தமிழில் சிறு பத்திரிகைகள்/தாமரை

விக்கிமூலம் இலிருந்து



27. தாமரை


'தாமரை' 1958-ல் பிறந்தது. ஆசிரியர் : ப. ஜீவானந்தம் 'மாஜினி' துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

‘ஜீவா' வின் பாரதி இலக்கிய ரசனையும், பழம் தமிழ் ஈடுபாடும் தாமரை கட்டுரைகள் வாயிலாக நன்கு வெளிப்பட்டன.

முற்போக்கு இலக்கியத்தின் தன்மைகளை விளக்கும் கட்டுரைகளும், அந்த அடிப்படையில் எழுதப்பெற்ற கதைகளும் கவிதைகளும் பிரசுரமாயின.

ஜீவானந்தத்துக்குப் பிறகு மாஜினி பத்திரிகைப் பொறுப்பை நிர்வகித்தார். பின்னர், 1960 களில் தி. க. சிவசங்கரன், ஆ. பழநியப்பன், எம். கே. ராமசாமி ஆகிய மூவரைக் கொண்ட 'ஆசிரியர் குழு' தாமரையை வளர்க்கும் பணியை ஏற்று நடத்தியது.

இவர்களது ஆசிரியப் பொறுப்பு பத்து வருட காலம் நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் 'தாமரை' இலக்கியவாதிகளின் கவனத்தை வெகுவாய்க் கவர்ந்தது.

உலக இலக்கியங்களின் வளர்ச்சி, அண்டை மாநிலங்களில் வளரும் இலக்கியப் போக்குகள், சோவியத் ரஷ்யாவின் புதிய இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தது தாமரை.

இதற்கென்றே சர்வதேச சிறுகதை மலர், (இந்திய) அயல்மொழிச் சிறுகதைச் சிறப்பிதழ் என்று அவ்வப்போது விசேஷத் தயாரிப்புகளை ஆசிரியர் குழுவினர் உருவாக்கினர்.

தமிழ்நாட்டின் இலக்கியப் படைப்பாளிகளது சிறுகதைகளைச் சேகரித்து சிறுகதைச் சிறப்பிதழ்கள் வெளியிட்டார்கள். வட்டார இலக்கிய வளர்ச்சியை அறிமுகப்படுத்தும் வகையில் 'கரிசல் இலக்கிய மலர்' தயாரித்தார்கள்.

விமர்சனக் கட்டுரைகளைச் சேகரம் செய்து வெளியிடுவதில் இக்காலக்கட்டத்திய தாமரை அதிக அக்கறை காட்டியது. மணிக்கொடி எழுத்தாளர்களை விமர்சித்து தி. க. சிவசங்கரன் ஒரு கட்டுரைத் தொடர் எழுதினார்.

உலக நாடக இலக்கியம் குறித்து எம். கே. மணி சாஸ்திரி எழுதிய கட்டுரைத் தொடர் பாராட்டப்பட வேண்டிய நற்பணியாகும்.

'தாமரை' இலக்கிய விவாதங்களையும் வளர்த்தது.

தாமரை வெகுகாலம் வரை புதுக் கவிதையை வரவேற்றதில்லை. வேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த புதுக் கவிதையின் போக்கை- 'எழுத்து' பத்திரிகை வெளியிட்ட புதுக்குரல் கவிஞர்களது படைப்புகளை-மார்க்ஸிய தத்துவ நோக்கில் ஆய்வு செய்து, கண்டனக் கட்டுரைகளை தாமரை வெளியிட்டது. அவற்றுக்கான மறுப்புக் கட்டுரைகளையும் வரவேற்றுப் பிரசுரித்தது.

பின்னர் முற்போக்குப் பாணியில் எழுதப்படும் புதுக் கவிதைகளை விரும்பி வெளியிட்டது. புதிய கவிஞர்களுக்குப் பேராதரவு தந்தது.

ஆசிய, ஆப்பிரிக்க விடுதலைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழில் தந்தது தாமரை. வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், அதன் பின்னணியில் தோன்றிய இலக்கியங்களின் பெருமையையும் எடுத்துச் சொல்வதற்காக 'வியட்நாம்' மலர் வெளியிட்டது.

ஆசிரியர் குழுவினர் புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தனர். இளம் எழுத்தாளர்களுக்கு யோசனைகள் கூறி வழிகாட்டினர்.

இப்படிப் பல வகைகளிலும் 'தாமரை' க்கு ஒரு தனித்தன்மை உண்டாக்கிய, இலக்கிய ரசிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் அதற்கு விசேஷ கவனிப்பு ஏற்படும்படி செய்த ஆசிரியர் குழுவினர், நூறு இதழ்கள் தயாரித்து முடித்துப் பெயர் ஈட்டிய பெருமையோடும் மகிழ்ச்சியோடும் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்கள்.

அதிலிருந்து 'தாமரை' தனது பெருமையை இழக்கலாயிற்று. அதைப் பொறுப்பாகவும் உற்சாகத்துடனும், போதிய இலக்கிய ஈடுபாட்டுடனும் நிர்வகித்து அதன் தனித்தன்மையைப் பாதுகாப்பதற்கு ஏற்றவர்கள் இல்லாது போனது இலக்கியவாதிகளுக்கும் முற்போக்குவாதிகளுக்கும் வருத்தம் அளித்துக் கொண்டிருக்கும் ஒரு குறையே ஆகும்.

'தாமரை' இலக்கிய விமர்சனங்களில் அக்கறை காட்டுவதை விட்டு விட்டு அவ்வப்போது அடிபடும் இலக்கியப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, முற்போக்கு இலக்கியவாதிகளின் கருத்துக்களைச் சேகரித்துத் தருவதை மறந்துவிட்டது. சர்ச்சைக்குரிய புதிய படைப்புகள் குறித்த அபிப்பிராயங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் பணியையும் அது துறந்துவிட்டது. இப்படிப் பல குறைபாடுகள் 'தாமரை' யைப் பற்றிக் கொண்டு விட்டன.

ஆயினும். அவ்வப்போது நல்ல சிறுகதைகளை அது தந்து கொண்டிருக்கிறது. பாரதி படைப்புகள் குறித்து ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை 'தாமரை' அதிகமாகப் பிரசுரித்திருக்கிறது. பாரதி நூற்றாண்டு விழா ஆரம்பத்தில் சிறந்த முறையில் ஒரு மலர் தயாரித்து வெளியிட்டது.

டாக்டர் கதிரேசன் அவர்கள் எழுதிய மருத்துவக் கட்டுரைகளை தாமரை தொடர்ந்து பிரசுரித்தது பாராட்டப்பட வேண்டிய ஒரு அரிய சேவையே ஆகும்.

நன்கு வளர்ச்சி பெற்றுள்ள 'தாமரை' யின் விலாசம் : 161, பிரகாசம் சாலை , சென்னை - 108.