பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அகநானூறு - நித்திலக் கோவை


செய்குறி ஆழி வைகல்தோறும் எண்ணி' என்றது,தன் கணவன் பிரிந்த நாளினை, நாளுக்கு ஒரு பொட்டாகச் சுவரி லிட்டு, அதனை எண்ணி எண்ணி ஏக்கமுறும் தன்மையினைக் கூறியதாம். 'நாளொற்றித் தேய்ந்த விரல்’ என்ற குறளின் கருத்தையும் நினைக்கவும்.

'உள்ளுதொறுபடுஉம் பல்லி, புள்ளுத்தொழு துறைவிசெவி முதலானே... அறிவுறுங் கொல்லோ' என்றதனைக் கவனிக்க, அந்நாளிலும், புள்நிமித்தம் நோக்கலும், பல்லி சொல்லுதலை நன்மை என்று கருதுதலும் ஆகிய பழக்கங்கள் இருந்தன என, இவை காட்டும்.

352. வதுவை நாளினும் இனியன்!

பாடியவர்: அஞ்சியத்தை மகள் நாகையார், அஞ்சிலாந்தை மகள் நாகையார் எனவும், அஞ்சலாந்தை மகனார் எனவும் பாடம். திணை: குறிஞ்சி. துறை: வரைந்து எய்திய பின்றை, மணமனைக்கட் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லிய தூஉம் ஆம். சிறப்பு: அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழினைப் பாடுகின்ற பாணரின் தன்மை.

(களவிலே முதற்கண் உறவாடி வந்த காதலன். தன்னை வரைந்து வந்தானாகத்தன் பெற்றோரும் சுற்றமும்தன்னை அவனுக்குத் தருதற்கு இசைந்ததனால், மணவினையும் நிகழப் போகும் சமயத்தில், அந்த மகிழ்விலே திளைத்துக் கொண்டிருக்கின்றாள் தலைவி. அப்போது, அம் மனைக்கண் வந்த தன் தோழியிடம் அவள் தனக்குக் களவுக் காலத்தே உதவிய தகைமையினை நினைந்தாளாக, இங்ஙனம் கூறுகின்றனள் தலைவி. அல்லது-

வரைவுக்குத் தமரும் உடன்பட்ட செய்தியைக் தன்னிடத்தே வந்து கூறிய தன் தோழிக்குத் தலைவி கூறியதாகவும் கொள்ளலாம்)

          'முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
          பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
          பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின்
          ஆடுமயில் முன்னது ஆகக் கோடியர்
          விழவுகொள் மூதூர் விறலி பின்றை 5

          முழவன் போல அகப்படத் தழீஇ
          இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
          குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்