திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
இறைவாக்கினர் எலிசா. ஓவியம் வரையப்பட்ட காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: இங்கிலாந்து.

2 அரசர்கள் (The Second Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

இஸ்ரயேல் அரசன் யோவகாசு[தொகு]

1 யூதா அரசன் அகசியாவின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இருபத்து மூன்றாம் ஆண்டில் ஏகூவின் மகன் யோவாசு சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் நாட்டைப் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து வந்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரோபவாமின் பாவ வழியிலேயே அவனும் நடந்து வந்தான்.
3 எனவே ஆண்டவருக்கு இஸ்ரயேல்மீது சினம்மூள அவர்களைச் சிரியா மன்னன் அசாவேலின் கையிலும் அசாவேலின் மகன் பெனதாதின் கையிலும் நீண்டநாள் விட்டுவிட்டார்.
4 ஆனால் யோவகாசு ஆண்டவரின் கருணைப் பார்வையை நாட, ஆண்டவரும் அவனுக்குச் செவிசாய்த்தார். ஏனெனில் சிரியா மன்னன் பிடியில் இஸ்ரயேல் நசுக்குண்டு கிடப்பதை அவர் கண்டார்.
5 இஸ்ரயேலுக்கு ஆண்டவர் ஒரு மீட்பரைத் தரவே, இஸ்ரயேலர் சிரியரின் பிடியினின்று விடுதலை அடைந்தனர். இஸ்ரயேல் மக்கள் முன்னைய நாள்களில் இருந்தது போல் தங்கள் சொந்த வீட்டில் குடியிருந்தனர்.
6 ஆயினும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய எரொபவாம் வீட்டாரின் பாவ வழியை விட்டு விலகாது வாழ்ந்தனர். மேலும் அசேராக் கம்பம் சமாரியாவில் இன்னும் நின்று கொண்டிருந்தது.
7 யோவாசுக்கு அவன் குடிகளுள் ஐம்பது குதிரை வீரரும் பத்துப் தேர்களும் பதினாயிரம் காலாள் படையினருமே எஞ்சியிருந்தனர். ஏனெனில் சிரியா மன்னன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்துத் தூசிபோல் ஆக்கியிருந்தான்.
8 யோவகாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் பேராற்றலும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
9 யோவகாசு தன் மூதாதையருடன் துயில்கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் யோவாசு அரசனானான்.

இஸ்ரயேல் அரசன் யோவாசு[தொகு]


10 யூதா அரசன் யோவாசு ஆட்சியேற்ற முப்பத்தேழாம் ஆண்டில், யோவகாசின் மகன் யோவாசு, இஸ்ரயேல் நாட்டின் அரசனாகி, சமாரியாவில் இருந்துகொண்டு பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
11 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்; இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியிலேயே நடந்து வந்தான்.
12 யோவாசின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசன் அமட்சியாவுடன் போரிட்டபொழுது காட்டிய பேராற்றலும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
13 யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், எரொபவாம் அரியணை ஏறினான். யோவாசு சமாரியாவில் இஸ்ரயேலின் அரசர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்.

எலிசாவின் இறப்பு[தொகு]


14 எலிசா நோயினால் வாதைப்பட்டுச் சாகக் கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு அவரிடம் சென்று, "என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!" என்று அவருக்கு முன்பாகக் கதறி அழுதான். [*]
15 எலிசா அவனை நோக்கி, "வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொள்" என்றார். அவ்வாறே அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டான்.
16 அப்பொழுது அவர் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, "வில்லை உன் கையால் வளை" என்றார்.
17 எலிசா தம் கைகளை அரசனின் கைகளின்மேல் வைத்து அவனை நோக்கி. "கீழ்ப்பக்கமுள்ள பலகணியைத் திற" என்றார். அவன் அதைத் திறந்தவுடன் எலிசா, "ஓர் அம்பை எய்" என்றார். அவனும் அவ்வாறே எய்தான். அவர், "அது ஆண்டவரது மீட்பின் அம்பு; சிரியர் மீது கொள்ளவிருக்கும் வெற்றியின் அம்பு; நீ அபேக்கில் சிரியரை முற்றிலும் அழிப்பாய்" என்றார்.
18 அவர் மீண்டும் "அம்புகளைக் கையில் எடு" என்றார். அவற்றை அவன் எடுக்கவே அவர் இஸ்ரயேல் அரசனைத் "தரையில் அம்பு எய்" என்றார். அவன் மூன்று முறை எய்துவிட்டு நிறுத்தினான்.
19 எனவே ஆண்டவரின் அடியவர் அவன்மேல் சினம் கொண்டு, "நீ ஐந்து அல்லது ஆறுமுறை எய்திருந்தால், சிரியரை முற்றிலும் கொன்றழித்திருப்பாய்! ஆனால் இப்பொழுதோ அவர்களை மூன்று முறை மட்டுமே முறியடிப்பாய்" என்றார்.
20 இதன்பின் எலிசா இறந்தார். அவரை அடக்கம் செய்தனர்.


ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் மோவாபியக் கொள்ளைக் கூட்டத்தினர் வந்து நாட்டைத் தாக்குவது வழக்கம்.
21 மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.

இஸ்ரயேலுக்கும் சிரியாவுக்கும் இடையே போர்[தொகு]


22 யோவகாசின் வாழ்நாள் முழுவதும் சிரியாவின் மன்னன் அசாவேல் இஸ்ரயேலைத் துன்புறுத்தி வந்தான்.
23 ஆனால் ஆண்டவர் அவர்களுக்குக் கருணையும் இரக்கமும் காட்டி அவர்களைப் பரிவுடன் பாதுகாத்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவரோடு தாம் செய்திருந்த உடன்படிக்கையின் பொருட்டு அவர்களை அழிக்கவோ, தம் திருமுன்னின்று தள்ளிவிடவோ இன்றுவரை அவர் மனம் ஒப்பவில்லை.
24 சிரியாவின் மன்னன் அசாவேல் இறந்தவுடன், அவன் மகன் பெனதாது அவனக்குப் பின் மன்னன் ஆனான்.
25 யோவகாசின் மகன் யோவாசு தன் தந்தையின் கையிலிருந்து அசாவேலின் மகன் பெனதாது கைப்பற்றியிருந்த நகர்களை மீண்டும் கைப்பற்றினான். யோவாசு மூன்றுமுறை அவனை முறியடித்து இஸ்ரயேலின் நகர்களை மீட்டுக் கொண்டான்.

குறிப்பு

[*] 13:14 = 2 அர 2:12.

அதிகாரம் 14[தொகு]

யூதா அரசன் அமட்சியா[தொகு]

(2 குறி 25:1-24)


1 இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதா அரசன் யோவாசின் மகன் அமட்சியா அரசன் ஆனான்.
2 அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த யோவதீன் என்பவளே அவன் தாய்.
3 அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தான். ஆயினும் தன் மூதாதையான தாவீது போல் அவன் செய்யவில்லை. அனைத்திலும் தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் செய்துவந்தான்.
4 தொழுகை மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம்காட்டியும் வந்தனர்.
5 ஆட்சி தன் கைக்கு வந்து உறுதியானவுடன், அரசனாகிய தன் தந்தையைக் கொலை செய்த அலுவலரைக் கொன்று போட்டான்.
6 ஆயினும், கொலைகாரர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை. ஏனெனில் ஆண்டவரின் கட்டளைப்படி மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ளதாவது: பிள்ளைகளின் பாவத்திற்காகப் பெற்றோர் கொல்லப்படலாகாது; பெற்றோரின் பாவத்திற்காகப் பிள்ளைகள் கொல்லப்படலாகாது. எல்லாரும் அவரவர் செய்த பாவத்திற்காகவே கொல்லப்படுவர். [1]
7 அமட்சியா போரிட்டு உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் ஏதோமியரைக் கொன்று, சேலாவைக் கைப்பற்றி அதற்கு இன்றுவரை வழங்கி வரும் 'யோக்தவேல்' என்ற பெயரை இட்டான்.


