திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்." (கலாத்தியர் 6:2)

கலாத்தியர் (Galatians)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

4. அறிவுரைப் பகுதி[தொகு]

கிறிஸ்தவரின் உரிமை வாழ்வு[தொகு]


1 கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து
நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள்.
மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.


2 பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்:
நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை.
3 விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும்
திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை
நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன்.
4 திருச்சட்டம் சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முயலும் நீங்கள்
கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய்விட்டீர்கள்; அருளை இழந்து விட்டீர்கள்.
5 ஆனால் நாம் தூய ஆவியின் துணையால்
நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம்
என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம்.
6 கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர்,
விருத்தசேதனம் செய்து கொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும்,
அவர்களுக்கு எப்பயனும் இல்லை.
அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.


7 நீங்கள் நன்றாகத்தானே முன்னேறி வந்தீர்கள்!
அப்படியிருக்க உண்மைக்குக் கீழ்ப்படியாதபடி இப்போது உங்களைத் தடுத்தவர் யார்?
8 இவ்வாறு செய்யத் தூண்டியவர் உங்களை அழைத்த இறைவன் அல்ல.
9 சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கிறது. [1]
10 மாறுபட்ட கொள்கை எதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்னும்
உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எனக்குத் தந்துள்ளார்.
ஆனால் உங்கள் உள்ளத்தைக் குழப்புவோர் எவராய் இருந்தாலும்
அவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள்.


11 சகோதர சகோதரிகளே,
விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என அறிவிப்பதாய் இருந்தால்
நான் ஏன் இன்னும் துன்புறுத்தப்பட வேண்டும்?
நான் அவ்வாறு அறிவித்தால் சிலுவை ஒரு தடையாக இருக்க இடமில்லையே!
12 உங்கள் உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள்
தங்களை அலிகளாகவே ஆக்கிக் கொள்ளட்டும்.


13 அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்;
அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். [2]


14 "உன்மீது நீ அன்புகூர்வது போல
உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக"


என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. [3]


15 ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால்
ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!

தூய ஆவியின் கனியும் ஊனியல்பின் செயல்களும்[தொகு]


16 எனவே நான் சொல்கிறேன்:
தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்;
அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.
17 ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது.
தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது.
இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால்
நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை. [4]
18 நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால்
திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
19 ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும்.
அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி,
20 சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை,
சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம்,
கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு,
21 அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும்.
இத்தகையவற்றில் ஈடுபடுவோர்
இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று
நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.


22 ஆனால் தூய ஆவியின் கனியோ,
அன்பு, மகிழ்ச்சி, அமைதி,
பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,
23 கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்.
இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை.
24 கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை
அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள். [5]
25 தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம்.
எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.
26 வீண் பெருமையைத் தேடாமலும்,
ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும்,
ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக!


குறிப்புகள்

[1] 5:9 = 1 கொரி 5:6.
[2] 5:13 = உரோ 6:15; 1 பேது 2:16.
[3] 5:14 = லேவி 19:18.
[4] 5:17 = உரோ 7:15-23; யாக் 4:1.
[5] 5:24 = கொலோ 3:5.


அதிகாரம் 6[தொகு]

அன்புப் பணிக்குச் சில நெறிமுறைகள்[தொகு]


1 சகோதர சகோதரிகளே,
ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால்
தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்;
அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
2 ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்;
இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.
3 பெருமைக்குரியோராய் இல்லாதிருந்தும்,
தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மையே ஏய்த்துக் கொள்ளுகின்றனர்.
4 ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து பார்க்கட்டும்.
அப்பொழுது தம்மைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல்,
தாம் செய்த செயல்களைப்பற்றி மட்டும் பெருமை பாராட்ட முடியும்.
5 ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக் கொள்ளட்டும்.


6 இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர்
அதைக் கற்றுக்கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்கவேண்டும்.


7 ஏமாந்து போகவேண்டாம்; கடவுளைக் கேலிசெய்ய முடியும் என நினைக்காதீர்கள்.
ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்.
8 தம் ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர்
அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வர்.
ஆவிக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர்
அந்த ஆவி அருளும் நிலைவாழ்வை அறுவடை செய்வர்.
9 நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக!
நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை செய்வோம்.
10 ஆகையால் இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும்,
சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கும்
நன்மை செய்ய முன்வருவோம். [1]

5. முடிவுரை[தொகு]

எச்சரிக்கையும் வாழ்த்துரையும்[தொகு]


11 இப்பொழுது என் கைப்பட நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன் பாருங்கள்!
12 உலகின் முன் நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்களே
விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
கிறிஸ்துவின் சிலுவையை முன்னிட்டுத்
தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
13 விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை.
ஆனால் உங்கள் உடலில் செய்யப்படும் அறுவையை முன்னிட்டுத்
தாங்கள் பெருமை பாராட்டிக் கொள்வதற்காகவே
நீங்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள்.
14 நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி,
வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன்.
அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில்,
உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது.
உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
15 விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே.
புதிய படைப்பாவதே இன்றியமையாதது. [2]
16 இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும்
கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும்
அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!


17 இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம்.
ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள்
நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.


18 சகோதர சகோதரிகளே,
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.


குறிப்புகள்

[1] 6:10 = 1 தெச 5:15.
[2] 6:15 = 1 கொரி 7:19.


(கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): எபேசியருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை