திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

விக்கிமூலம் இலிருந்து
ஆரோன். பளிங்குச் சிலை. கலைஞர்: நிக்கோலாஸ் கோர்தியே (1567-1612). காப்பிடம்: புனித மரியா பேராலயம், உரோமை.

எண்ணிக்கை[தொகு]

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25[தொகு]

பெகோரில் இஸ்ரயேல் மக்கள்[தொகு]


1 இஸ்ரயேல் சித்திமில் தங்கியிருந்தபோது மக்கள் மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடக்கத் தொடங்கினர்.
2 அவர்கள் தங்கள் தெய்வங்களின் பலிகளில் பங்கேற்க மக்களை அழைத்தனர்; மக்கள் உண்டு அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர்.
3 இங்ஙனம் இஸ்ரயேல் பாகால்பெகோரை அடிபணிந்தது; எனவே ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது.
4 ஆண்டவர் மோசேயிடம், "மக்களின் தலைவர்கள் அனைவரையும் கொண்டு வந்து பட்டப்பகலில் ஆண்டவர் முன் தூக்கிலிடு. அதனால் ஆண்டவர் கடுஞ்சினம் இஸ்ரயேலை விட்டு நீங்கும்" என்று கூறினார்.
5 மோசே இஸ்ரயேலின் தலைவர்களிடம், "உங்கள் ஒவ்வொருவரும் பாகால்பெகோரை அடிபணிந்த தம் ஆள்களைக் கொன்று விடுங்கள்" என்றார்.
6 மேலும் இஸ்ரயேல் மக்கள் சந்திப்புக் கூடார வாயிலில் அழுது கொண்டிருந்தபொழுது அவர்களில் ஒருவன் மிதியானியப் பெண்ணொருத்தியைத் தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான்; இது மோசேயின் பார்வையிலும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவர் பார்வையிலும் நடந்தது.
7 குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இதனைப் பார்த்ததும் அவன் மக்கள் கூட்டமைப்பை விட்டு எழுந்து தன் கையில் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.
8 அவன் அந்த இஸ்ரயேல் மனிதனின் பின்னே உள்ளறைக்குச் சென்று அந்த இஸ்ரயேல் மனிதனையும் அந்தப் பெண்ணையும் சேர்த்து அவள் வயிறு வழியே ஊடுருவக் குத்தினான். இதனால் இஸ்ரயேல் மக்களிடையே கொள்ளைநோய் அகன்றது.
9 எனினும் அக்கொள்ளை நோயால் இறந்தோர் இருபத்து நான்காயிரம் பேர்.
10 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
11 குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இஸ்ரயேல் மக்களிடமிருந்து என் சினத்தை அகற்றி விட்டான்; நான் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பின் வெறியை அவனும் காட்டிவிட்டான்; ஆகவே என் பேரார்வத்தால் இஸ்ரயேல் மக்களை நான் முற்றிலும் அழித்து விடவில்லை.


12 எனவே நீ சொல்ல வேண்டியது; "இதோ என் நல்லுறவு உடன்படிக்கையை அவனுக்குக் கொடுக்கிறேன்;
13 அது அவனுக்கும் அவனுக்குப் பின் அவன் வழித்தோன்றல்களுக்கும் நிலையான குருத்துவத்தின் உடன்படிக்கையாயிருக்கும்; அவன் தன் கடவுள் மீது பேரார்வம் கொண்டிருந்ததால் இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தான்."


14 மிதியானியப் பெண்ணுடன் சேர்த்துக் கொல்லப்பட்ட இஸ்ரயேலன் பெயர் சிம்ரி; இவன் சிமியோன் குலத்தைச் சார்ந்த மூதாதையர் வீட்டுத் தலைவனான சாலூவின் மகன்;
15 கொல்லப்பட்ட அந்த மிதியானியப் பெண்ணின் பெயர் கோசுபி; இவள் மிதியானில் மூதாதையர் வீடொன்றுக்குத் தலைவனான சூரின் மகள்.


16 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
17 "மிதியானியரைத் தாக்கி அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்;
18 ஏனெனில், அவர்களும் தங்கள் சூழ்ச்சிகளால் உங்களை ஏமாற்றினார்கள்; இதனால் பெகோரை முன்னிட்டு மிதியான் தலைவனின் மகளாகிய அவர்கள் சகோதரி கோசுபியின் காரியத்திலும் அவர்கள் உங்களைக் கெடுத்து விட்டார்கள். பெகோரை முன்னிட்டு ஏற்பட்ட கொள்ளை நோய்க் காலத்தில் அவள் கொல்லப்பட்டாள்.


அதிகாரம் 26[தொகு]

இரண்டாம் கணக்கெடுப்பு[தொகு]


1 அந்தக் கொள்ளை நோய்க்குப் பின்பு ஆண்டவர் மோசேயிடமும் குரு ஆரோன் மகன் எலயாசரிடமும்,
2 "இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதிலும் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள போருக்குச் செல்லத்தக்க இஸ்ரயேலின் ஆண் மக்கள் அனைவரையும் அவர்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் கணக்கெடுங்கள்" என்றார்.
3 மோசேயும் குரு எலயாசரும் எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபு சமவெளியில் அவர்களிடம்,
4 "ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இருபது வயதும் அதற்கு மேலுமுள்ளவர்களைக் கணக்கெடுங்கள்" என்று கூறினர். எகிப்து நாட்டிலிருந்து வெளியேறி வந்த இஸ்ரயேலின் ஆண் மக்கள் பின்வருமாறு:


5 ரூபன் இஸ்ரயேலின் தலைமகன். ரூபன் புதல்வர்: அனோக்கு, அனோக்கு வீட்டார்; பல்லூ, பல்லூ வீட்டார்;
6 எட்சரோன், எட்சரோன் வீட்டார், கர்மி, கர்மி வீட்டார்,
7 ரூபன் குடும்பங்கள் இவைகளே. இவற்றில் எண்ணப்பட்டோர் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பது பேர்.
8 பல்லூ புதல்வர் எலியாபு.
9 எலியாபு புதல்வர்: நெமுவேல், தாத்தான், அபிராம். கோராகின் கூட்டத்தார் ஆண்டவருடன் வாக்குவாதம் செய்தபோது மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் போராடுமாறு மக்கள் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்த தாத்தானும் அபிராமும் இவர்களே.
10 அப்போது நிலம் வாயைத் திறந்து கோராகுடன் சேர்ந்து அவர்களை விழுங்கியது. நெருப்பு இருநூற்றைம்பது பேரைக் கவ்வியது; அக்கூட்டம் மாண்டது; இவ்வாறு அவர்கள் ஓர் எச்சரிப்பாயினர்.
11 ஆனால் கோராகு புதல்வர் மடியவில்லை.


12 தங்கள் குடும்பங்கள் வாரியாகச் சிமியோன் புதல்வர்: நெமுவேல், நெமுவேல் வீட்டார்; யாமீன், யாமீன் வீட்டார்; யாக்கின், யாக்கின் வீட்டார்;
13 செராகு, செராகின் வீட்டார்; சாவூல், சாவூல் வீட்டார்;
14 சிமியோன் குடும்பங்கள் இவையே. இவர்கள் இருபத்து இரண்டாயிரத்து இருநூறு பேர்.


15 தங்கள் குடும்பங்கள் வாரியாக காத்துப் புதல்வர்: செப்போன், செப்போன் வீட்டார்; அதி, அதி வீட்டார்; சூனி, சூனி வீட்டார்;
16 ஒசுனீ, ஒசுனீ வீட்டார்; ஏரி, ஏரி வீட்டார்;
17 அரோது, அரோது வீட்டார்; அரேலி, அரேலி வீட்டார்.
18 அவர்கள் எண்ணிக்கைப்படி காத்துப் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் நாற்பதாயிரத்து ஐந்நூறு பேர்.


19 யூதாவின் புதல்வர் ஏர், ஓனான் என்போர்; ஏர், ஓனான் ஆகியோர் கானான் நாட்டில் இறந்தனர்.
20 தங்கள் குடும்பங்கள் வாரியாக யூதாவின் புதல்வர்: சேலா, சேலா வீட்டார்; பெரேட்சு, பெசேட்சு வீட்டார்; செராகு, செராகு வீட்டார்.
21 பெரேட்சின் புதல்வர்: எட்சரோன், எட்சரோன் வீட்டார்; ஆமூல், ஆமூல் வீட்டார்;
22 அவர்கள் எண்ணிக்கைப்படி யூதாவின் குடும்பங்கள் இவையே. அவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.


23 தங்கள் குடும்பங்கள் வாரியாக இசக்கார் புதல்வர்: தோலா, தோலா வீட்டார்; பூவா, பூவா வீட்டார்;
24 யாசூபு, யாசூபு வீட்டார்; சிம்ரோன், சிம்ரோன் வீட்டார்.
25 அவர்கள் எண்ணிக்கைப்படி இசக்கார் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர்.


26 தங்கள் குடும்பங்கள் வாரியாக செபுலோன் புதல்வர்: செரேது, செரேது வீட்டார்; ஏலோன், ஏலோன் வீட்டார்; யாகுலவேல், யாகுலவேல் வீட்டார்.
27 அவர்கள் எண்ணிக்கைப்படி செபுலோன் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு பேர்.


28 தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் மனாசேயும் எப்ராயிமும் ஆவர்.
29 மனாசே புதல்வர்: மாக்கிர், மாக்கிர் வீட்டார்; மாக்கிர் கிலயாதின் தந்தை; கிலயாது, கிலயாது வீட்டார்.
30 கிலயாது புதல்வர் இவர்களே: இயசேர், இயசேர் வீட்டார்; ஏலேக்கு, ஏலேக்கு வீட்டார்;
31 அசிரியேல், அசிரியேல் வீட்டார்; செக்கேம், செக்கேம் வீட்டார்;
32 செமிதா, செமிதா வீட்டார்; ஏபேர், ஏபேர் வீட்டார்.
33 ஏபேர் மகன் செலோபுகாதுக்குப் புதல்வர்கள் இல்லை; ஆனால் புதல்வியர் இருந்தனர்: செலோபுகாதின் புதல்வியர் பெயர்கள்; மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா.
34 மனாசேயின் குடும்பங்கள் இவைகளே. அவர்கள் தொகை ஐம்பத்தீராயிரத்து எழுநூறு.
35 தங்கள் குடும்பங்கள் வாரியாக எப்ராயிம் புதல்வர் இவர்களே: சுத்தேலாகு, சுத்தேலாகு வீட்டார்; பெக்கேர், பெக்கேர் வீட்டார்; தகான், தகான் வீட்டார்.
36 சுத்தேலாகின் புதல்வர், ஏரானும் ஏரான் வீட்டாருமே.


37 அவர்கள் எண்ணிக்கைப்படி எப்ராயிம் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறு பேர். ஆக மொத்தம் தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் இவர்களே.


38 தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர்: பேலா, பேலா வீட்டார்; அசுபேல், அசுபேல் வீட்டார்; அகிராம், அகிராம் வீட்டார்;
39 செபூபாம், செபூபாம் வீட்டார்; கூபாம், கூபாம் வீட்டார்;
40 பேலா புதல்வர் அருது, நாமான் என்போரே; அருது, அருது வீட்டார்; நாமான், நாமான் வீட்டார்.
41 தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர் இவர்களே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூறு.


42 தங்கள் குடும்பங்கள் வாரியாக தாண் புதல்வர் இவர்களே: சூகாம், சூகாம் வீட்டார். தங்கள் குடும்பங்கள் வாரியாக இவைகளே தாண்
குடும்பங்கள்.
43 அவர்கள் எண்ணிக்கைப்படி சூகாம் குடும்பத்தினர் அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர்.


44 தங்கள் குடும்பங்கள் வாரியாக ஆசேர் புதல்வர்: இம்னா, இம்னா வீட்டார்; இசுவி, இசுவி வீட்டார்; பெரியா, பெரியா வீட்டார்.
45 பெரியா புதல்வர்: எபேர், எபேர் வீட்டார்; மல்கியேல், மல்கியேல் வீட்டார்.
46 ஆசேர் புதல்வி பெயர் செராகு.
47 அவர்கள் எண்ணிக்கைப்படி ஆசேர் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.


48 தங்கள் குடும்பங்கள் வாரியாக நப்தலி புதல்வர்: யாகுட்சேல், யாகுட்சேல் வீட்டார்; கூனி, கூனி வீட்டார்;
49 எட்சேர், எட்சேர் வீட்டார், சில்லேம், சில்லேம் வீட்டார்.
50 அவர்கள் எண்ணிக்கைப்படி நப்தலிக் குடும்பங்கள் இவையே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து நானூறு.
51 ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது.


52 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
53 பெயர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு இவர்களுக்கு இந்த நாடு உரிமைச் சொத்தாகப் பங்கிடப்படும்.
54 குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் நீ அதனதன் உரிமைச் சொத்தைக் கொடுப்பாய். ஒவ்வொன்றுக்கும் அதன் தொகைக்கேற்ப உரிமைச் சொத்து வழங்கப்படும்.
55 ஆயினும், திருவுளச் சீட்டு முறையிலேயே நாடு பங்கிடப்படும். அவர்கள் தங்கள் மூதாதையர் குலப்பெயர்கள் வாரியாக உரிமைச் சொத்தைப் பெறுவர்.
56 பெரியவற்றுக்கும், சிறியவற்றுக்குமிடையே திருவுளச் சீட்டு முறைப்படி அதனதன் உரிமைச் சொத்து பங்கிடப்படும். [1]


57 தங்கள் குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்ட லேவியர் இவர்களே: கேர்சோன், கேர்சோன் வீட்டார்; கெகாது, கெகாது வீட்டார்; மெராரி, மெராரி வீட்டார்.
58 லேவி குடும்பங்களாவன: லிப்னி குடும்பம், எபிரோன் குடும்பம், மக்லி குடும்பம், மூசி குடும்பம், கோராகு குடும்பம். கெகாது அம்ராமின் தந்தை.
59 அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து. இவள் லேவி மகள்; லேவிக்கு எகிப்தில் பிறந்தவள். அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
60 ஆரோனுக்குப் பிறந்தவர்கள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோர். [2]
61 ஆனால் நாதாபும், அபிகூவும் ஆண்டவர் முன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்தபோது கொல்லப்பட்டனர். [3]
62 லேவியருள் ஒரு மாதமும் அதற்கு மேலும் வயதுடைய ஆண்களில் எண்ணப்பட்டோர் இருபத்து மூவாயிரம் பேர். இஸ்ரயேல் மக்களிடையே அவர்கள் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில் இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு எந்த உரிமைச் சொத்தும் தரப்படவில்லை.


63 மோசேயாலும் குரு எலயாசராலும் எண்ணப்பட்டோர் இவர்களே. அவர்கள் இஸ்ரயேல் மக்களை எரிகோவுக்கு எதிரே யோர்தானை அடுத்த மோவாபியச் சமவெளியில் எண்ணினார்கள்.
64 ஆனால், சீனாய்ப் பாலை நிலத்தில் எண்ணப்பட்டிருந்த இஸ்ரயேல் மக்களில், அதாவது மோசேயாலும் குரு ஆரோனாலும் எண்ணப்பட்டோருள் எவரும் இவர்களிடையே இல்லை.
65 ஏனெனில், "அவர்கள் பாலைநிலத்தில் மடிந்து விடுவர்" என்று ஆண்டவர் சொல்லியிருந்தார். எப்புன்னே புதல்வன் காலேபையும் நூன் புதல்வன் யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை. [4]


குறிப்புகள்

[1] 26:52-56 = எண் 34:13; யோசு 14:1-2.
[2] 26:60 = எண் 3:2.
[3] 26:61 = லேவி 10:1-2; எண் 3:4.
[4] 26:65 = எண் 14:26-35.


(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 27 முதல் 28 வரை