8 பின்பு அவன் இஸ்ரயேலின் அரசனும் ஏகூவின் மகன் யோவகாசின் புதல்வனுமாகிய யோவாசிடம் தூதனுப்பி, "வாரும்! போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்" என்று சொல்லச் சொன்னான்.
9 அதற்கு இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவிடம் ஆளனுப்பி, "லெபனோனின் நெருஞ்சிச் செடி லெபனோனின் கேதுரு மரத்திடம் தூதனுப்பி, 'என் மகனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடு' என்றதாம்; ஆனால் லெபனோனின் விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் நெருஞ்சிச் செடியை மிதித்துப் போட்டதாம்!
10 நீ ஏதோமியரை முறியடித்தது உண்மைதான். எனவே நீ நெஞ்சிலே செருக்குற்றாய்! பெருமைப்பட்டுக் கொள்! ஆனால் உன் வீட்டினுள்ளே தங்கியிரு! நீயும் உன்னோடு யூதாவும் வீழ்ச்சியுறவா தீமையை நீ நாடுகிறாய்?" என்று சொன்னான்.
11 அதற்கு அமட்சியா செவி கொடுக்கவில்லை. எனவே இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் பறப்பட்டு வந்தான். அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவைச் சார்ந்த பெத்செமேசில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
12 யூதாவின் மக்கள் இஸ்ரயேலரிடம் தோல்வியுற்று, தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
13 இஸ்ரயேலின் அரசன் யோவாசு பெத்செமேசில் அகசியாவின் மகனான யோவாசின் புதல்வனும் யூதாவின் அரசனுமான அமட்சியாவைக் கைது செய்து, எருசலேமைத் தாக்கச் சென்றான். அவன் எருசலேமின் மதிற் சுவரில், எப்ராயிம் வாயில் முதல் மூலை வாயில்வரை நானூறு முழ நீளம் இடித்துத் தள்ளினான்.
14 ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டான். மேலும், அவன் சிலரைப் பிணையாளராகப் பிடித்துக் கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிச் சென்றான்.


15 யோவாசின் பிற செயல்களைப் பற்றியும் யூதா அரசன் அமட்சியாவுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலைப் பற்றியும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளது அல்லவா?
16 யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் இஸ்ரயேல் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் எரோபவாம் அரசனானான்.

யூதா அரசன் அமட்சியாவின் இறப்பு[தொகு]

(2 குறி 25:25-28)


17 இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு இறந்தபின், யூதா அரசனான யோவாசின் மகன் அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.
18 அமட்சியாவின் பிற செயல்கள் 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
19 எருசலேமில் சிலர் அமட்சியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். எனவே அவன் இலாக்கிசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவர்கள் இலாக்கிசுக்கு ஆளனுப்பி அவனை அங்குக் கொலை செய்து,
20 அவனது சடலத்தைத் குதிரைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தனர். அவன் மூதாதையருடன் எருசலேமில் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான்.
21 பின்னர் யூதா மக்கள் எல்லாரும் பதினாறு வயதினனாய் இருந்த அசரியாவைத் [2] தேர்ந்தெடுத்து அவனை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
22 அமட்சியா தன் மூதாதையரோடு துயில் கொண்ட பின், அவன் ஏலத்து நகரை மீண்டும் உருவாக்கி யூதாவுடன் இணைத்துக் கொண்டான்.

இஸ்ரயேல் அரசன் இரண்டாம் எரொபவாம்[தொகு]


23 யூதா அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், இஸ்ரயேல் அரசனும் யோவாசின் மகனுமான எரொபவாம் சமாரியாவில் அரசனானான். அவன் நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
24 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அகலவில்லை.
25 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர், தம் அடியவரும் கத்கேப்பரைச் சார்ந்த அமித்தாயின் மகனுமான இறைவாக்கினர் யோனாவின் மூலம் உரைத்த வாக்கின்படியே, எரொபவாம், அமாத்து கணவாய் முதல் அராபாக் கடல்வரை, இஸ்ரயேலுக்குரிய நிலப் பகுதிகளை மீண்டும் இணைத்துக் கொண்டான். [3]


26 ஏனெனில் இஸ்ரயேலர் மிகக் கடுமையாகத் துன்புறுவதையும் அவர்களுக்குத் துணை செய்ய, அடிமையோ, குடிமகனோ எவனும் இல்லை என்பதையும் ஆண்டவர் கண்டார்.
27 ஆனால் ஆண்டவர், இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவதாகக் கூறியிருக்கவில்லை. எனவே அவர் அவர்களை யோவாசின் மகன் எரொபவாமின் மூலம் விடுவித்தார்.
28 எரொபவாமின் பிறசெயல்கள், அவனுடைய அனைத்துச் செயல்பாடுகள், போரில் அவன் காட்டிய பேராற்றல், யூதா நாட்டுக்கு உரிமையாயிருந்த தமஸ்கு, ஆமாத்து ஆகிய நகர்களை இஸ்ரயேல் நாட்டுடன் இணைத்துக் கொண்ட முறை - ஆகியன பற்றி "இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்" எழுதப்பட்டுள்ளன அல்லவா?
29 எரொபவாம் தன் மூதாதையரான இஸ்ரயேல் அரசர்களுடன் துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் செக்கரியா அரசன் ஆனான்.

குறிப்புகள்

[1] 14:6 = இச 24:16.
[2] 14:21 'உசியா' என்பது மறுபெயர்.
[3] 14:25 = யோனா 1:1.


(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை