடே நுழைத்துப் பேசினால் போதும், அவர் அப்படியே நம்பிவிடுவார்.

கலி : அதனால் என்ன பலன் வந்துவிடப் போகிறது?

லிகு : நாம் நினைத்த தீர்த்த யாத்திரை ஸ்தலத்துக்கு அவரைப் போகச் செய்ய முடியும் அல்லது, அதைக்காட்டிலும் மேலான ஒரு திட்டத்தை நாம் முயன்று பார்க்கவும் உதவக்கூடும்.

கலி : என்ன சொல்லுகிறாய்?

லிகு : நீர் என்னை நம்பி இதில் காலை விடுவதானால் சொல்கிறேன். நாளைக் காலையில், உம் எண்ணம் நிறைவேறும்படி செய்து விடுவேன்.

கலி : ஆ! உன் சொற்கள் என்னைத் திரும்பவும் உயிர் பெறச் செய்கின்றன. என்ன செய்யப்போகிறாய் சொல்!

லிகு : கூடிய சிக்கிரம் அதைச் சொல்கிறேன். இப்போது உம் வீட்டுக்குத் திரும்பு. நான் மெசர் நிக்கியா பிரபுவை கூட்டிக்கொண்டு வந்தால் சொன்னபடி நடந்துகொள்.

கலி : அப்படியே செய்கிறேன். ஆனால் நீ ஊட்டும் இந்த நம்பிக்கையெல்லாம் புகைபோல் மறைந்துபோய் விடுமோ என்றுதான் பயமாயிருக்கிறது!

காட்சி : 2
(கணவன் மெசர் நிக்கியாவும் தரகன் லிகுரியோவும் வருகிறார்கள்)

லிகு : ஆண்டவனேதான் இந்த மனிதனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார். பாரிஸ் பட்டனத்தில் அதிசயங்கள் புரிந்தவர் இந்த வைத்தியர். இங்கே பிளாரென்சில் ஏன் தொழில் தொடங்கவில்லை என்று ஆச்சரியப்படாதீர்! பணம் சேர்ந்துவிட்டது. அதனால் தொழிலில் அவர் அக்கறை காட்டவில்லை. இந்த மனிதன் வைத்தியம் பார்க்கிறேன் என்று ஒப்புக் கொள்வதுதான் பெரிய காரியம். ஒப்புக்கொண்டு விட்டால், முடியும் வரை இருந்து ஒருகை பார்த்துவிடுவான்.

மெசர் நிக்கியா : முதலில் அந்த ஆளைப் பார்த்துப் பேசுகிறேன். சரியான ஆள் என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் அவரை வசப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டியதெல்லாம் உன் பொறுப்பு.

லிகு : அந்த ஆள் மட்டும் கெட்டிக்காரனாக இல்லையென்றால் நான் என் பெயரையே மாற்றி வைத்துக்கொள்கிறேன்.

நிக்கியா : சரி, வா போகலாம், அந்த வைத்தியர் வீட்டுக்கு.

(இருவரும் வந்து வீட்டுக் கதவைத் தட்ட வேலைக்காரன் சிரோ யாரென்று கேட்டு திறந்து விடுகிறான். வைத்தியர் உடையில் வாலிபன் கலிமாக்கோ உள்ளறையிலிருந்து வருகிறான்.)

கலி : யார் என்னைப் பார்க்க வேண்டும்?

நிக்கியா : போனாடைஸ், டொமைன் மாஜிஸ்டர்.

கலி : எட் வோபிஸ் போனா, டொமைன் டாக்டர்.

லிகு : என்ன அர்த்தம் இது!

நிக்கியா : சும்மா மாதிரி பார்த்தேன்!

லிகு : இதோ பாருங்கள்! எனக்குப் புரிகிறமாதிரி பேசாவிட்டால், நான் இங்கேயிருந்து போய் விடுகிறேன்.

கலி : என்ன காரியமாக வந்திர்கள்? தெரிந்து கொள்ளலாமா?

நிக்கியா : இந்தத் தரகன் லிகுரியோ, முன்னாலேயே விஷயத்தைச் சொல்லியிருப்பாரென்று நினைக்கிறேன். என் மனைவி எந்த ஸ்தலத்துக்கு தீர்த்த யாத்திரை போனால் நல்லது? முடிவு செய்து வைத்திருக்கிறீர்களா?

கலி : ஆமாம் இந்த தரகர் சொன்னார். ஆனால், முதலில் உங்கள் மனைவியின் மலட்டுத் தன்மைக்கு மூலகாரணம் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண் மலடாயிருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நாம் காசேஸ்டெரிலிட்டட்டிஸ் சன்ட், ஆட் இன்சென்டன், ஆட் இன் மேட் ரைஸ், ஆட் இன் இன்ஸ்ட்ருமென்டிஸ் செமி நரிஸ், ஆட் இன்வர்சா, ஆட் இன் காசா எக்ஸ்டிரின் சிக்கா.

நிக்கியா : (தனக்குள் - ஆள் பலே கைகாரனாகத்தான் இருக்கிறான்)

கலி : (தொடர்ந்து) இப்படிப் பலகாரணங்கள் இருக்கலாம். உங்கள் ஆண்மையின்மை காரணமாக இருந்தால் அதற்கு மாற்றே கிடையாது.

நிக்கியா : என்ன விளையாடுகிறீர்கள்! எனக்கா ஆண்மையில்லை. இந்த பிளாரென்ஸ் நகரிலேயே என்னைக் காட்டிலும் ஆண்மையும் வீரியமும் உள்ளவர் வேறு யார் இருக்கிறார்கள்?

கலி : அப்படியானால், நாம் ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம்.

நிக்கியா : தீர்த்தமாடுவதைக் காட்டிலும் வேறு நல்ல வழியிருந்தால் தேவலாம். ஏனென்றால் என் மனைவிக்கு வெளியூர் போவதென்றால் மிகச் சங்கடமாயிருக்கும்.

லிகு : கருத்தரிக்க ஏதோ மருந்து கலந்து கொடுப்பதாகச் சொன்னீர்களே?

கலி : கொடுக்கலாம். ஆனால், நம்மிடம் பூரண நம்பிக்கையில்லாதவர்களுக்கு எப்படி மருந்து கொடுக்க முடியும்?

நிக்கியா : அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.

லிகு : இவருடைய சம்சாரத்தின் நீரைப் பரிசோதிக்க மாதிரி நீர் வேண்டுமோ?

கலி : ஆம். இல்லாமல் முடியுமா?

நிக்கியா : இதோ கொண்டு வருகிறேன். (மெசர் நிக்கியா தன் வீட்டுக்குப்போய் பெரும்பாடு பட்டுத் தன் மனைவியிடம் இருந்து நீர் மாதிரி கொண்டு வருகிறார். கலிமாக்கோ அதை வாங்கிப் பார்த்துவிட்டு)

கலி : ஆ! மிகவும் பலவீனமாயிருக்கிறது! மெசர் நிக்கியா, நீர் என்னிடம் பூரண நம்பிக்கை வைத்திருக்கிறீர் என்று தெரிந்தால் நான் இதற்குச் சரியான பரிகாரம் செய்வேன். இல்லையென்றால் செய்யவே மாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் மருந்து வாங்கிக் கொள்ளுங்கள். இன்னும் ஓராண்டு காலத்திற்குள் ஒரு குழந்தையை உங்கள் மனைவியின் மடியில் அது தவழவிட வில்லையென்றால் நான் உங்களுக்கு இரண்டாயிரம் நோட்டுகள் பணம் தந்துவிடுகிறேன்.

நிக்கியா : சொல்லுங்கள். கட்சிக்காரனுடைய வழக்கை கேட்பதைக் காட்டிலும் கவனமாக நான் உங்கள் யோசனையைக் கேட்கிறேன்.

கலி : மந்திரகோலா மருந்தில் ஒரு “டோஸ்” சாப்பிட்டால் போதும். எந்தப் பெண்ணுக்கும் உடனே கர்ப்பம் தரித்துவிடும். இந்த மருந்து மட்டும் இல்லையென்றால் பிரஞ்சு தேசத்து மகாராணிக்குப் பிள்ளைகள் பிறந்திருக்காது. இன்னும் எத்தனையோ இளவரசிகளின் கதியும் அப்படித்தான் ஆகியிருக்கும்!

நிக்கியா : ஆ!

கலி : மந்திர கோலா மருந்து தயாரிப்புக்கு வேண்டிய எல்லாம் நான் கொண்டு வந்திருக்கிறேன். எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது நீர் வாங்கிக் கொள்ளலாம்.

நிக்கியா : எப்பொழுது கொடுத்தால் நல்லது?

கலி : இன்று இரவு சாப்பாட்டுக்குப் பின்னால், சந்திரனும் சாதகமான நிலையில் இருக்கிறது. இதைக் காட்டிலும் நல்ல நேரம் வாய்ப்பதரிது!

நிக்கியா : அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் மருந்தைத் தயாரித்துக் கொடுங்கள். என் சம்சாரம் அதைக் குடிக்கும்படி நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.

கலி : ஆனால், இந்த விஷயத்தில் ஒரு பெரிய கஷ்டம் இருக்கிறது. இந்த மருந்தை அவள் உட்கொண்ட பிறகு, முதன் முதலாக அவளோடு மகிழ்ந்திருக்கிற மனிதன் எட்டு நாட்களுக்குள் இறந்து போய்டுவான். அவனைக் காப்பாற்ற இந்த உலகத்தில் எந்த மார்க்கமுமேயில்லை.

நிக்கியா : மரணம், நரகம் சே! அந்த மோசமான மருந்தை நான் தொடவேமாட்டேன்! என்னிடம் விளையாட வேண்டாம். என் கோபத்தைக் கிளற வேண்டாம்.

கலி : கொஞ்சம் பொறுங்கள். அதற்கும் ஒரு மாற்று வழி இருக்கிறது. நிக்கியா : என்ன அது?

கலி : மந்திர கோலா மருந்தை அவள் உட்கொண்டவுடனே, வேறொருவனை அவளுடன் இருக்கும்படி செய்கிறது. அந்த மருந்தின் விஷ நீர் முழுவதும் அவன் உட்லில் இறங்கிவிடும். பிற்கு நீங்கள் எவ்விதமான ஆபத்துமின்றி வழக்கம்போல் உரிமை கொண்டாடலாம்.

நிக்கியா : முடியாது என்னால் முடியாது!

கலி : ஏன் முடியாது?

நிக்கியா : என் மனைவி விபசாரியாவதையோ நான் விபசாரியின் கணவனாக இருப்பதையோ நான் விரும்பவில்லை.

கலி : இப்படியா உமது புத்தி போகிறது? நான் உன்னைப் புத்திசாலி என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். பிரான்ஸ் தேசத்து மகாராஜாவும் அவருடைய மந்திரி பிரதானிகளும் கடைபிடித்தவழியைப் பின்பற்ற உனக்கு இவ்வளவு தயக்கமா?

நிக்கியா : இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு யாரை எங்குபோய் பிடிக்க முடியும். மந்திரகோலா மருந்து உட்கொண்ட மங்கையோடு முதன் முதலில் மகிழ்ந்திருப்பவன் எட்டு நாட்களுக்குள் செத்துப் போய்விடுவான் என்று சொன்னீரே. உண்மையைக் கூறினால் எந்த மடையன் இந்த விஷயத்துக்கு ஒப்புக்கொள்வான். என் மனைவி இருக்கும் பக்கமே எட்டிப்பார்க்காமல் ஓடி விடுவானே? உண்மையைச் சொல்லாவிட்டாலும் நான் அவனை ஏமாற்றிக் கொன்றதாகப் போய்விடும். என் கழுத்துக்கும் தூக்குக் கயிற்றை எதிர்பார்க்க வேண்டியதுதான். இந்தத் துன்பம் எல்லாம் நமக்கு வேண்டாம்.

கலி : இதற்குத்தான் கவலைப்படுகிறீரா? பூ! இதெல்லாம் என் பொறுப்பில் விட்டுவிட்டால் போச்சு!

நிக்கியா : நீர் என்ன செய்வீர்!

கலி : சொல்லுகிறேன் கேளும். இன்று இரவு பத்து மணியைப்போல் மந்திரகோலா மருந்தை உம் சம்சாரம் உட்கொள்ளும்படி செய்யும். பிறகு, நான், சிரோ, லிகுரியோ, நீர் ஆகிய நால்வரும் மாறு வேடத்தில் தெருவில் சென்று முதலில் எதிர்ப்படுகிற மடப்பயல் ஒருவனை அப்படியே மடக்கிக் கண்ணை கட்டிக்கொண்டு போவோம். பிறகு அவனைப் படுக்கையில் விட்டு என்ன செய்யவேண்டும் என்பதை அவனிடம் சொல்வோம். அதில் எவ்விதமான தொந்தரவும் இருக்காது. பிறகு, அவனை அதிகாலையில் கிளப்பி மறுபடி கண்ணைக் கட்டி தூரத்தில் எங்காவது விட்டு விட்டு வருவோம். அவனுக்கு வீடு அடையாளம் தெரியாது. உமது மனைவியைக் குளித்து முழுகிச் சுத்தமாயிருக்கச் செய்து அதன் பிறகு நீர் உமது விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்: ஒரு சிறு ஆபத்துக் கூட ஏற்படாது!

நிக்கியா : பிரான்சு தேசத்து மகாராஜாவே அப்படிச் செய்திருக்கிறார் என்னும்போது நாம் செய்தால் என்ன? ஆனால், விஷயம் வெளிக்குத் தெரியக் கூடாது.

கலி : அது ஏன் தெரியப்போகிறது?

நிக்கியா : இதில் இன்னொரு கஷ்டம் இருக்கிறதே! அது பெரிய கஷ்டமாச்சே!

கலி : என்ன அது!

நிக்கியா : என் மனைவியை எப்படிச் சம்மதிக்கச் செய்வது! அவள் இந்த மாதிரிக் காரியத்துக்கு ஒப்புக் கொள்ளவேமாட்டாளே!

கலி : நானாயிருந்தால், நான் சொல்லுகிறதை என் மனைவி கேட்கவில்லையென்றால் அவளுக்குக் கணவன் என்று சொல்லிக் கொள்ளவேமாட்டேன்.

லிகுரியோ : எனக்கொரு யோசனை தோன்றுகிறது.

நிக்கியா : என்ன?

லிகு : அவளுடைய மத குருவைக் கொண்டு அவளைச் சம்மதிக்கச் செய்யலாம்.

கலி : அவரை யார் சரிப்படுத்துவது?

லிகு : நீர், நான், பணம் எல்லாமாகச் சேர்ந்து தான்!

நிக்கியா : என்ன, இருந்தாலும் விஷயத்தைச் சொன்னால், என் உத்தமமனைவி அந்த மதகுருவைப் போய்ப்பார்க்கக் கூட வரமாட்டாள்.

லிகு : அதற்கொரு வழியிருக்கிறது.

கலி : என்ன?

லிகு : அவள் தாயாரைக் கொண்டு, அவளை மதகுருவிடம் அழைத்துச் செல்லும்படி வைக்கலாம்.

நிக்கியா : அது சரியான யோசனை. என் சம்சாரத்திற்கு தன் தாயிடம் நல்ல நம்பிக்கை உண்டு.

லிகு : சரி, இந்தத் திட்டப்படியே எல்லாம் செய்வோம்!

காட்சி : 3
(தாயார் சோஸ்ட்ராட்டா அம்மையார், மெசர் நிக்கியா, லிகுரியோ ஆகியோர்)

சோஸ்ட்ராட்டா : இரண்டு வழியும் தீமையானதென்றால், தீமை குறைவாயுள்ள வழியைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒரு புத்திசாலியின் கடமை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். பிள்ளைப்பேற்றை அடைவதற்கு வேறு வழியில்லையென்றால், அந்த வழியை மனமொப்பி ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

மெசர் நிக்கியா : நானும் அதே முடிவுக்குத்தான் வந்தேன்!

லிகு : (சோஸ்ட்ராட்டாவிடம்) நீங்கள் உங்கள் புத்திரியைப் போய்ப்பாருங்கள். அதற்கிடையில் நாங்கள் அவளுடைய மதகுருவான டிமோவியோ சாமியாரைப் போய்ப் பார்த்து நிலைமையை விளக்கிச் சொல்கிறோம். அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.

சோஸ் : அப்படியே செய்யலாம் நான் லுக்கிரிசியாவைத் தேடிப்பிடித்து எப்படியாவது சாமியாரிடம் கூட்டிக்கொண்டு வருகிறேன்.

(அவள் போகிறாள்)

லிகு : இந்த மத குருமார்கள் இருக்கிறார்களே, பெரிய ஆசாமிகள், மகா தந்திரசாலிகள் அவர்களுக்கு நம் எல்லோருடைய பாவங்களும் மட்டுமல்லாமல், தங்கள் தங்கள் பாபங்களும் நன்றாகத் தெரியும். அதனால், அவர்களை நன்றாக அறிந்தவர்கள், தவறான வழியில் அவர்கள் ஆதரவைப் பெறுவது மிக எளிது. நீர் ஒன்றும் பேசவேண்டாம். நானே அவரிடம் பேசிக்கொள்கிறேன்.

நிக்கியா : நான் என்னதான் செய்யவேண்டும்?

லிகு : நான் சைகை காட்டினால் ஒழியப் பேசவேண்டாம். நீர் செவிடு என்று அவரிடம் சொல்லிவிடுகிறேன். எல்லாம் நன்றாக முடியும்.

நிக்கியா : சரி.

இருவரும் போகிறார்கள். சாமியாரைக்கண்டு, அவருக்கும், தருமத்திற்கும் பணம் கொடுப்பதாகச் சொல்லி பத்தினி லுக்கிரிசியாவிடம் அவள் தங்கள் திட்டப்படி கருப்பவதியாவதில் தவறில்லை என்று சொல்லி ஒப்புக்கொள்ளச் செய்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பத்தினி, லுக்கிரிசியாவும் அவருடைய தாயார் சோஸ்ட்ராட்டாவும் வருகிறார்கள்.

சோஸ்ட்ராட்டா : அடி பெண்ணே லுக்கிரிசியா! என்னைப்போல் மானம் மரியாதை பார்ப்பவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். நான் உன் நன்மைக்குப் பாதகமாக எதுவும் செய்யமாட்டேன் என்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். எதற்கும் சாமியாரைப் பார்ப்போம். அவர் இதனால் மனச்சாட்சிக்குப் பாதகமில்லை என்று சொல்லிவிட்டால், பிறகு நீ இதைப்பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

லுக்கிரிசியா : இது என்னம்மா விசித்திரமான யோசனை! நான் கற்பிழக்கவேண்டுமென்பதும், என்னைக் கற்பழித்தவன் எட்டு நாளைக்குள் இறந்துபோக வேண்டுமென்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதா? என்னால் பெண்ணினத்துக்கே அவமானம் ஏற்படுவதா?

சோஸ் : இதோ பார்! எனக்கு அதிகம் பேசத்தெரியாது. டிமோஷியோ சாமியார் தர்மம் தெரிந்த பெரியமகான். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யலாம். வா.

லுக்கி : ஆண்டவனே! என் இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது!

மதகுரு டிமோஷியோ சாமியார் முன்னிலையில் அவர்கள் வருகிறார்கள்.

டிமோஷியோ : வாருங்கள்! வாருங்கள்! நீங்கள் எதற்காக வருகிறீர்களென்று எனக்கு முன்ன்மேயே தெரியும். நிக்கியா சொல்லி விட்டுப் போய்விட்டார். நான் நம் மதநூல்கள் எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்துவிட்டேன். முடிவு நமக்குச் சாதகமாகவேயிருக்கிறது.

லுக்கி : குருதேவரே! உண்மையில் தான் சொல்லுகிறீர்களா? அல்லது விளையாடுகிறீர்களா?

டிமோ ; லுக்கிரிசியா! இது என்ன விளையாடக்கூடிய விஷயமா? அல்லது நான் உனக்கு முன்பின் தெரியாத ஆளா?

லுக்கி : இல்லை, இந்த யோசனையே விசித்திரமானதாக இருக்கிறதல்லவா?

டிமோ : இதிலென்ன விசித்திரம். நிச்சயமில்லாத ஒரு தீமைக்குப் பயந்து நிச்சயமான நன்மையை அடையாமல் இருந்துவிடக்கூடாது என்கிறது திருநூல். உன் விஷயத்தை எண்ணிப் பார்ப்போம்.

நீ மருந்தை உட்கொண்ட பின், உன்னோடு முதன் முதலில் மகிழ்ந்திருப்பவன் எட்டு நாளைக்குள் இறந்து போவான் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவன் இறந்து போகாமலும் இருக்கலாம். ஆண்டவனுடைய அருள் அப்படி. ஆனால், எப்படியும் உனக்குப் பிள்ளைப்பேறு உண்டு எனபது நிச்சயம். இந்த நிச்சயமான நன்மையை அடைய அந்த நிச்சயமற்ற பாவத்தை எண்ணிப் பயப்படலாமா?... கற்புப் பற்றி நீ பயப்பட்டால் அதற்கு நான் சமாதானம் சொல்கிறேன். உள்ளத் தூய்மைதான் கற்பே தவிர உடல் தூய்மையல்ல. அப்படியே உடல் தூய்மை கெடுகிறதென்று எண்ணினாலும், உன் கணவன் வெறுப்படையும்படி நடந்து கொள்ளவில்லை. அவனை மகிழ்விக்கவே அவ்வாறு செய்யப்போகிறாய். ஆகவே கணவனை மனநிறைவு கொள்ளச் செய்வதால் உனக்கு சொர்க்கத்தில் இடம் பதிவு செய்யப்படுகிறது.

லுக்கிரிசியா : குருதேவரே! நீங்கள் என்னதான் சொல்லுகிறீர்கள்?

டிமோஷியோ : உன் கணவன் விருப்பத்தை நிறைவேற்று. அதனால் ஏற்படக்கூடிய புண்ணியம் பெரிது. பாவமோ, வெள்ளிக்கிழமை மாமிசம் சாப்பிடுவதைக் காட்டிலும் அற்பமானது. ஒருவேளை தீர்த்தம் குடித்தால் அந்தப் பாவம் தீர்ந்து போய்விடும்.

லுக்கிரிசியா: குருதேவரே! நீங்கள் என்னை எங்கே கொண்டு செல்லுகிறீர்கள்?

டிமோஷியோ : ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமாகும் வழியில் தான் குழந்தாய்!

சோஸ்ட்ராட்டா : மகளே! இனியும் அசட்டுத்தனமாக மறுக்காதே!

லுக்கிரிசியா : சரி, உங்கள் ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பொழுது விடிவதற்குள் நான் செத்துப் போய் விடுவேன் என்று தான் தோன்றுகிறது.

டிமோஷியோ : அஞ்சாதே குழந்தாய்! உனக்காக நான் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பேன்.

சோஸ்ட்ராட்டா : குருதேவரே! தங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்!

லுக்கிரிசியா: ஆண்டவனும் அன்னை மேரியும்தான் இனி என்னைக் காக்க வேண்டும்.

(அவர்கள் போகிறார்கள்)
காட்சி : 4

கலிமாக்கோ : என்ன செய்தார்களோ? என்ன நடந்ததோ? இப்பொழுதே மணி பதினொன்றாகியிருக்கும் போலிருக்கிறதே ஆ! அதோ தரகன் லிகுரியோ வருகிறான்.! எவ்வளவு அவசரமாக வருகிறான்! அவன் சொல்லப் போகும் செய்தி என்னை இன்னும் சில நாட்கள் வாழ வைத்தாலும் வைக்கலாம். அல்லது உடனடியாகச் சாகச் செய்தாலும் செய்யலாம்.

(லிகுரியோ வருகிறான்)

கலி : லிகுரியோ! லிகுரியோ! என்ன செய்தி?

லிகு : நல்ல செய்தி!

கலி : உண்மையாகவா?

லிகு : ஆம்!

கலி : பத்தினி லுக்கிரிசியா ஒப்புக்கொண்டுவிட்டாளா?

லிகு : ஆம்!

கலி : குருதேவர் நம் திட்டத்திற்கு உடன்பட்டாரா?

லிகு : உடன்படாமல் இருப்பாரா!

கலி : கடவுள் என் பிரார்த்தனைக்கு இரங்கிவிட்டார்.

லிகு : ஆம்! நல்லவர்களுக்கு மட்டுமல்ல, பொல்லாதவர்கள் பிரார்த்தனைக்கும் கடவுள் அருள் புரிகிறார். அவர் பிரதிநிதியான மதகுருவும் அப்படித்தான். ஆனால் அவர் வெறும் பிரார்த்தனையை மட்டும் எதிர்பார்க்கமாட்டார். வேறு பலனும் எதிர்பார்ப்பார்.

கலி : அதென்ன? அவர் எதிர்பார்ப்பது?

லிகு : பணம்!

கலி : கொடுத்து விடுவோம். எவ்வள்வு?

லிகு : முந்நூறு டூக்காட்.

கலி : சம்மதம்!

லிகு : மெசர் நிக்கியா வேறு இருபத்தைந்து டூக்காட் கொடுத்திருக்கிறார்.

கலி : (ஆச்சரியமாக) என்ன? அவரா?

லிகு : ஆம்! அதைப் பற்றி நீர் கவலைப்பட வேண்ட்ாமையா? சரி, மருந்து தயார்ாக வைத்திருக்கிறீரா?

கலி : ஆம்!

லிகு : என்ன மருந்து?

கலி : திராட்சைப் பழரசம் தான்! அதுதான் அவளுக்கு உடலுக்கும் மனத்திற்கும் கிளர்ச்சியுண்டாக்கக் கூடிய நல் மருந்து. ஆனால், ஆ! கடவுளே! நான் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டேன்.

லிகு : என்ன இப்படித் திடீரென்று...

கலி : ஐயோ, நம் திட்டப்படி வேறு எவனோ மடப்பயலையல்லவா அவளிடம் அனுப்பப் போகிறோம்? இதற்காகவா நாம் இவ்வளவு திட்டமிட்டோம்?

லிகு : . ஏனய்யா! நீரே அந்த மடப்பயலாயிருந்து விட்டுப் போயேன்!

கலி : அதெப்படி முடியும், நான் உங்களோடு கூட இருக்க வேண்டுமே?

லிகு : அதற்கும் அந்த மதகுருவையே பிடிக்கிறேன்.

கலி : பிடித்து...?

லிகு : எல்லோரும் மாறு வேடம் போட்டுக் கொள்வோம். மதகுருவும் அப்படியே மாறுவேடத்தோடு வரச் செய்கிறேன். அவர்தான் நீர் என்று மெசர் நிக்கியா பிரபுவிடம் கூறுகிறேன். நீர் கிழிந்த ஆடைகளோடு ஒரு மடப் பயலைப்போல் தெரு வழியாக வாரும். உம்மைப் பிடித்துப் போகிறோம்.

கலி : முகத்தை மூடிக்கொண்டுதானே.

லிகு : சேசே! அது சந்தேகத்தை உண்டாக்கும்.

கலி : முகம் திறந்திருந்தால், அந்த நிக்கியா நான்தான் என்று தெரிந்து கொள்வானே!

லிகு : முகத்தைக் கோணலாக வைத்துக் கொள்ளும். வாயை அகலத் திறந்து, உதட்டை விரித்து வைத்துக் கொள்ளும். அல்லது பல்லெல்லாம் தெரியக் காட்டும். ஒரு கண்ணை எப்போதும் மூடிக்கொண்டேயிரும். எங்கே செய்து காண்பியும் பார்க்கலாம்.

கலி : (முகத்தைக் கோணல் செய்து) இப்படியா?

லிகு : இல்லை.

கலி : இன்னும் கோணலாக்கி இது மாதிரியா?

லிகு : இன்னும் சரியாக வரவில்லை.

கலி : சரி, இப்போ பார்.

லிகு : ஆம் இதே மாதிரிதான்; மறந்து விடாதீரய்யா! என்னிடம் வீட்டில் பொய் மூக்கு ஒன்று இருக்கிறது. அதைத் தருகிறேன். ஒட்டிக்கொள்ளும்.

கலி : அப்புறம்?

லிகு : நாங்கள் மாறு வேடத்துடன் வருகிறோம். நீர் பைத்தியக்காரப் பயலைப் போல் தெருவில் வாரும். உம்மைப் பிடித்துக்கொண்டு போகிறோம்.

கலி : பிறகு நான் என்ன செய்வது?

லிகு : அது உம் காரியம். உம் சாமர்த்தியம் அதில் எங்களுக்கென்ன இருக்கிறதய்யா?

கலி : என்னதான் சொல்லுகிறாய்?

