திருக்குறள், மூலம்/கயமை

விக்கிமூலம் இலிருந்து

108. கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். 1071

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். 1072

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். 1073

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். 1074

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. 1075

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1076

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. 1077

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். 1078

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். 1079

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. 1080

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்,_மூலம்/கயமை&oldid=1531735" இலிருந்து மீள்விக்கப்பட்டது