திருக்குறள், மூலம்/ஈகை

விக்கிமூலம் இலிருந்து

23. ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. 222

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. 223

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. 224

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். 225

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 226

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. 227

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். 228

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். 229

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. 230

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்,_மூலம்/ஈகை&oldid=1531619" இலிருந்து மீள்விக்கப்பட்டது