திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோசுவா. செதுக்கப்பட்ட காலம்: 1493. காப்பிடம்: ப்ளாவ்பாய்ரன் துறவியர் இல்லம், செருமனி.

யோசுவா[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]

மனாசேக்குரிய மேற்குப்பகுதி[தொகு]


1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்: மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.
2 மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள். இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்.


3 மனாசேயின் மகனான மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் மகனாகிய ஏபேரின் புதல்வன் செலோபுகாதுக்கு ஆண்மக்கள் இல்லை; பெண்மக்கள் மட்டும் இருந்தனர். அவனுடைய பெண்மக்களின் பெயர்கள்: மக்லா, நோவா, ஒகுலா, மில்கா, தீரட்சா.
4 அவர்கள் குரு எலயாசரையும், நூனின் மகன் யோசுவாவையும், தலைவர்களையும் அணுகி, "எங்கள் சகோதரர்கள் நடுவில் எங்களுக்கு உடைமைகள் அளிக்க ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டார்" என்றனர். ஆண்டவரின் கட்டளைப்படி அவர்களுக்கு அவர்களுடைய தந்தையின் சகோதரர்களின் நடுவில் உரிமைச்சொத்து அளித்தார். [1]
5 யோர்தானுக்கு அப்பால் உள்ள கிலயாது, பாசான் நிலம் தவிர மனாசேக்குப் பத்துப் பங்குகள் விழுந்தன.
6 ஏனெனில் மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுடன் சொத்துரிமை பெற்றனர். கிலயாது நாடு மனாசேயின் ஏனைய புதல்வருக்குக் கிடைத்தது.


7 மனாசேயின் எல்லை ஆசேரிலிருந்து செக்கேமின் எதிரில் உள்ள மிக்மத்தாத்துவரை செல்கின்றது. அவ்வெல்லை தென் பக்கமாக ஏன்தப்புவாகு பகுதியில் வாழ்கின்ற மக்களையும் உள்ளடக்கியது.
8 தப்புவாகு நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமாயிற்று. மனாசேயின் எல்லையில் இருந்த தப்புவாகு நகர் எப்ராயிமின் மக்களுக்குச் சொந்தமானது.
9 இவ்வெல்லை கானா நதியை நோக்கி இறங்குகின்றது. நதிக்குத் தென்புறமாக உள்ள இந்நகர்கள் எப்ராயிமுக்குச் சொந்தமானவை. இவை மனாசேயின் நகர்களுக்கு நடுவில் உள்ளன. மனாசேயின் எல்லை ஓடைக்கு வடக்கில் உள்ளது. அது கடலில் முடிவடைகிறது.
10 எப்ராயிமின் பகுதிக்குத் தெற்காகவும், மனாசேயின் பகுதிக்கு வடக்காகவும் கடல் அதன் எல்லையாக இருந்தது. அவை வடக்கில் ஆசேருக்கு உரிய எல்லையையும், கிழக்கில் இசக்காருக்கு உரிய எல்லையையும் தொட்டன.
11 இசக்கார், ஆசேர் எல்லைகளுக்குள் பெத்சானும் அதன் ஊர்களும், இப்லயாமும் அதன் ஊர்களும், தோரின் குடிமக்களும் அதன் ஊர்களும், ஏன்தோரின் குடிமக்களும், அதன் ஊர்களும், தானாக்கின் குடிமக்களும் அதன் ஊர்களும், மெகிதோவின் குடிமக்களும் அதன் ஊர்களும் மனாசேக்கு உரிமையாக்கப்பட்டன.
12 மனாசேயின் மக்களால் இந்நகர்களைக் கைப்பற்ற முடியவில்லை. கானானியர் அப்பகுதியிலேயே உறுதியுடன் தங்கிவிட்டனர்.
13 இஸ்ரயேலரின் புதல்வர் வலிமை பெற்றவுடன் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அடிமை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். [2]

எப்ராயிம், மனாசே அதிக நிலம் கேட்டல்[தொகு]


14 யோசேப்பின் புதல்வர் யோசுவாவிடம், "ஏன் எங்களுக்கு உரிமைச் சொத்தாக ஒரே ஒரு பங்கு அளித்தீர்? எங்கள் மக்கள் பெருந்தொகையினர். ஆண்டவர் எங்களுக்கு இத்துணை ஆசி வழங்கியுள்ளார்!" என்றனர்.
15 யோசுவா அவர்களிடம், "நீங்கள் திரளான மக்களாக இருப்பதால் பெரிசியர், இரபாயிம் ஆகியோரின் காட்டு நிலத்திற்குப் போய் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். எப்ராயிம் மலைப்பகுதியோ உங்களுக்கு மிகவும் குறுகலானது" என்றார்.
16 யோசேப்பின் மக்கள், "மலைப்பகுதி எங்களுக்குப் போதாது. மேலும் சமவெளியில் இருக்கும் பெத்சானிலும் அதன் ஊர்களிலும், மற்றும் இஸ்ரியேல் சமவெளியிலும் வாழும் கானானியர் அனைவரிடமும் இரும்புத் தேர்கள் இருக்கின்றன" என்றனர்.
17 யோசுவா யோசேப்பின் வீட்டாரான எப்ராயிமிடமும் மனாசேயிடமும், "நீங்கள் திரளான மக்கள். வலிமை மிக்கவர்கள். உங்களுக்கு ஒரு பங்கு மட்டும் இல்லை.
18 மலைப்பகுதியும் உங்களுடையதே. அது காட்டுப் பகுதியாக இருப்பதால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். அதன் எல்லை அனைத்தும் உங்களுக்குச் சொந்தம். ஏனெனில் கானானியருக்கு இரும்புத் தேர்கள் இருந்தாலும், அவர்கள் வலிமையுள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களை விரட்டுவீர்கள்" என்றார்.

குறிப்புகள்

[1] 17:4 = எண் 27:1-7.
[2] 17:12-13 = நீத 1:27-28.

அதிகாரம் 18[தொகு]

எஞ்சிய நிலத்தைப் பங்கிடல்[தொகு]


1 இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதும் சீலோவில் ஒன்று கூடியது. அங்குச் சந்திப்பு கூடாரத்தை அமைத்தனர். ஏற்கெனவே அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியிருந்தனர்.


2 இஸ்ரயேல் மக்களில் ஏழு குலங்களுக்கு அவர்களுடைய உரிமைச் சொத்துப் பிரித்துத் தரப்படவில்லை.
3 இஸ்ரயேல் மக்களிடம் யோசுவா, "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு காலம் சோம்பேறிகளாக இருப்பீர்கள்?
4 குலத்திற்கு மும்மூன்று பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நான் அனுப்ப, அவர்கள் புறப்பட்டு, நாடெங்கும் சுற்றிச் சென்று அவரவர் உரிமைச்சொத்து இன்னதென்று வரைந்து, என்னிடம் கொண்டு வருவார்கள்.
5 அவர்கள் நாட்டை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர். யூதா தெற்கில் தங்கள் எல்லையில் தங்கியிருப்பர். யோசேப்பின் வீட்டார் வடக்கில் அதன் எல்லையில் தொடர்ந்து தங்கியிருப்பர்.
6 நீங்கள் நிலத்தை ஏழு பிரிவுகளாக வரைந்து என்னிடம் கொண்டு வருவீர்கள். நான் இங்கு உங்களுக்குக் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் திருவுளச்சீட்டுப் போடுவேன்.
7 லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில் ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து" என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.


8 அவ்வாறே அம்மனிதர் புறப்பட்டுச் சென்றனர். நிலத்தை வரையுமாறு செல்பவர்களுக்கு யோசுவா கட்டளையிட்டுக் கூறியது: "சென்று, நிலத்தைச் சுற்றிப்பார்த்து வரைந்து கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு ஆண்டவர் முன்னிலையில் சீலோவில் திருவுளச்சீட்டுப் போடுவேன்".
9 அம்மனிதர் சென்று நிலத்தைச் சுற்றிப் பார்த்தனர். நகர்களின் பட்டியலை ஏழு தொகுதிகளாகப் புத்தகத்தில் எழுதினர். சீலோவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர்.
10 யோசுவா சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் அவர்களுக்குத் திருவுளச்சீட்டுப் போட்டார். அங்கே யோசுவா இஸ்ரயேல் மக்களுக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நிலத்தைப் பங்கிட்டார்.

பென்யமினுக்கு அளிக்கப்பட்ட பகுதி[தொகு]


11 முதல் சீட்டு பென்யமின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது எல்லை யூதா மக்களுக்கும் யோசேப்பின் மக்களுக்கும் இடையில் விழுந்தது.
12 அவர்களது எல்லை வடக்குப் பகுதியில் யோர்தானிலிருந்து தொடங்கிப் பின்னர் எரிகோவில் வட சரிவில் ஏறி, பிறகு மேற்கில் மலைப்பக்கம் சென்று பெத்சாவேன் பாலைநிலத்தில் முடிவடைகிறது.
13 மீண்டும் அவ்வெல்லை அங்கிருந்து தெற்குப்பக்கமாகப் பெத்தேல் என்னும் லூசின் சரிவை நோக்கிச் சென்று அதனைக் கடக்கிறது. பின்னர் அவ்வெல்லை கீழ் பெத்கோரோனுக்குத் தெற்கே மலைமீது உள்ள அத்தராத்து அதாரை நோக்கிச் செல்கிறது.
14 பின்பு அவ்வெல்லை மேற்கு முகமாகத் திரும்பி அங்குள்ள மலைக்குத் தெற்காக பெத்கோரோனுக்கு எதிராக யூதா மக்களுக்குரிய கிரியத்துஎயாரிம் எனப்படும் கிரியத்துபாகாலில் முடிவடைகிறது. இதுவே மேற்கு எல்லை.
15 அதன் தென் எல்லை கிரியத்துஎயாரிமின் எல்லைப்புறத்தில் தொடங்கி மேற்காகச் சென்று, பிறகு நெப்தோவாகு நீர்நிலைகள்வரை போகிறது.
16 மேலும் அவ்வெல்லை இரபாயிம் பள்ளத்தாக்கின் வடகோடியில் உள்ள இன்னோம் மகனின் பள்ளத்தாக்கை நோக்கி நிற்கும் மலைவரை செல்கிறது. பின்னர் அது எபூசியரின் மலைச்சரிவிற்குத் தெற்கேயுள்ள இன்னோம் பள்ளத்தாக்கை நோக்கி ஏன்ரோகேல் பக்கமாக இறங்குகிறது.
17 பிறகு அது வட பக்கம் திரும்பி அதும்மிம் மேட்டுக்கு எதிரில் உள்ள கெலிலோத்துப் பக்கம் திரும்பி ரூபனின் மகன் போகனின் கல் பக்கம் செல்கிறது.
18 பிறகு அது வடக்கே மலைச்சரிவில் அராபாவின் எதிராகச் சென்று அராபாவில் இறங்குகிறது.
19 பிறகு அது பெத்தொகிலாவின் வடசரிவைக் கடந்து உப்புக் கடலின் வடக்கு வளைவில் யோர்தானின் தென்பகுதியில் முடிவடைகிறது. இதுவே தென் எல்லை.
20 கிழக்கே யோர்தான் நதி எல்லையாக அமைந்துள்ளது. இது பென்யமின் மக்களின் குடும்பங்களுக்கு கிடைத்த, சுற்றிலும் எல்லையிடப்பட்ட உரிமைச் சொத்து.


21 பென்யமின் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி உடைமையான நகர்கள்: எரிகோ, பெத்தொகிலா, ஏமக்கசீசு,
22 பெத்தராபா, செமாரயிம், பெத்தேல்,
23 அவ்விம், பாரா, ஒபிரா,
24 கெபரம்மோனி, ஒப்னி, கேபா ஆகிய பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
25 கிபயோன், இராமா, பெயரோத்து,
26 மிஸ்பே, கெப்பிரா, மோசா,
27 இரக்கேம், இரிப்பயேல், தராலா,
28 சேலா, எலேபு, எருசலேம் என்னும் எபூசி, கிபயத்து, கிரியத்து ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. இது பென்யமின் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின்படிக் கிடைத்த உடைமை.

(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை