சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/வீதி வலம்

விக்கிமூலம் இலிருந்து
47. வீதி வலம்


ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னால் பரத கண்டத்தில் பிரசித்தி பெற்றிருந்த மூன்று சாம்ராஜ்யத் தலைநகரங்களில் வாதாபி ஒன்றாகும். கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் போலவே வாதாபி நகரத்தின் புகழும் அந்த நாட்களில் கடல் கடந்து வெகுதூரம் சென்றிருந்தது. ஒவ்வொரு தடவை திக்விஜயம் செய்து திரும்பும் போதும் புலிகேசியின் படை வீரர்கள் வெற்றி கொண்ட தேசங்களிலிருந்து ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து வாதாபியில் சேர்த்து வந்தார்கள். இதனால் வாதாபி நகரம் வளங்கொழிக்கும் நகரமாய் அந்தக் காலத்தில் விளங்கிற்று. அந்நகரில் வர்த்தகம் சிறந்தோங்கியிருந்தது. தூர தூர தேசங்களிலிருந்தெல்லாம் அந்நகருக்கு இரத்தின வியாபாரிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

பிரசித்தி பெற்ற ஜைன ஆலயங்களும் பௌத்த மடங்களும் வாதாபியில் இருந்தபடியால், பற்பல நாடுகளிலிருந்தும் யாத்திரிகர்கள் அந்நகருக்கு வருவதுண்டு. இதனாலெல்லாம் வாதாபி நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருந்து வந்தது. அதிலும் சக்கரவர்த்தி தலைநகரில் இருக்கும் போது கேட்க வேண்டியதில்லை. சக்கரவர்த்தியைப் பேட்டி காண்பதற்காகச் சிற்றரசர்கள் காணிக்கைகளுடன் வருவார்கள். சீனம், பாரசீகம் முதலிய தூர தூர தேசங்களிலிருந்து அரசாங்கத் தூதர்கள் வருவார்கள். மாடமாளிகைகள், கூடகோபுரங்களுடன் விளங்கிய வாதாபியின் வீதிகள் எப்போதுமே திருவிழாக் காலத்தைப் போல் ஜனக்கூட்டம் நிறைந்து விளங்கும். வண்டிகள் வாகனங்களின் சப்தம் ஓயாமல் கேட்ட வண்ணமிருக்கும்.

வாதாபி நகரில் வீதிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சிவகாமி பல்லக்கிலே போய்க் கொண்டிருந்த போது அவளுடைய உள்ளம் அடிக்கடி காஞ்சியையும் வாதாபியையும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தது. பழமையான காலத்திலிருந்து செல்வமும் பண்பாடும் சேர்ந்து வளர்ந்து வந்த நகரத்துக்கும் திடீரென்று செல்வம் படைத்துச் செழிப்படைந்த புதுப் பட்டணத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் அவளுக்கு நன்கு புலனாகி வந்தன. காஞ்சியில் செல்வத்திற் சிறந்த சீமான்களும் சீமாட்டிகளும் ஆடை ஆபரணங்கள் பூணுவதில் அடக்கம் காட்டுவார்கள். அவர்களுடைய அலங்காரங்களில் கலை உணர்ச்சியே பிரதானமாயிருக்கும். இந்த நகரிலோ எங்கே பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் படாடோபமும் பகட்டும் தாண்டவமாடின.

காஞ்சி வீதிகளில் தெரிந்தவர்கள் சந்தித்தால் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் முகமன் கூறிக் கொண்டார்கள். வாதாபியின் தெருக்களிலோ, தெரிந்தவர்கள் சந்திக்கும் போது இடி முழக்க ஒலியில் சிரித்து ஆர்ப்பரித்தார்கள். காஞ்சியில் எஜமானர்கள் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடும் போது கூட அன்புடனும், ஆதரவுடனும் பேசினார்கள். வாதாபியில் எஜமானர்கள் வேலைக்காரர்களிடம் பேசும் போது கடுமையான மொழிகளையும் துர்வசனங்களையும் கையாண்டார்கள். இவற்றையெல்லாம் தவிரக் காஞ்சிக்கும் வாதாபிக்கும் உள்ள இன்னும் ஒரு வித்தியாசத்தையும் சிவகாமி கவனித்தாள்.

காஞ்சி வீதிகளில் புத்த பிக்ஷுக்கள், திகம்பர சமணர்கள், வைதிக சந்நியாசிகள், ஆண்டிகள், கபாலிகர்கள், வெறும் பிச்சைக்காரர்கள் ஆகியவர்கள் மொய்த்துக் கொண்டு வீதியில் போவோர் வருவோரின் பிராணனை வாங்குவது வழக்கம். தர்ம புத்தியுள்ள தனவான்கள் அதிகம் உள்ள இடத்திலே யாசகர் கூட்டமும் அதிகமாகப் பெருகி விடும் போலும்! வாதாபியின் வீதிகளில் அம்மாதிரி பிக்ஷுக்களும் யாசகர்களும் அதிகம் காணப்படவில்லை. தர்மம் கொடுப்பவர்கள் இல்லாதபடியால் யாசகர்களும் இல்லை போலும்! இம்மாதிரியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டும், வாதாபியின் செல்வ வளத்தை வியந்து கொண்டும் சிவிகையில் சென்ற சிவகாமி, ஒரு நாற்சந்தி மூலையில் அதுவரையில் காணாத காட்சி ஒன்றைக் கண்டாள்.

ஸ்திரீகளும் புருஷர்களும் அடங்கிய ஒரு கூட்டம் அங்கே நின்றது. அவர்கள் ஒவ்வொருவருடைய கரங்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அவ்விதம் பந்தமுற்ற கைகளுடன் தலைகுனிந்து நின்ற கும்பலைச் சுற்றி யமகிங்கரர்களைப் போன்ற முரடர்கள் சிலர் கையில் பெரிய பெரிய சாட்டைகளுடன் நின்றார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்போதே சிவகாமியின் உள்ளம் பதைத்தது. கைகள் கட்டுப்பட்டு நின்ற ஸ்திரீ புருஷர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றியபடியால் அவளுடைய மனவேதனை பன்மடங்காயிற்று.

பல்லக்கை நிறுத்தி அவர்கள் அருகில் சென்று விசாரிக்கலாமா என்று சிவகாமி ஒருகணம் நினைத்தாள். ஆனால், அதற்கு வேண்டிய மனோதைரியம் அவளுக்கு ஏற்படவில்லை; சிவிகை மேலே சென்றது. நாற்சந்தி முனையிலிருந்து சிவிகை கொஞ்ச தூரம் போன பிறகு சிவகாமி தடுக்க முடியாத ஆவலினால் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் கட்டப்பட்ட கைகளினால் தன்னுடைய சிவிகையைச் சுட்டிக்காட்டுவது போலவும், கண்ணீர் ததும்பிய கண்களால் தான் போகும் திசையை உற்றுப் பார்ப்பது போலவும் அவளுக்குத் தோன்றியது. உடனே சிவகாமி தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். பல்லக்குச் சுமந்தவர்களை நேரே வீட்டுக்குப் போகும்படி கட்டளையிட்டாள்.

வீடு போய்ச் சேர்ந்ததும் சிவகாமி தான் கண்ட காட்சியைத் தாதியிடம் சொல்லி, அதைப் பற்றி ஏதேனும் தெரியுமா என்று கேட்டாள். தாதி தனக்குத் தெரியாது என்று சொல்லவே, போய் விசாரித்துக் கொண்டு வரும்படி பணித்தாள். அவ்விதமே அந்தத் தாதி வெளியே போய் விசாரித்துக் கொண்டு வந்தாள். அவள் கூறிய விவரம் சிவகாமிக்குச் சொல்ல முடியாத பயங்கரத்தையும் மன வேதனையையும் அளித்தது. தாதி விசாரித்து வந்து கூறிய விவரம் இதுதான். பல்லவ நாட்டிலிருந்து புலிகேசிச் சக்கரவர்த்தி அநேக ஸ்திரீ, புருஷர்களைச் சிறைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தார். அவர்களில் சிலர் சிறையிலிருந்து தப்பிப் போக முயன்றார்கள். சிலர் அடிமைத் தொண்டு செய்ய மறுத்தார்கள். சிலர் உணவு உட்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தார்கள்; இத்தகைய குற்றங்களைச் செய்த கலகக்காரர்களை வாதாபி நகரின் நாற்சந்திகளில் நிறுத்திச் சாட்டையினால் அடிக்கும்படியாகப் புலிகேசிச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். இந்தச் சாட்டையடி உற்சவம் இன்றைக்குத்தான் ஆரம்பமாகியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதம் வரையில் நடக்கும். தினம் சாயங்கால வேளையில் வீதிகளில் நடக்கும் வாதாபி நகரவாசிகள் அந்த வேடிக்கையைப் பார்த்துக் களிப்பார்கள்.