லிகு : அந்தப் பத்தினி அன்றிரவு உன் விருப்பத்திற்கு இணங்கி விடுவாள். உம் நெடுநாள் ஆவல் நிறைவேறியதும் அவளிடமிருந்து பிரிந்து வருவதற்கு முன்னால், நீர் யாரென்று தெரிவித்து உம் அளப்பரும் காதலையும் எடுத்துக் கூறும். அவ்வாறு கூறி அவளை என்றும் உமக்கு இணங்கிய வளாக்குவது உம் கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தது. அவளும், உம்முடன் இருப்பது இதுவே கடைசியிரவாக இருக்க வேண்டுமென்று விரும்பமாட்டாள்.

கலி : உண்மையாகவா?

லிகு : ஆம்! மருந்தைச் சீக்கிரம் கொடுத்தனுப்பும். நான் வருகிறேன். எல்லாம் நான் சொன்னபடி நடக்கட்டும்.

(போகிறான்)

(அன்று இரவு பத்து மணி சுமாருக்கு, மெசர் நிக்கியா பிரபு, தரகன் வேலைக்காரன் சிரோ ஆகியோர் மாறு வேடத்துடன் தெருவிற் போகிறார்கள்._ஒரு மூலையிலிருந்து வாலிபன் கலிமாக்கோ பிச்சைக்காரனைப் போல் வருகிறான். அவன்மீது பாய்ந்து பிடித்துக் கண்ணைக் கட்டி இருட்டில் இழுத்துச் செல்லுகிற்ார்கள். நிக்கியாவின் வீட்டில், பத்தினி லுக்கிரிசியாவின் பள்ளியறைக்குள் வாலிபன் கலிமக்கோ தள்ளப்படுகிறான். அறைக் கதவு சாத்தப்படுகிறது)

காட்சி : 5

(தேவாலயத்தின் முன்னால், மெசர் நிக்கியா பிரபுவும், அவருடைய பத்தினி லுக்கிரிசியாவும் வருகிறார்கள். அப்போது தரகன் லிகுரியோவும் வாலிபன் கலிமாக்கோவும் எதிரில் வருகிறார்கள். அதே சமயம் தேவாலயத்தை நோக்கி மதகுரு டிமோஷியோ சாமியார் வந்து கொண்டிருக்கிறார்)

கலி : ஆண்டவர் உங்களைக் காப்பாராக!

நிக்கியா : வைத்தியரே! இதோ என் மனைவி! கை குலுக்கிக் கொள்ளுங்கள்.

கலி : ஆகா!

நிக்கியா : கண்ணே, லுக்கிரிசியா! இவர்தான் நமக்கு முதுமைக் காலத்தில் ஓர் உதவி கிடைக்க வகை செய்தார். இவருக்கு நீ நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறாய்.

லுக்கிரிசியா : நான் அவருக்கு மிகவும் நன்றியுடைய வளாயிருப்பேன். அவர் இனி எப்போதும் நம் நண்பராக இருக்கட்டும்.

நிக்கியா : ஆண்டவர் உனக்கு என்றும் அருள் புரிவார். அன்பே இந்த வைத்தியரையும் தரகன் லிகுரியோவையும் இன்று நம் வீட்டில் விருந்துண்ண அழைப்போமே!

லுக்கிரிசியா : ஆகா! மெத்த மகிழ்ச்சி.

டிமோஷியோ சாமியார் : ஏழைகளுக்குத் தருமம் செய்ய பணம் கொடுக்கிறீர்களா?

நிக்கியா : குருமகானே. இப்போதே அனுப்புகிறோம். (அப்போது பத்தினியின் தாயார் சோஸ்ட்ராட்டா அம்மையாரும் வருகிறாள்)

டிமோஷியோ சாமியார் : அம்மணி சோஸ்ட்ராட்டா, உங்களைப் பார்த்தால் இளமை திரும்ப வந்ததுபோல் இருக்கிறதே!

சோஸ்ட்ராட்டா : இன்று எல்லோருக்கும் ஆனந்த நாள்! எல்லோருக்கும் மகிழ்ச்சி.

சாமியார் : சரி, எல்லோரும் தேவாலயத்திற்கு வாருங்கள். ஒன்றாக உட்கார்ந்து ஆண்டவனைப் பிரார்த்திப்போம். பிரார்த்தனை முடிந்ததும் நீங்கள் விருந்துண்ணப் போகலாம். நான் இங்கேயே ஆலயத்தில் இருந்து எல்லோருடைய பாவத்தையும் மறைக்கும் பணியைத் தொடர்ந்து செய்கிறேன்!