பக்கம்:அஞ்சலி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 லா. ச. ராமாமிருதம்

ஜமதக்னி மெதுவாய்த் தலை நிமிர்ந்தான். மாஞ்சியின் கண்கள் மாடிக் கூரையிலிருந்து இறங்கி அவன்மேல் பதிந்திருந்தன. அவைகளில் கண்ணிர் வழிந்தோடி இருந்தது.

“மாஞ்சி.”

“என் குழந்தை எப்படித் துடிச்சானோ? அந்தக் கடைசித் தருணத்தில் என்ன நினைச்சானோ? ஐயோ! இதையெல்லாம் நினைக்க எனக்கு இன்னும் நினைவு இருக்கே! எனக்குப் பைத்தியம் ஏன் பிடிக்கமாட்டேன் என்கிறது?”

அவள் குரல் அமைதியாய்த் தானிருந்தது. அதுவே தான் அதன் பயங்கரமாயிருந்தது.

அவன் கையைப் பற்றி இழுத்துத் தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள். நெருப்பாய்க் கொதித்தது.

“இந்த வயிறு இதுவரை அஞ்சு தடவை திறந்தது. திறந்ததுதான் மிச்சம். என் குழந்தைகளால் நான் என்ன சுகத்தைக் கண்டேன்? நமக்கே ஏதோ சாபும் தொடர்கிறதா?”

அவள் தன் முகத்தில் அறைந்தாற்போல், கன்னத்தைத் தொட்டுக்கொண்டான். அவன் இப்போது பேசுகையில் அவளோடு பேசவில்லை. தனக்குள் உரக்கச் சிந்தனையில் ஆழ்ந்தாற் போலானான்.

“சின்னப் பொழுதில், நானும் என் வயதுப் பையன்களும் என்னவோ கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். பள்ளந்தோண்டிப் பச்சை வேர்க்கடலையை வைக்கோல் போட்டு சுட்டுக்கொண்டிருந்தோம், அப்போது சப்பாத்திக் காட்டிலிருந்து ‘புஸ்’ ஸென்று சப்தம் கிளம்பிற்று. எல்லோரும் பயந்து ஓடிவிட்டார்கள். நான் மாத்திரம் நின்றேன். என்னெதிரே, நல்ல பாம்பு படமெடுத்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/106&oldid=1024572" இலிருந்து மீள்விக்கப்பட்டது