பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 203


நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
"எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் 20

தணிமருந்து அறிவல்' என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே - கனல்சின
மையல் வேழம் மெய்யுளம் போக
ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பொடு
காட்டுமான் அடிவழி ஒற்றி 25

வேட்டம் செல்லுமோ நும்மிறை? எனவே.


தோழி! வாழ்வாயாக!

உயரமான பெரிய மலையிடத்தே, ஒளி பொருந்திய கொத்துக்களில் நறுமலர்களைக் கொண்ட வேங்கை மரத்தின் கவர்த்த கிளைகளிடையே, உயரத்திற் கட்டிய பரணிடத்தே இருந்து, நறுமணம் கொண்ட சந்தன மரங்களை வெட்டியழித்து, உழுது வித்திய தினைப்பயிரின் துய்யையுடைய சிறு கதிர்களைக் கவர்ந்து போதலையுடைய, மூங்கிலடர்ந்த பெரிய மலைச் சாரலிடத்துக் குருவியினங்களை, நம் மலையிடத்து மூங்கிலை அறுத்து இயற்றிய வெவ்விய ஒலியினை எழுப்பும் தட்டையினாலே ஒட்டியவராகப், பொன்போன்ற வேங்கையின் நறுந்தாதினை ஊதும் தும்பியின் இனிய இசையினைச் செவியுற்றவராக இருந்தனம். அவ்விடத்தே, 'கருமையான நெடிய கூந்தலையுடைய மடப்பம் வாய்ந்த பெண்களே! விரைந்து செல்லும் எம் அம்பு பாய்ந்ததாகப் புண்மிகுந்ததாகிய துன்பத்துடனே, இவ் வழிவந்த உயரிய கொம்புகளையுடைய களிறானது, நும்முடைய புனத்தினிடத்தே போகியிருத்தல் உளதாமோ?' என்று, சினத்தைக் கொண்ட நாய்கள் கறுவுகொண்டவாய்ப் பக்கலிலே ஆடிக்கொண்டிருக்க, நம்பாற் சொல்லிச் சென்றனன் வலிய வில்லையுடைய காளை ஒருவன்.

அவனுடைய சாந்தம் பொருந்திய மார்பினையும், தகைமை யினையும் மிகவும் விரும்பியவராக, இங்கே நாம் வருந்துகின்ற வருத்தத்தினை, நம் அன்னை உணராதவள் ஆயினாள்.

நமக்கு நன்மை கருதுவதாகிய உள்ளத்துடனே, உண்மையறியாது மயங்கியவளாக, வெறியாடல் வேண்டுமென, முதுமை வாய்ந்த வேலனையும் அழைத்து வந்தாள்.

அவன், “எம் இறையாகிய முருகப் பெருமான் வருத்துதலி னாலே இந்த நோய் வந்துற்றது. இதனைத் தணிக்கும் மருந்தினை அறிவேன்" என்று சொல்வான் ஆயின், "நும் இறையாகிய முருகப் பெருமான் சினமும் மதமும் கொண்ட வேழத்தின்