திருப்புகழ்

விக்கிமூலம் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ்

Wikipedia-logo-v2.svg
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

முருகன் துதி [தொகு]

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே

ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

விநாயகர் துதி [தொகு]

கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி

கப் பியகரிமுகன் - அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!

கற்பகம் எனவினை - கடிதேகும்;

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொருதிரள் புய - மதயானை

மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை

மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய - முதல்வோனே

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்

அச்சது பொடிசெய்த - அதிதீரா;

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்

அப்புன மதனிடை - இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கண மணமருள் - பெருமாளே! 1

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி

ஒண்கடலிற் றேன முதத் துணர்வூறி;

இன்பரசத் தேபருகிப் பலகாலும்

என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே;

தம்பிதனக் காசுவனத் தணைவோனே;

தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே

ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. 2

பக்கரைவி சித்ரமணி பொற் கலணை யிட்ட நடை

பட்சிபெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய

பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்;

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு

சிற்றடியு முற்றியப னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு

செப்பென எனக்கருள்கை மறவேனே;

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புனெய்

எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள

ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்;

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெனக்கொளொரு

விக்கநச மர்த்தனெனும் அருளாழி!

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

வித்தகம ருப்புடைய பெருமாளே! 3

விடமடைசு வேலை அமரர்படை சூலம்

விசையன் விடு பாண மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்

வினையின்விளை வேதும் அறியாதே;

கடியுலவு பாயல் பகலிரவெ னாது

கலவிதனில் மூழ்கி வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு

கழலிணைகள் சேர அருள்வாயே;

இடையர்சிறு பாலை திருடிகொடி போக

இறைவன் மகள் வாய்மை அறியாதே

இதயமிக வாடியுடையபிளை நாத

கணபதியெ னாம முறைகூற;

அடையலவர் ஆவி வெருவ அடி கூர

அசலுமறி யாமல் அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட

அறிவருளும் ஆனை முகவோனே! 4

நினது திருவடி சத்திம யிற்கொடி

நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்.

நெடிய விளைமுறி இக்கொடு லட்டுகம்

நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் இளநீரும்;

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு

மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றமை ருப்பனை வலமாக.

மருவு மலர்பனை தொத்திர சொற்கொடு

வளர்கை குழைபிடி தொப்பண் குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே;

தென்ன தெனதென தெத்தென னப்பல

சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை.

செரும உதரநிரப்பசெ ருக்குடல்

நிரைய அரவநி றைந்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் செகசேசே.

எனவெ துகுதுகு துத்தென வொத்துகள்

துடிக ளிடிமிக வொத்துமு ழக்கிட
டிமுடி டிமுடிமு டிட்டிமெ னத்தவில் எழுமோசை.

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட

இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமானே. 5

முத்தைத்தருரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண!
முத்திக்கொரு வித்துக் குருபர! எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணை தொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்!
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே?

தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப் பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே. 1

திருப்பரங்குன்றம் [தொகு]

முதலாவது படை வீடு

கனகந்திரள் கின்றபெ ருங்கரி

தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு கதியோனே!
கடமிஞ்சி அநந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின் றுணை என்று பிறந்திடு முருகோனே!

பனகந்துயில் கின்ற திறம்புனை

கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே!
பல துன்பம்உ ழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே;

அனகன்பெயர் நின்றரு ளுந்திரி

புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் புதல்வோனே!
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்ட நெரிந்திட வருசூரர்

மன முந்தழல் சென்றிட அன்றவர்

உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கள் பெரியோனே!
மதியுங்கதி ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள் பொருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே! 2


சருவும்படி வந்தனன் இங்கித

மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி
சயிலங்கொளு மன்றல் பொருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ் சுனை துன்றியெ ழுந்திட திறமாவே

இரவும் பகல் அந்தியு நின்றிடு

குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள் துயின்றிட லின்றியும் அயர்வாகி
இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன் மலரந்தில கும்பதம் அடைவேனோ;

திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்

மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநிறம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன் மகிழ்ந்தருள் மருகோனே;

மருவுங்கடல் துந்துமி யுங்குட

முழவங்கள்கு மின்குமின் என்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே!
மதியுங்கதி ரும்பிய லுந்தின
மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் பெருமாளே. 3
"http://ta.wikisource.org/w/index.php?title=திருப்புகழ்&oldid=16004" இருந்து மீள்விக்கப்பட்டது