சிவகாமி அன்றிரவு ஒரு கணமும் கண்ணுறங்கவில்லை. வேதனையும் துன்பமும் நிறைந்த அவளுடைய வாழ்க்கையில் இதுவரை என்றும் அனுபவித்தறியாத வேதனையை அவள் அனுபவித்தாள். சுளீர் சுளீர் என்று அவளுடைய உடம்பில் சாட்டையடி விழுவது போன்ற உணர்ச்சி அவளுக்கு அடிக்கடி உண்டாயிற்று. பொன்முகலியாற்றங்கரையில் அவள் புலிகேசியை வேண்டித் தன்னுடன் சிறைப்பட்டிருந்த மாதர்களை விடுதலை செய்தது அவளுக்கு நினைவு வந்தது. அன்று விடுதலையானவர்கள் சளுக்கர் சைனியத்தினால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர்தான் போலும். இன்னும் எத்தனையோ பேரை முன்னால் சென்ற பெருஞ்சைனியம் சிறைப் பிடித்துக் கொண்டு போயிருக்க வேண்டும்.

இன்று பகலில் சக்கரவர்த்தி வந்து தன்னுடன் பேசியதன் கருத்தும், தனக்கு வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்க அனுமதியளித்ததன் கருத்தும் இப்போது சிவகாமிக்குப் புதிய பொருளில் விளங்க ஆரம்பித்தன. சிவகாமியைத் தன்னுடைய காலிலே விழுந்து கெஞ்சும்படி செய்வதற்காக இம்மாதிரியெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறான் அந்தக் கிராதகன். ஆனால், அவனுடைய எண்ணம் நிறைவேறப் போவதில்லை. யார் எப்படிப் போனாலும் சரி; இனித் தான் புலிகேசியின் காலில் விழுந்து கெஞ்சப் போவதில்லை. ஒருநாளும் முடியாது! இப்படியா வஞ்சம் தீர்க்க நினைத்திருக்கிறான், அந்தப் பாவி! "எதற்காக வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்?" என்று எண்ணி எண்ணிச் சிவகாமி தவித்தாள். இரவெல்லாம் தூக்கமின்றித் துடித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் பொழுது விடிந்தது; சூரியோதயம் ஆயிற்று. வானவெளியில் சூரியன் மேலே வர வர, சிவகாமியின் இதயத் துடிப்பு அதிகமாயிற்று. சூரியன் மேற்கு நோக்கிப் பிரயாணம் செய்யச் செய்ய அவளுடைய உள்ளமும் உடம்பும் பதறத் தொடங்கின. இத்தனை நேரம் அந்தப் பல்லவ நாட்டு ஸ்திரீகளும் புருஷர்களும் நாற்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருப்பார்கள்! அவர்களுடைய கைகள் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். இத்தனை நேரம் யமகிங்கரர்கள் போன்ற காவலர்கள் கையில் பெரிய சாட்டைகளுடன் வந்து நிற்பார்கள். இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் சாட்டையினால் அடிக்கத் தொடங்கி விடுவார்கள். சிவகாமி முதல் நாள் இரவு கொண்டிருந்த மன உறுதியெல்லாம் பறந்து போயிற்று. பரபரப்புடன் பல்லக்குக் கொண்டு வரும்படி வாசற் காவலர்களிடம் கட்டளையிட்டாள். பல்லக்கு வந்ததும் அதில் விரைந்து ஏறிக் கொண்டு நேற்றுப் பார்த்த நாற்சந்தி முனைக்குப் போகும்படி சொன்னாள்.

நாற்சந்தியின் சமீபத்தில் இன்று சிவகாமியின் சிவிகை போய்ச் சேர்ந்த போது, அங்கே கரங்கள் கட்டப்பட்டு நின்றவர்களிடம் நேற்றுக் காணாத கிளர்ச்சியை இன்று கண்டாள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஏதோ பேசிக் கொண்டார்கள். அவர்களில் பலர் சிவகாமியை நோக்கி, "அம்மா! தாயே! எங்களைக் காப்பாற்று!" என்று கூச்சலிட்டார்கள். எதிர்பாராத இந்த அபயக் கூக்குரலினால் சிவகாமியின் உள்ளம் பெருங்குழப்பமடைந்தது. 'ஐயோ! இவர்களைக் காப்பாற்றும் சக்தி உண்மையில் நம்மிடம் இருக்கலாகாதா?' என்ற ஏக்கம் ஒரு பக்கம் உண்டாயிற்று. பல்லக்கைத் தரையில் இறக்கச் சொல்லித் தானும் இறங்கிக் கூட்டத்தை அணுகினாள். மீண்டும், "அம்மா! தாயே! எங்களைக் காப்பாற்று!" என்ற கூக்குரல்கள் அக்கூட்டத்திலிருந்து எழுந்தன.

சிவகாமி அவர்கள் அருகில் இன்னும் நெருங்கிச் சென்றாள். அவர்களில் சிலருடைய உடம்பில் முன்னமே சாட்டையடி பட்ட காயங்களைக் கண்டாள். அந்தக் காயங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பதையும் தரையில் பல இடங்களில் இரத்தம் சொட்டிக் கறையாகியிருப்பதையும் பார்த்தாள். சிவகாமியின் தலை சுற்றியது; வயிறு குமட்டியது; மயக்கம் வந்தது. அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு ஒருவாறு சித்தத் தெளிவை நிலைநாட்டிக் கொண்டாள். கூட்டத்தில் அவளுக்குச் சமீபத்தில் நின்ற ஸ்திரீயைப் பார்த்து, "அம்மா! உங்களைக் காப்பாற்றும்படி என்னை வேண்டிக் கொள்கிறீர்களே, அது ஏன்? உங்களைப் போல் நானும் ஓர் அபலைப் பெண்தானே! சளுக்கரால் சிறைப் பிடித்துக் கொண்டு வரப்பட்டவள்தானே? உங்களைக் காப்பாற்றும் சக்தி எனக்கு ஏது?" என்றாள். "எங்களைக் காப்பாற்றும் சக்தி உனக்கு உண்டு, தாயே! அதோ அந்த ராக்ஷதனைக் கேள்; அவன்தான் அவ்விதம் சொன்னான்" என்றாள் அந்த ஸ்திரீ.

அவள் சுட்டிக்காட்டிய ராக்ஷத வடிவங்கொண்ட வீரர் தலைவனைச் சிவகாமி அணுகினாள். வாதாபிவாசிகள் பேசிய கலப்புப் பாஷையில், "ஐயா! இவர்களை ஏன் இப்படிச் சாட்டையால் அடித்துச் சித்திரவதை செய்கிறீர்கள்? வேண்டாம்! இந்தப் படுபாதகச் செயலை நிறுத்துங்கள்!" என்றாள். அந்த வீரர் தலைவன் கலகலவென்று சிரித்தான். என்னவோ யோசிப்பவன் போல் சற்று இருந்து விட்டுப் பிறகு, "நாங்கள் என்ன செய்வோம், தாயே! சக்கரவர்த்தியின் ஆக்ஞை!" என்றான். "அப்படியானால் கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள். நான் உங்கள் சக்கரவர்த்தியிடம் சென்று வேண்டிக் கொண்டு பார்க்கிறேன். அதுவரையில்..." என்று சிவகாமி சொல்வதற்குள், அவ்வீரன், "வேண்டாம், அம்மா! சக்கரவர்த்தியிடம் நீ போகவே வேண்டாம். இவர்களைச் சாட்டையால் அடிப்பதை நிறுத்தும் அதிகாரம் உன்னிடமே இருக்கிறது. நீ சொன்னால் நிறுத்தி விடுகிறோம்; ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு!" என்றான்.

"அந்த வீரன் முதலில் கூறிய வார்த்தைகளை வியப்போடும் உவகையோடும் கேட்ட சிவகாமி, "நிபந்தனை" என்றதும் திடுக்கிட்டாள். இதில் ஏதோ வஞ்சம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், "என்ன நிபந்தனை?" என்றாள். "நீ இந்த இடத்தில், எங்கள் எல்லாருடைய முன்னிலையிலும் நடனம் ஆட வேண்டும். நீ ஆடும் வரையில் நாங்கள் இவர்களை அடிக்காமல் இருக்கிறோம். சூரியன் அஸ்தமிக்கும் வரையில் நீ ஆடிக் கொண்டிருந்தால், நாங்களும் பார்த்துக் கொண்டேயிருப்போம். சூரியன் அஸ்தமித்ததும் நீ வீட்டுக்குத் திரும்பலாம். நாங்கள் இவர்களைச் சிறையிலே கொண்டு போய்ச் சேர்ப்போம். நாளைக்கும் இவர்கள் அடிபடக் கூடாது என்று நீ கருதினால் நாளைக்கும் இம்மாதிரியே நீ இவ்விடம் வந்து நடனம் ஆடலாம்!" என்றான் அந்தக் கிராதகன்.

சிவகாமியின் உள்ளத்திலிருந்து எரிமலை, தீக்குழம்பையும் கரும்புகையையும் கக்கத் தொடங்கியது. ஆஹா! இதுவா அந்தப் பாதகனுடைய எண்ணம்? இப்படியா என் மீது பழிவாங்கப் பார்க்கிறான்? இப்படியா என் அற்புதக் கலையை இழிவுபடுத்த நினைக்கிறான்? புத்த பிக்ஷு வேஷத்தில் வந்து என் கலையைக் கண்டு மெய்ம்மறந்து பரவசமடைந்ததாக நடித்ததெல்லாம் இதற்காகத்தானா? ஆனால் அந்த வஞ்சக நெஞ்சனுடைய உத்தேசம் ஒருநாளும் நிறைவேறப் போவதில்லை. யார் எப்படிப் போனாலும், நான் வாதாபியின் நாற்சந்தியில் நின்று நடனம் ஆடப் போவதில்லை, ஒரு நாளுமில்லை.

முகத்தில் குரோதம் பொங்க, கண்களில் தீப்பொறி பறக்க நின்ற இடத்திலே ஸ்தம்பமாய் நின்று யோசித்துக் கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்து மேற்படி வீரர் தலைவன், "என்ன முடிவு சொல்கிறாய், தாயே! நடனம் ஆடப் போகிறாயா? அல்லது இவர்களைத் தங்கள் காரியத்தைப் பார்க்கச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். அந்தக் கேள்வி சிவகாமியின் செவிகளில் பழுக்கக் காய்ந்த வேல் நுழைவது போல் நுழைந்தது. திடீரென்று பிரக்ஞை பெற்றவள் போல் அவள் துள்ளி நிமிர்ந்து நின்று அவ்வீரனைப் பார்த்தாள். "ஆஹா! இந்த நாற்சந்தியில் நின்று என்னை நடனம் ஆடவா சொல்கிறாய்? மாட்டேன்; ஒருநாளும் மாட்டேன்!" என்றாள். அவ்வீரர் தலைவன் முகத்திலே புன்னகையுடன், "சரி உங்கள் வேலையை நீங்கள் நடத்துங்கள்!" என்று கையில் சாட்டையுடன் நின்றவர்களைப் பார்த்துக் கட்டளையிட்டான்.