திருஞானசம்பந்தர் தேவாரம்
திருஞானசம்பந்தர் தேவாரம்
- திருஞானசம்பந்தரின் முதற்பதிகம்
- திருஞானசம்பந்தர் பாடிய இறுதிப்பதிகம்
- திருநீற்றுப்பதிகம்
- திருவெழுகூற்றிருக்கை
- பஞ்சாக்கரத்திருப்பதிகம்
- நமச்சிவாயத்திருப்பதிகம்
முதல் திருமுறை
[தொகு]திருப்பிரமபுரம்
[தொகு]திருப்பிரமபுரம் - பண் - நட்டபாடை
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.1
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.2
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.3
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.4
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.5
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.6
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.7
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.8
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.9
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.10
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே. 1.1.11
திருச்சிற்றம்பலம்
திருப்புகலூர்
[தொகு]திருப்புகலூர் - பண் - நட்டபாடை
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே. 1.2.1
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே. 1.2.2
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே. 1.2.3
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே. 1.2.4
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே. 1.2.5
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி
உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே. 1.2.7
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே. 1.2.8
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே. 1.2.9
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே. 1.2.10
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்
கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே. 1.2.11
திருச்சிற்றம்பலம்
=இரண்டாம் திருமுறை
[தொகு]=