திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 45 முதல் 46 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நீங்கள் நாட்டைப் பங்கிட்டு உரிமையாக்கிக் கொள்ளுகையில் ஆண்டவருக்கு நாட்டின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டும். அது இருபத்தைந்தாயிர முழம் நீளமும் பத்தாயிர முழம் அகலமும் உடையதாய் இருக்க வேண்டும். அப்பகுதி முழுவதும் தூய்மையானதாக இருக்கும். அதில் ஐந்நூறு முழச் சதுர நிலம் தூயகத்துக்கென ஒதுக்கப்படும்." - எசேக்கியேல் 45:1-2

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 45 முதல் 46 வரை

அதிகாரம் 45[தொகு]

நாட்டில் ஆண்டவருக்கு உரிய பகுதி[தொகு]


1 நீங்கள் நாட்டைப் பங்கிட்டு உரிமையாக்கிக் கொள்ளுகையில்
ஆண்டவருக்கு நாட்டின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டும்.
அது இருபத்தைந்தாயிர முழம் நீளமும் பத்தாயிர முழம் அகலமும்
உடையதாய் இருக்க வேண்டும். அப்பகுதி முழுவதும் தூய்மையானதாக இருக்கும்.
2 அதில் ஐந்நூறு முழச் சதுர நிலம் தூயகத்துக்கென ஒதுக்கப்படும்.
ஐம்பது முழம் அதைச் சுற்றித் திறந்த வெளியாயும் விடப்படும்.
3 தூய நிலப் பகுதியில் இருபத்தைந்தாயிர முழ நீளமும்
பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதியைத் தெரிந்தெடுக்க வேண்டும்.
அவ்விடத்தில்தான் தூயகமும் திருத்தூயகமும் அமையும்.
4 அவ்விடமே தூயகத்தில் நின்று ஆண்டவருக்கு முன் பணிபுரிய வரும்
குருக்களுக்குரிய தூய நிலப்பகுதியாய் இருக்கும்.
அது அவர்களின் வீடுகள் இருக்கும் பகுதியாகவும்
கோவிலுக்கான தூய பகுதியாகவும் அமையும்.
5 இருபத்தைந்தாயிர முழ நீளமும், பத்தாயிர முழ அகலமும் கொண்ட
ஒரு பகுதி கோவிலில் பணிபுரியும் லேவியர்களுக்கு உரியதாகும்.
அவர்களுக்கு இருபது அறைகள் உடைமையாய் இருக்கும்.
6 தூய பகுதியை ஒட்டி ஐயாயிர முழ அகலமும்
இருபத்தைந்தாயிர முழ நீளமும் கொண்ட ஒரு பகுதியை
நகருக்கென ஒதுக்க வேண்டும்.
அது இஸ்ரயேல் வீட்டார் அனைவர்க்கும் உரியதாய் இருக்கும்.

தலைவனுக்கான நிலம்[தொகு]


7 தூய பகுதிக்கும், நகருக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்கும் இடையில்
தலைவனுக்குரிய நிலம் இருக்கும்.
மேற்குப் பகுதியிலிருந்து மேற்கு எல்லை வரைக்கும்
கிழக்குப் பகுதியிலிருந்து கிழக்கு எல்லைவரைக்கும் நீண்டு
மேற்கிலிருந்து கிழக்காக நீண்டிருக்கும்
ஒவ்வொரு குலப்பகுதியின் நிலத்திற்கும் இணையாக இது இருக்க வேண்டும்.
8 இந்த நிலமே இஸ்ரயேலின் தலைவனது உடைமையாயிருக்கும்.
என் தலைவர்கள் இனிமேல் என் மக்களைத் துன்புறுத்தமாட்டார்கள்;
மாறாக, இஸ்ரயேல் வீட்டினர் தங்கள் குலத்திற்கேற்றவாறு
நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள அனுமதியளிப்பர்.

தலைவனுக்கான நெறிமுறைகள்[தொகு]


9 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
இஸ்ரயேலின் தலைவர்களே!
நீங்கள் வன்முறையையும் அடக்கு முறையையும் விட்டொழியுங்கள்.
நீதியையையும் நியாயத்தையும் கடைப்பிடியுங்கள்.
என் மக்கள் நில உரிமை இழக்கச் செய்வதை நிறுத்துங்கள்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
10 உங்களிடம் சரியான எடைக்கருவிகள் இருக்க வேண்டும்.
சரியான எடையுடைய மரக்காலும் [1]
சரியான அளவுடைய குடமும் [2] உங்களிடம் இருக்க வேண்டும். [3]
11 மரக்காலும் குடமும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.
குடம் என்பது கலத்தில் [4] பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
மரக்கால் என்பதும் கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
கலம் என்பதே இரண்டுக்கும் பொதுவானது.
12 செக்கேல் என்பது இருபது கேராக்களைக் கொண்டிருக்கவேண்டும்.
ஒரு மினாவில் இருபது செக்கேல்களும், இருபத்தைந்து செக்கேல்களும்,
பதினைந்து செக்கேல்களும் இருக்க வேண்டும்.
13 நீங்கள் படைக்க வேண்டிய சிறப்புக் காணிக்கை இதுவே:
ஒவ்வோரு கலம் அளவு கோதுமையிலும்
ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும்,
ஒவ்வொரு கலம் அளவு வாற் கோதுமையிலும்
ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும் கொடுக்க வேண்டும்.
14 படைக்க வேண்டிய எண்ணெய், குடம் அளவையால் அளக்கப்படும்.
ஒவ்வொரு குடம் அளவு எண்ணெயும் கலத்தில் [5] பத்திலொரு பகுதியாகும்.
கலம் என்பது பத்துக் குடங்கள் அல்லது ஒரு கலம்.
ஏனெனில், பத்துக் குடங்கள் ஒரு கலத்திற்கு இணையாகும்.
15 இஸ்ரயேலின் வளமான மேய்ச்சல் நிலத்தில்
இருநூறு ஆடுகள் உள்ள ஒவ்வொரு மந்தையிலிருந்தும்
ஓர் ஆட்டுக்குட்டி எடுக்கப்பட வேண்டும்.
பாவக் கழுவாய்ப் பலிகளான தானியப் படையலுக்கும்,
எரிபலிகளுக்கும், நல்லுறவுப் பலிகளுக்கும் அது பயன்படுத்தப்படும்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
16 இஸ்ரயேலின் தலைவனுக்குக் கொடுக்கும் இச்சிறப்புக் காணிக்கையை
நாட்டின் மக்கள் யாவரும் கொடுக்க வேண்டும்.
17 இஸ்ரயேலின் திருநாள்களிலும் அமாவாசை நாள்கள்,
ஓய்வு நாள்கள் மற்றும் இஸ்ரயேலின் எல்லாச் சிறப்புத் திருநாள்களிலும்,
எரிபலிகளுக்கும் தானியப் படையலுக்கும்
நீர்மப் படையல்களுக்கும் வேண்டியவற்றை
அளிக்க வேண்டியது தலைவனின் பொறுப்பாகும்.
அவன் இஸ்ரயேல் வீட்டார் சார்பில் பாவக் கழுவாய் செய்யப்
பாவம் போக்கும் பலிகள், தானியப் படையல்கள்,
எரிபலிகள், நல்லுறவுப் பலிகள் ஆகியவற்றிற்குத் தேவையானவற்றைத் தருவான்.

விழாக்கள்[தொகு]

(விப 12:1-20; லேவி 23:33-43)


18 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
முதல் மாதத்தின் முதல் நாளில் நீங்கள் மாசுமறுவற்ற ஓர் இளங்காளையை
மந்தையிலிருந்து எடுத்துத் தூயகத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.
19 குரு பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து,
அதைக் கோவிலின் கதவு நிலைகளிலும்,
பீடத்து விளிம்பின் நான்கு முனைகளிலும்,
உள் முற்றத்தின் வாயில் நிலைகளிலும் பூச வேண்டும்.
20 அறியாமையாலோ அல்லது உள்ளெண்ணமின்றியோ
தவறு செய்தோர்க்காக மாதத்தின் ஏழாம் நாளில்
இதே போல் செய்ய கோவிலுக்காகப் பாவக்கழுவாய் செய்ய வேண்டும்.
21 முதல் மாதத்தின் பதினான்காம் நாள்
உங்களுக்குப் பாஸ்காத் திருநாளாக இருக்கும்.
அது ஏழு நாள் தொடரும்.
அந்நாள்களில் நீங்கள் புளியாத அப்பங்களையே உண்ண வேண்டும். [6]
22 அந்த நாளில் தலைவன் தனக்காகவும், நாட்டின் எல்லா மக்களுக்காகவும்
பாவம் போக்கும் பலிக்கென ஒரு காளையைக் கொடுக்க வேண்டும்.
23 திருவிழாவின் அந்த ஏழு நாள்களிலும் ஒவ்வொரு நாளும்
அவன் ஆண்டவருக்கு எரிபலிக்கென மாசு மறுவற்ற ஏழு காளைகளையும்
ஏழு ஆட்டுக்கிடாய்களையும்,
பாவம் போக்கும் பலிக்கென ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொடுக்க வேண்டும்.
24 ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வோர் ஆட்டுக்கிடாய்க்கும்
ஒவ்வோர் மரக்கால் அளவு தானியப் பலிப்பொருளையும்
ஒவ்வோர் மரக்கால் தானியப் பொருளுக்கு
ஒரு கலயம் அளவு எண்ணெயையும் அளிக்க வேண்டும். [7]
25 ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் தொடங்கும் திருவிழாவில்
ஏழு நாள்களிலும் இவ்வாறே பாவம் போக்கும் பலிப்பொருள்கள்,
எரிபலிப்பொருள்கள், தானியப் படையல்,
எண்ணெய்ப் படையல் ஆகியவற்றை அவன் அளிக்க வேண்டும். [8]


குறிப்புகள்

[1] 45:10 = லேவி 19:36.
[2] 45:10 - 'ஏப்பா' என்பது எபிரேய பாடம்.
திடப்பொருளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட எடைக்கருவி.
[3] 45:10 - 'பாத்' என்பது எபிரேய பாடம்.
திரவப்பொருளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கருவி.
[4] 45:11 - 'கோமர்' என்பது எபிரேய பாடம்.
[5] 45:14 - 'கோமர்' என்பது எபிரேய பாடம்.
'கோர்', 'கோமர்' இரண்டும் சம அளவுகள் கொண்டவை.
(பத்து குடம் அல்லது நானூறு லிட்டர்).
[6] 45:21 = விப 12:1-20; எண் 28:16-25.
[7] 45:24 - 'கீன்' என்பது எபிரேய பாடம்.
[8] 45:25 = லேவி 23:33-36; எண் 29:12-38.


அதிகாரம் 46[தொகு]

தலைவனும் விழாக்களும்[தொகு]


1 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
கிழக்கு நோக்கிய உள்முற்றத்தின் வாயில்
ஆறு வேலை நாள்களிலும் மூடியிருக்க வேண்டும்.
ஆனால் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறந்திருக்க வேண்டும்.
2 தலைவன் வெளியிலிருந்து நுழைவாயிலின் முகமண்டபம் வழியாய் உள்நுழைந்து
வாயில் நிலையருகே நிற்க வேண்டும்.
அவனுடைய எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும்
குருக்கள் நிறைவேற்ற வேண்டும்.
அவன் வாயிற்படியருகே நின்று வழிபாடு செய்துவிட்டுப் போகவேண்டும்.
ஆனால் வாயிலோ மாலைவரை மூடப்படாதிருக்க வேண்டும்.
3 ஓய்வு நாள்களிலும், அமாவாசை நாள்களிலும்
நாட்டின் மக்கள் ஆண்டவர் திருமுன்
நுழைவாயிலருகே நின்று வழிபாடு செய்ய வேண்டும்.
4 ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குக் கொண்டுவரும் எரிபலி
மாசுமறுவற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயுமாம்.
5 வெள்ளாட்டுக் கிடாயுடன் தரும் தானியப் படையல்
ஒரு மரக்கால் அளவு இருக்கவேண்டும்.
ஆட்டுக்குட்டிகளுடன் தரும் தானியப் படையல்
அவன் விரும்பும் அளவு இருக்கலாம்.
ஒவ்வொரு மரக்கால் அளவு இருக்கலாம்.
ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும்
ஒரு கலயம் அளவு எண்ணெய் தர வேண்டும்.
6 அமாவாசை நாளில் அவன் மந்தையிலிருந்து ஓர் இளங்காளை,
ஆறு ஆட்டுக்குட்டிகள், ஒரு வெள்ளாடு ஆகியவற்றைத் தர வேண்டும்.
அவை அனைத்தும் மாசுமறு அற்றவையாய் இருக்க வேண்டும்.
7 காளையுடன் ஒரு மரக்கால் அளவு தானியப் படையலையும்
வெள்ளாட்டுக் கிடாயுடன் ஒருமரக்கால் அளவு தானியப் படையலையும்
ஆட்டுக் குட்டிகளுடன்
அவன் விரும்பும் அளவு தானியப் படையலையும் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மரக்கால் அளவு தானியப் படையலுடன்
ஒரு கலயம் அளவு எண்ணெயும் கொடுக்க வேண்டும்.
8 தலைவன் நுழைகையில் அவன் நுழைவாயிலின்
புகுமுக மண்டபம் வழியாய் நுழைந்து,
அதே வழியில் வெளிச் செல்ல வேண்டும்.
9 குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில்,
வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர்.
தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.
தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.
யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது.
ஆனால் ஒவ்வொருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.
10 தலைவன் மக்களுடன் சேர்ந்து,
அவர்கள் உள்நுழைகையில் அவனும் நுழைந்து,
அவர்கள் வெளிச் செல்கையில் அவனும் வெளிச் செல்வான்.
11 விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும்,
தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும்
ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும்
ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும்
ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.
12 தலைவன் ஆண்டவருக்கு எரிபலியோ அல்லது நல்லுறவுப் பலியோ
தன்னார்வப் பலியாகக்கொடுக்க வருகையில்,
கிழக்கு நோக்கிய வாயில் அவனுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கவேண்டும்.
அவன் ஓய்வு நாளில் செய்வதுபோலவே எரிபலியையோ,
நல்லுறவுப் பலியையோ செலுத்துவான்.
பின்னர் அவன் வெளியே செல்வான்.
அவன் சென்ற பிறகு வாயில் மூடப்படும்.

தலைவனும் நிலமும்[தொகு]


13 ஒவ்வொரு நாளும் ஒரு வயது மாசுமறுவற்ற ஆட்டுக்குட்டி ஒன்றை
எரிபலியாய் ஆண்டவருக்குச் செலுத்தல் வேண்டும்.
காலை தோறும் அதைச் செலுத்த வேண்டும்.
14 ஆட்டுக்குட்டியுடன் ஒவ்வொரு நாள் காலையிலும்
தானியப் படையல் செய்தல் வேண்டும்.
அது ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பகுதியாகவும்,
கூடவே மாவைப் பிசைய ஒரு கலயம் அளவு எண்ணெயில்
மூன்றிலொரு பகுதியுமாக இருக்கவேண்டும்.
ஆண்டவருக்குத் தானியப் படையல் செய்தல்
என்றென்றும் நடைபெற வேண்டிய முறைமையாகும்.
15 இவ்வாறு ஆட்டுக்குட்டி, தானியப்படையல்,
எண்ணெய் யாவும் எரிபலிக்கெனக் காலைதோறும் அளிக்கப்படல் வேண்டும்.
16 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
தலைவன் தன் உரிமைச்சொத்திலிருந்து ஒரு பகுதியைத்
தன் புதல்வரின் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால்,
அது அம்மகனுடைய வழிமரபினர்க்கும் உரிமையாகும்.
அது அவர்களுக்கு உரிமைச் சொத்தாக இருக்கும்.
17 ஆனால், தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத்
தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால்,
அது 'விடுதலை ஆண்டு' வரை அவ்வூழியனுக்குச் சொந்தமாகும்.
பின்னர் அது தலைவனுக்குச் சேரும்.
அவனுடைய உரிமைச் சொத்து அவன் புதல்வரையே சாரும். [*]
18 தலைவன் மக்களை அவர்களின் உடைமைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவோ
அவர்களின் உரிமைச் சொத்தில் எதையும் எடுத்துக் கொள்ளவோ கூடாது.
அவன் தன் உடைமையிலிருந்தே தன் புதல்வருக்கு
உரிமைச் சொத்தை வழங்கவேண்டும்.
அதன்மூலம் என் மக்களில் எவனும்
அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்படாமலிருப்பான்.


கோவில் சமையற் கூடங்கள்[தொகு]


19 பின்னர் அம்மனிதர் என்னை வாயில் பக்கத்திலிருந்த
நடைவழியாக வடக்கு நோக்கி இருக்கும்
குருக்களுக்குரிய தூய அறைகளுக்கு அழைத்துச் சென்றார்;
மேற்கு ஓரத்தில் இருக்கும் ஓர் இடத்தைக் காட்டினார்.
20 அவர் என்னிடம் சொன்னது:
குருக்கள் குற்ற நீக்கப்பலி, பாவம் போக்கும் தானியப் படையல்
ஆகியவற்றைச் சமைக்கும் இடம் இதுவே.
அவர்கள் அவற்றை வெளிமுற்றத்திற்குக் கொண்டுபோவதன் மூலம்
தூய்மை மக்களுக்குச் சென்று விடுவதைத் தவிர்க்க இவ்வாறு செய்வர்.
21 அவர் பின்னர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிவந்து
அதன் நான்கு மூலைகளுக்கும் இட்டுச் சென்றார்.
நான் ஒவ்வொரு மூலையிலும் ஒரு முற்றத்தைக் கண்டேன்.
22 வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும்
சுற்றிக் கட்டப்பட்ட முற்றங்கள் நாற்பது முழ நீளமும்
முப்பது முழ அகலமுமாய் இருந்தன.
நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவானவை.
23 நான்கு முற்றங்களின் உட்பகுதியிலும் சுற்றுக்கட்டு இருந்தது.
அதன்கீழ் எப்பக்கமும் அடுப்புகள் கட்டப்பட்டிருந்தன.
24 அவர் என்னிடம், 'கோவிலில் பணிபுரிவோர் மக்களின் பலிப்பொருள்களைச்
சமைக்கும் அடுப்புகள் இவையே' என்றார்.


குறிப்பு

[*] 46:17 = லேவி 25:10.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 47 முதல் 48 வரை