பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அகநானூறு - களிற்றியானை நிரை


விளக்கம்: 'சுரம்பல கடந்தோர்க்கு இரங்குவோம்’ என்னார், இவ்வூர் நிரையப் பெண்டிர் கெளவை மேவலராகி இன்னா கூறுவர். புரைய அல்ல என் மகட்கெனப் பரைஇ, நம்முணர்ந்து ஆறிய கொள்கை அன்னை முன்னர், யாம் இதற்கண் படுதல் என்னவோ?’ எனத், தோழி உடன்போக்கினைத் தடுக்க முயன்றதாகவும் கொள்ளலாம்; கெளவை - பழிச் சொல்.

96. பலர் வாய்ப்பட்ட அலர்!

பாடியவர்: மருதம் பாடிய இளங்கடுங்கோ. திணை: மருதம். துறை: தோழி வாயின்மறுத்தது. சிறப்பு: அஃதை தந்தையராகிய சோழர் பருவூர்ப் பறந்தலைப் போர்.

(பரத்தையுடன் கூடியபின், வீடு நாடிவரும் தலைவன், தோழியின் மூலம் கூட்டத்தை நாடுகின்றான். அவளோ, அவன் செயலால் ஏற்பட்ட ஊரலரை உரைத்து, வாயில் மறுத்து நிற்கின்றாள்.) --

          நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்,
          பூட்டுஅறு வில்லிற் கூட்டுமுதல் தெறிக்கும்
          பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
          அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
          அருவி ஆம்பல் அகல்அடை துடக்கி, 5

          அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
          விசைவாங்க தோலின், வீங்குபு ஞெகிழும்
          கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!

          'ஒண்தொடி ஆயத் துள்ளும்நீ நயந்து
          கொண்டனை' என்ப‘ஓர் குறுமகள்'; அதுவே.- 10

          செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
          அம்கலுழ் மாமை, அஃதை தந்தை,
          அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்,
          வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
          இருபெரு வேந்தரும் பொருதுகளத்து ஒழிய, 15

          ஒளிறுவாள் நல்அமர்க் கடந்த ஞான்றை,
          களிறுவர் கம்பலை போல,
          அலர்ஆ கின்றது, பலர்வாய்ப் பட்டே!

கள் உண்ணும் மொந்தைகளைப் பொய்கைகளிலே கழுவுதலால், அந்நீருட் கிடக்கும் இறால் மீன்கள் செருக்குடைய வாகிப், பூட்டிய நாண் அறுபடும் வில் தெறிப்பது போலத் தெறித்துக், கரைகளிலேயுள்ள நெற்கூடுகளின் அடிப்புறங்களிலே வீழ்ந்து கிடக்கும், மருதநிலத்துப் பொய்கையின்